சென்னை – ஜனவரி – 13, 2௦23

பெருந்தொற்றுக் காலத்தின் விளைவுகளால் தேர்வெழுதும் வாய்ப்பை இழந்து தவிக்கும் யுபிஎஸ்சி தேர்வர்களைச் சந்தித்தேன். வயதுத் தளர்வும்,தேர்வெழுத மறுவாய்ப்பும் வழங்கவேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இவர்களது நியாயமான கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவிசாய்க்க வேண்டும். தேர்வுக்கான முன் தயாரிப்புகளில் உழைப்பையும், நேரத்தையும் செலவு செய்துவிட்டு காத்திருக்கும் திறமைமிக்க இளைஞர்களை இருளில் தள்ளுவது முறையல்ல. – திரு கமல்ஹாசன், தலைவர், மக்கள் நீதி மய்யம்

இந்தியக் குடியியல் பணிகள் தேர்வு மூன்று வகையாக நடத்தப்படுகிறது முதனிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் விளக்க எழுத்துத் தேர்வு (நேர்முகத் தேர்வும் உண்டு) என்பதே ஆகும். 2020 ஆண்டில் அறிவித்த தேர்வின்போது நாடு முழுவதும் உள்ள முன்களப் பணியாளர்களான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் போன்ற தேர்வாளர்கள் தேர்வினை எழுத முடியாமற்போனது. இதில் பலருக்கும் அவர்களின் குடும்பத்தினர்கள் சிலருக்கும் கொரொனோ தொற்றின் காரணமாக உயிரிழப்புகளும், இன்னும் அதிகமாக கர்ப்பிணிப் பெண் ஒருவர் தனது சிசுவை இழந்துள்ளது வேதனைக்குரியது. இப்படிப்பல சிக்கல்களுக்கிடையில் தேர்வாளர்கள் தேர்வினை எழுத முடியாமல் போய்விட்டது. இதனை அடுத்து அவர்கள் மத்திய அரசினை நோக்கி தங்களை மீண்டும் தேர்வு எழுதிட அனுமதிக்குமாறு பலமுறை கோரிக்கைகள் வைத்தும் அதைச் சட்டை செய்யாத காரணத்தினால் ஓர் குழுவாக திரண்டு தங்களின் எதிர்ப்பை அறவழிப்போராட்டத்தை முன்னெடுத்தனர். இதில் கலந்துகொண்டவர்களை போலீசார் மூலம் ஒடுக்கியும் போராடியவர்களை மனிதாபிமான அடிப்படையில் கூட மதிக்காமல் அவர்களை வெறும் ஐந்தறிவுள்ள விலங்குகளைப் போல் கையாண்டு இழுத்துச் சென்றும் குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று கைது செய்தனர்.

இதனை கருத்தில்கொண்ட போராட்டக்குழுவினர் அரசின் பாராமுகத்தை குறிப்பிட்டு நீதிமன்றத்தை நாடும் பொருட்டு வழக்கினை பதிவு செய்தார்கள். ஆயினும் தேர்வர்களின் நியாயமான கோரிக்கைகளைக் கண்டுணர்ந்த நீதிபதிகள் இதில் எந்த வகையிலும் தங்களால் (நீதிமன்றம் வாயிலாக) இந்தியக் குடியியல் பணிகள் தேர்வாணையம் மட்டுமே இதில் அனுமதி வழங்க முடியும் என்றும் கை விரித்துவிட்டது. ஆயினும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநில அரசுகள் கூட இதில் விதிவிலக்கு தந்தால் பலரது நீண்டகால கனவுகள் மெய்ப்படும் என்றும் தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.

அடிப்படையில் யோசிக்க வேண்டுமானால் கொரொனோ பெருந்தொற்று உலகையே மிரட்டிய பேரிடர் மேலும் எதிர்பாராத ஒன்று. பாதிக்கப்பட்ட பொதுமக்களை காக்க வேண்டிய பணிகளில் இருந்ததால் எழுத வேண்டிய தேர்வினை தவிர்க்க வேண்டிய சூழல் உருவாகி விட்டது என்பதை தேர்வாணையமும் மத்திய அரசும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இதனிடையில் இந்தப் போராட்டம் பற்றி அறிந்த மக்கள் நீதி மய்யம் சார்ந்த நிர்வாகிகள் ட்விட்டர் வழியாக ஸ்பேசஸ் எனும் கலந்துரையாடல் ஒன்றினை ஏற்பாடு செய்தனர். அதில் மீண்டும் ஓர் தேர்வுக்கு தங்களை அனுமதிக்கும்படி போராடிவரும் தேர்வாளர்கள் பலரும் அப்போது தங்களுக்கு நடந்த நிகழ்வுகளை பகிர்ந்தனர் அதில் பேசிய பலரும் தங்களுக்கு ஏற்பட்ட இழப்புகளையும் தேர்வில் பங்கு கொள்ளாத காரணத்தினால் உண்டாகும் மன உளைச்சல்களையும் கேட்ட போது கேட்போர் மனது துயருற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய மக்கள் நீதி மய்யம் மாநில செயலாளர் திரு செந்தில் ஆறுமுகம் அவர்கள் அறத்தின் மீது பெரும் மதிப்பும் அசையா நம்பிக்கையும் கொண்டுள்ள தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் நிச்சயம் போராடும் அனைவரின் நல்லெண்ணத்தையும் உணர்ந்து அவகளின் வலிகளை மனதில் வைத்து மத்திய அரசினை நிச்சயம் நல்ல தீர்வினை அளிக்கும்படி அழுத்தமாக கோரிக்கை வைப்பார் என்பதையும் தெரிவித்தார்.

நியாயமான கனவுகள் என்றைக்கும் தோற்பது என்பது கூடாது. தேர்வில் வெற்றி பெற்றார்கள் எனில் நீதியையும் நேர்மையும் துணிச்சலும் கொண்ட அதிகாரிகளை இந்த தேசம் பெறக்கூடும் அல்லவா.