சென்னை – டிசம்பர் 27, 2௦22
இந்திய தேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவரும் வயநாடு பாராளுமன்ற உறுப்பினருமான திரு ராகுல்காந்தி அவர்கள் நமது இந்திய நாட்டின் ஒற்றுமைக்கும் இறையாண்மையை காக்கவும் மதச்சார்பற்ற ஓர் நாட்டினை அதில் வாழும் கோடிக்கணக்கான மக்களை சதி மத பேதமின்றி முன்பு போல் ஒன்றிணைக்கவும் நாடு முழுவதும் பாரத் ஜோடோ யாத்ரா எனும் பெயரில் கட்சிபாகுபடின்றி நடைபயணம் மேற்கொண்டு வருவது அனைவரும் அறிந்ததே.
இப்படி வரலாற்றில் இடம்பெறவிருக்கும் இந்த யாத்திரையில் கலந்துகொள்ள வருமாறும் எந்தவித மதசார்பும் இல்லாமல் தேசிய நலனில் மக்களின் பால் தீராத அன்புகொண்டிருக்கும் மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனத் தலைவரான திரு கமல்ஹாசன் அவர்களை அழைத்தார்.
இதில் பெரும் உவகையும் கொண்ட நம்மவர் திரு ராகுல்காந்தி அவர்களின் அழைப்பினை ஏற்று (டிசம்பர் 2௦22) இம்மாதம் 24 தேதி புது தில்லியில் தமது கட்சியின் மாநில செயலாளர்கள் மற்றும் பல மாவட்டங்களில் இருந்து வந்திருந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் கலந்து கொண்டார் மட்டுமல்லாது செங்கோட்டையின் அருகில் அமையப்பெற்ற பொதுகூட்ட மேடையில் காங்கிரஸ் இயக்கத்தின் முன்னணித் தலைவர்களுடன் இணைந்து இந்த பாரத் ஜோடோ யாத்ராவில் தான் கலந்து கொள்வது பற்றி பெருமிதத்துடன் உரையாற்றினார். இதில் கட்சி பேதமில்லாமல் அனைவரும் கலந்துகொள்ள வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.
பாரத் ஜோடோ யாத்திரையில் திரு கமல்ஹாசன் அவர்கள் பங்குபெற்றது குறித்து நாடெங்கும் தொலைக்காட்சி மற்றும் இதர ஊடகங்களில் பெரும் பேசுபொருளாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து தான் இந்த யாத்திரையில் கலந்து கொண்டது ஏன்என நீண்ட நெடிய கட்டுரை ஒன்றை ஆங்கில வடிவத்தில் எழுதி தி ஹிந்து நாளிதழில் தெளிவுபட வெளியிட்டுள்ளார் அதன் தமிழ் வடிவம் உங்களின் பார்வைக்காக இதோ :
தி இந்து பத்திரிகையில், அபிப்ராயங்களை வெளிப்படுத்தும் கட்டுரைகளும் தலையங்கங்களும் வழக்கமாக சொல்வன்மை மிக்க, தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களால் எழுதப்படும். ஒரு மாறுதலுக்கு, பள்ளிப்படிப்பைக் கைவிட்டவரும், வர்த்தகரும், நடிகருமான ஒருவரது கருத்துக்களைக் கேட்கும்படி வாசகர்களைக் கோருகிறேன். தமிழக முதல்வராக இருந்த பெருந்தலைவர் கே.காமராஜ் அவர்களுக்கும் கிடைத்திராத இந்த வாய்ப்பு எனக்குக் கிடைத்ததைப் பெரும் கௌரவமாகக் கருதுகிறேன். வாசகர்களுடன் சாமர்த்தியத்தின் துணை கொள்ளாமல், அவரது ஞானத்தின் துணைகொண்டு உரையாடுகிறேன், அவரிடமிருந்து என்வரையில் அது பல கரங்களைத் தாண்டி வந்திருக்கிறது.
நம் இந்திய தேசத்துக்கு, சுதந்திரப் போராட்டம் எவ்வளவு முக்கியமானதாக இருந்ததோ, இந்திய அரசியலமைப்புச் சட்டமும் அவ்வளவு முக்கியமானதாக இருக்கிறது. இந்திய அரசியல் நிர்ணய சபையால் உருவாக்கப்பட்டு, சுதந்திரத்துக்காகப் போராடிய ஒரு தலைமுறையின் கருத்துக்களாலும் அனுபவங்களாலும் உயிரூட்டப்பட்ட இந்திய அரசியலமைப்புச் சட்டம், வளரும் பிள்ளைப் பருவத்தில் அப்போதிருந்த இந்தியாவுக்காக மட்டுமல்லாமல், வளர்ந்து, முதிர்ந்திருக்கும் வருங்கால இந்தியாவுக்காகவும் பரிந்துரைக்கப்பட்ட ஔடதம்தான்.
