சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்

கோடாமை சான்றோர்க் கணி.

விளக்கம் : எந்தப் பக்கமும் சாயாமல் நடுவில் நிற்கும் தராசின் முள் போல், நடுவுநிலை தவறாமல் இருப்பதுதான் சான்றோருக்கு அழகு.

அதிகாரம் 12 / நடுவுநிலைமை / திருக்குறள் எண் 118

சரிங்க இந்த மய்யம் அப்படின்னா என்ன ? நடிகர் கமல் ஹாசன் திடீர்னு பிப்ரவரி மாசம் 21 ஆம் தேதி 2௦18 இல் மக்கள் நீதி மய்யம் என்கிற பேரில் தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் அரசியல் கட்சி ஆரம்பிச்சு நடத்திகிட்டு இருக்கார். அவர் இந்தப் பெயரில் கட்சி தொடங்கியபோது பலர் அது என்ன மய்யம் என்று கேட்டார்கள், அப்போது அவர் விளக்கம் அளித்தார் நாங்கள் முதலாளித்துவம் போற்றும் வலதுசாரியாகவும் அல்லது தொழிலாளர் பொதுவுடைமை போற்றும் இடதுசாரியாகவும் இல்லாமல் இரண்டுக்கும் இடையில் மய்யமாக நிற்போம் என்றபோது பலர் சிரித்தார்கள் பகடி செய்தார்கள். அதெப்படி இருக்க முடியும் ?

மய்யத்தில் நின்றால் எப்படி சாலையில் இடது மற்றும் வலது ஓரமாக நில்லாமல் நடுவில் நிற்போம் என்பது சொல்கிறார் அப்படி நடுவில் நின்றால் பாதிப்பு ஏற்படாதா அவ்வாறு எப்படி நிற்க முடியும் யாராவது ஒருவர் பக்கம் தானே பேசமுடியும் அவர்களுக்காக தானே வக்காலத்து வாங்க முடியும் இதெல்லாம் வேலைக்கு ஆகாது என்றனர்.

அப்படிச் சொல்லும் பெரும் மேதாவிகளுக்கு சற்றே விளக்குவோம் மீண்டும்.

ஒரு நாட்டில் வளர்ச்சி என்பது எல்லா பக்கமும் இருக்கவேண்டும். விவசாயம், விவசாயம் சார்ந்த சாகுபடிகள் உட்பட வேளாண் பொருட்கள், தொழிற்சாலைகள், கட்டுமானத்துறை, ரியல் எஸ்டேட், கல்வி, பெண்களுக்கான திட்டங்கள், மருத்துவம், சுற்றுலா, வேலைவாய்ப்புகள், சுயதொழில், தொழிலாளர் நலன் போன்றவைகள் என அனைத்தும் சற்றேரக்குறைய வளர்ச்சி பெறவேண்டும். அப்படி வளர்ச்சியடைந்தவைகள் ஸ்திரமாக தொடர்ந்து நடந்து வரவேண்டும். இதில் எங்காவது தொய்வு அல்லது சிக்கல் ஏற்பட்டால் அதில் சம்பந்தப்பட்ட அரசுத்துறை மற்றும் தகுந்த உயரதிகாரிகள் தலையிட்டு அதனை சீர்செய்து தரவேண்டும். இவை மட்டுமல்லாது அயல்நாட்டு முதலீட்டாளர்கள் இங்கே தொழில் தொடங்க வழிவகைகள் செய்து தரவேண்டும்.

இவ்வளவு பெரிய பட்டியல் கொடுத்தா நாங்க என்ன செய்ய ? மய்யம் என்றால் என்ன அதற்கு தெளிவான விளக்கம் கொடுங்க சார் என்பது எங்களுக்கு புரிகிறது. கொஞ்சம் பொறுங்கள் அங்கே தான் வருகிறோம்.

ஒரு மாநிலத்தில் அரசு ஓர் நலத்திட்டத்தை மக்களுக்கு அளிக்கும் பொருட்டு அதன் இறுதி பயனாளிகள் மற்றும் பயன்கள் முழுமையாக போய்ச் சேர்வது முக்கியம். எனினும் அத்திட்டம் மூலம் எவருக்கும் எந்த பாதிப்புகளும் உண்டாகாமல் இருப்பது அதி முக்கியம் ஆகும். உதாரணத்திற்கு ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றுமொரு மாவட்டத்திற்கு அல்லது அண்டை மாநிலங்களை இணைக்கும் புறவழிச்சாலை அமைக்கப்பட வேண்டும் எனும் திட்டம் செயல்படுத்த நிலங்கள் தேவைப்படும். அதற்கு அரசு நிலங்கள் இருப்பின் எதுவும் பிரச்சினை கிடையாது அப்படி இல்லாமல் பொதுமக்களின் நிலங்கள் இடையில் வருகிறது என்றால் அவை சாகுபடி செய்ய இயலாத தரிசு நிலங்கள் வரட்சியான நிலங்கள் என்றால் யாருக்கும் ஒரு பாதகமுமில்லை. அப்படி பொதுமக்களின் நிலங்கள் கையகப்படுத்தப்படவேண்டும் என்றால் அரசின் நிர்ணயிக்கப்பட்ட நிலம் வழிகாட்டுதல் மதிப்பின்படி தொகையும் மேலும் சந்தைமதிப்பின்படி ஓர் தொகையும் வழங்கப்படும்.

இவையெல்லாம் எந்த சிக்கலும் இல்லாமல் நடக்கக்கூடிய திட்டங்கள் ஆனால் இதே கையகப்படுத்தப்படவேண்டிய பொதுமக்களின் நிலங்கள் விவசாய விளைநிலங்கள் எனில் அங்கு தான் பெரும் சிக்கல். இதில் நிறைவேற்றபடவேண்டியது நாட்டிற்கு பொருளாதார நிதி மற்றும் அண்டை மாநிலங்களின் நட்புறவும் வணிகரீதியாக போக்குவரத்துகளும் அதனால் அரசுக்கு கிடைக்கபெறும் வருவாயும் உள்ளடக்கியது. அதே சமையம் விளைநிலங்களை கையகப்படுத்தினால் உண்டாகும் விளைவுகள் மிகப்பெரிது. சாகுபடி செய்யும் மண் மலடாகும் உபயோகமற்று போகும். அந்தந்த பகுதிகளில் உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரம் மொத்தமாக நிர்மூலமாகும். தொழிற்புரட்சியும் அல்லது விரைவுவழிச் சாலை என்பதும் முக்கியமாக தோன்றினாலும் ஒரு நாட்டின் முதுகெலும்பு விவசாயம் மட்டுமே என சொல்வார்கள் அது உண்மையும் கூட. ஏன் என்றால் தனி ஒருவனுக்கு உணவில்லை என்றால் ஜகத்தினை அழிப்போம் என்ற மகாகவி சுப்ரமணிய பாரதியின் கனல் உமிழும் கவிதை நினைவிற்கு வரும். வேளாண்மையை முற்றிலுமாக அழித்துவிட்டு எதை உண்பது. காய்கறிகளும், பழங்களும் விளைவிக்காமல் இருக்க முடியாது.

இந்த நேரத்தில் தான் மய்யமாக இருந்து செயல்பட வேண்டும் நாட்டிற்கு நன்மை தரக்கூடியதாக இருந்தாலும் மக்களின் வாழ்வாதாரம் அழியும் அவர்கள் சிரமத்திற்குள்ளாவார்கள் என அறிய வரும் பட்சத்தில் அந்த திட்டம் வேறு வழியாக எந்த பாதிப்பையும் ஏற்படா வண்ணம் செயல்படுத்த ஆய்வு மேற்கொள்ள வேண்டும் அல்லது அத்திட்டத்தை முற்றிலுமாக கைவிட முற்படவேண்டும். முன்பே இருக்கும் சாலையை பாதிப்புகள் வெகு குறைவாக இருக்கும்படி வேண்டுமானால் முன்னெடுத்துச் செல்லவேண்டும். இவை எல்லாவற்றிலும் பொதுமக்களின் கருத்துகளை எந்த ஒளிவுமறைவின்றி வெட்டவெளிச்சமாக நடத்தப்படும் கருத்துக் கேட்பு மற்றும் ஆலோசனை கூட்டங்களை நடத்திட முனைய வேண்டும். இவற்றால் மத்திய அரசின் ஆட்சேபனைகளை சட்டரீதியாக உள்ள நுணுக்கங்களினால் தெளிவுபடுத்த வேண்டும்.

இன்னும் வரும் …….