நன்றாகச் சிந்தித்து, மக்கள் பிரதிநிதிகள் மட்டுமல்லாமல், தகுதிவாய்ந்த வழக்கறிஞர்களும் இணைந்து, சட்டரீதியான தர்க்க நியாயங்கள், கோட்பாடுகள், இவற்றோடு ஏனைய மக்களாட்சி நிலவும் தேசங்களின் அரசியலமைப்புச் சட்டங்களின் வளர்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ஆவணம் உருவாக்கப்பட்டது. ஆனால் இன்று, வெறும் அரசியல்வாதிகள் இதனை மாற்றி எழுதவும், நம் தேசம் குடியரசாகப் பிறப்பெடுத்தபோது விளைந்த நலன்களை மாற்றி அமைக்கவும் துணிகிறார்கள், விழைகிறார்கள். அரசியலமைப்புச் சட்டங்கள் மாற்றங்களுக்கும் திருத்தங்களுக்கும் இடம் கொடுக்கவேண்டியது அவசியம்தான், ஆனால் இவை எந்தச் சார்புமின்றி, பகுத்தறிவின் அடிப்படையில், நம் சுதந்திர தேசத்தின் அடிப்படை கொள்கைகளை இறுகப் பற்றியபடி நிகழவேண்டிய மாற்றங்கள், மாறாக அவற்றைச் சிதைத்து நிகழவேண்டியவை அல்ல.
இதை நான் அரசியல் மய்யக் கோட்பாடு கொண்டவன் என்ற முறையில் சொல்கிறேன், இந்தக் கோட்பாடு சில சமயங்களில் ‘சந்தர்ப்பவாதம்’ என்று தவறாகப் புரிந்துகொள்ளப்படுவதையும் அறிவேன். ஆனால் இந்த மய்யக் கோட்பாடு, புத்தரின் தம்மபதம் (சத்தியத்தின் பாதை), திருக்குறளின் நடுவு நிலைமை (சார்பற்ற சமநிலை), மற்றும் அத்வைதம் (இரட்டைத்தன்மையற்ற நிலை) போன்ற பல சிந்தனைகளையும், வாழ்வியல் நெறிகளையும் ஊக்குவித்திருக்கிறது. இவை யாவும் மய்யக் கோட்பாட்டைக் கொண்டாடுகின்றன.
கொள்கை விளக்கம்
நாம் ஏன் பாரத் ஜோடோ யாத்ராவைக் கொண்டாடவேண்டும், அதில் ஏன் கலந்துகொள்ள வேண்டும்? நம் குடிமக்களின் தேசிய நலனைப் பாதிக்கும் பல்வேறு நடவடிக்கைகள் நிகழும் காலத்தின் சாட்சிகளாக நாம் இருக்கிறோம். அவசர அவசரமாக அமல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி, டீமானிடைசேஷன் எனும் பெருந்தோல்வி, இவற்றோடு அதிகரித்து வரும் மதரீதியான மற்றும் சாதி ரீதியான ஒடுக்குமுறைகள் யாவும் இந்த நடவடிக்கைகளில் அடங்கும். நம் குடிமக்கள் போராடிப் பெற்ற தகவலறியும் உரிமை, இப்போது சட்டத்துக்குப் புறம்பான காரியங்களால் நீர்த்துப் போயிருக்கிறது. நமது நீதித்துறை ஒரு கடிவாளத்துக்குட்பட்டு இயங்கும் சூழலில் இருக்கிறது; அதிகாரத்தின் கரங்கள் எழுதும் குறிப்புகள் நீதித்துறையின் சுதந்திரத்தைக் கேள்விக்கு உட்படுத்துகின்றன.
பாரத் ஜோடோ யாத்ராவில் காங்கிரஸ் தலைவர் ராஹுல் காந்தியுடன் இணைந்து பயணிப்பது என்பது, அரசாங்கத்தால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் இன்றைய சூழலின் மீது நடுநிலையோடு வைக்கப்படும் விமரிசனம் என்றே கருதப்படவேண்டும். இந்தப் பயணத்தை நிர்வகிப்போரின் அரசியல் சார்புநிலைகள் முக்கியமல்ல. 1970களின் மத்தியில் எமர்ஜென்ஸிக்கு எதிராக இப்படியொரு பயணம் நடந்திருந்தால், என் தந்தையார் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் முன்னாள் உறுப்பினராக இருந்தபோதிலும், நானும் அந்தப் பயணத்தில் இணைந்திருப்பேன்.
சில அறிவுஜீவிகளும், சமுதாயத்தில் செல்வீகமான இடத்தில் இருப்பவர்களும், அரசியலில் ஈடுபடுவதை கௌரவக் குறைச்சலாகக் கருதுகிறார்கள். இதனால்தான் குற்றவாளிகளும், சந்தர்ப்பவாதிகளும் தேசம் முழுக்கத் தேர்தல் அரசியலில் ஈடுபடும் துணிச்சலைப் பெற்றிருக்கிறார்கள், இதன் விளைவாக அரசியல் எனும் உடலில் சீழ்ப்பிடித்த புண்கள் உருவாகிவிட்டன. இவற்றை நாம் கவனமாகக் கையாள வேண்டும்; அரசியலில் நாம் நல்ல பாதிப்புகளை ஏற்படுத்தாவிட்டால், அரசியல், கருணையே இல்லாமல், நம் வாழ்வில் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதைச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
பாரத தேசம் எனும் சிந்தனையை, கருதுகோளை, தொலைநோக்கு கொண்ட தலைவர்கள் உருவாக்கினர். இந்தக் கருதுகோளை மதிக்காமல், நம் தேசம் எனும் சிந்தனையைச் சிதைக்கும் நோக்கம் கொண்டோரால் உருவாகியிருக்கும் பிளவுகளை இணைக்கும் பூத்தையல்களை இடுவதற்கு இதுவே சரியான சமயம் என்று நான் கருதுகிறேன். பாரத் ஜோடோ யாத்ரா அந்தப் பூத்தையலை இடுவதற்கு நமக்கு உதவும் என்று நம்புகிறேன். – திரு கமல்ஹாசன் ஓர் உண்மையான இந்திய மகனாக.