சென்னை : ஏப்ரல் 08, 2023

பல ஆண்டுகளாக பெரும் எதிர்ப்புகளுடன் இயங்கி வந்த தூத்துக்குடியில் அமைந்துள்ள வேதாந்தா ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளாலும் காற்று மாசு, நீர்நிலைகள் ரசாயன கலப்பின் காரணமாக பொதுமக்களுக்கு பல உடல் உபாதைகள், குறைபாடுகள் மற்றும் கேன்சர் நோய்கள் ஏற்பட காரணமாக அமைந்தது.

தூத்துக்குடி மீளவிட்டான் எனும் கிராமத்தில் நிறுவப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை 1993 இல் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் தலைமையிலான அதிமுக ஆட்சிக்காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டு இயங்கத்தொடங்கியது. அங்கு செம்புக் கம்பி கந்தக அமிலம் மற்றும் பாஸ்பரிக் அமிலம் ஆகியவைகள் உற்பத்தி செய்யப்பட்டன. இதற்கிடையில் ஸ்டெர்லைட் ஆலை நிலத்தடி நீர் மற்றும் காற்று மண்டலம் ஆகியவற்றை பெருமளவில் மாசைடைய காரணமாக இருந்து பெரும் கேடினை உண்டாக்குவதால் ஆலையை மூட வேண்டும் என்று சமூக செயற்பாட்டாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் ஆலையிலிருந்து பலமுறை விஷவாயுக்கள் வெளியாகி சுற்றியிருந்த பொதுமக்களுக்கு பலவித சுவாச கோளாறுகள் மூச்சடைப்பு போன்ற உடல் உபாதைகள் ஏற்படத் துவங்கியது குறிப்பாக சுமார் 82 முறை விஷவாயுக்கள் கசிந்ததாக குற்றச்சாட்டு எழுந்து 2௦13 மார்ச் 3௦ அன்று தமிழக அரசின் மாசுக் கட்டுப்பாடு வாரியம் ஆலையை சீல் வைக்கும் பணிகளை துவக்கியது. மேலும் அனுமதிக்கப்பட்ட அளவினை கடந்து கந்தக டை ஆக்சிட் எனும் நச்சுதன்மையுடைய வாயு வெளியானதால் ஆலையைச் சுற்றியுள்ள பல கிலோமீட்டர் தூரத்திற்கு பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல், கண் எரிச்சல், தொண்டை வலி முதலான பாதிப்புகளும் அது மட்டுமில்லாது ஆலையை சுற்றியுள்ள மரங்களும் கருகிப் போயின.

இது போன்ற பல இடர்பாடுகளை சந்தித்த பொதுமக்கள் மற்றும் சூழலியல் ஆர்வலர்கள் முதலானோர் தொடர்ந்து அரசிடம் நிரந்தரமாக இந்த ஆலையை மூடக் கோரி மனுக்கள் அளித்தனர். ஆளை மூடப்பட்ட பின்னர் உச்சநீதிமன்றம் மூலமாக நிர்வாகம் வழக்கு தொடர்ந்து மீண்டும் திறக்கச் செய்தனர். இதனால் அதிர்ச்சியுற்ற மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் பிப்ரவரி 05, 2018 அன்று மனு அளித்த பொதுமக்கள் இதனைத் தொடர்ந்து பெரும் அறப்போராட்டம் உருவானது குமரெட்டியார்புரம் மக்கள் மரத்தடிகளில் அமர்ந்து போராட்டம் செய்தனர். இதன் தொடர்ச்சியாக எந்த அரசியல் கட்சிகளும் அந்த போராட்டத்தில் கலந்து கொள்ள மக்கள் அனுமதியளிக்கவில்லை ஆயினும் மக்கள் நீதி மய்யம் மட்டுமே அந்த போராட்டத்திற்கு ஆதரவு அளித்து அதில் பங்கெடுத்துக் கொண்டது. போராட்டத்திற்கு நேரடியாகச் சென்ற தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் பொதுமக்களிடம் உரையாடினார் கோஷங்கள் எழுப்பி தங்களது எதிர்ப்பை பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சரியான உணவும், உறக்கமும் இல்லாமல் இரவு பகல் பாராமல் குழந்தைகளுடன் போராட்டக்களத்தில் சுமார் 40 நாட்கள் நீடித்த இப்போராட்டத்தில் சம்பவம் நடந்த இறுதி நாளன்று கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வைத்துக் கூட்டத்தினை கலைக்க முற்படாமல் திடீரென நீண்ட தூரம் சுடக்கூடிய ஸ்னைப்பர் துப்பாக்கிகளைக் கொண்டு வரைமுறை இல்லாமல் முறையான அனுமதி இல்லாமல் கூட்டத்தினை நோக்கி சுடத்துவங்கியதும் மக்கள் கலைந்து ஓட இதனால் ஏற்பட்ட பீதியில் பலர் சிக்கி படுகாயமுற்றனர். இந்தத் தாக்குதலில் நிலைகுலைந்த பொதுமக்களில் இளம்வயதினர் உட்பட சுமார் 15 நபர்கள் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியாகினர் இன்னும் கொடுமை என்னவெனில் ஸ்நோலின் எனும் இளம்பெண்ணின் முகத்தை கிழித்துக்கொண்டு சென்ற குண்டு அவரது உயிரை நொடிபொழுதில் இரையாகத் தின்று தீர்த்தது பெரும்சோகம். அப்போது அதிமுகவின் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமியிடம் இது குறித்து கேள்வியெழுப்பிய பத்திரிக்கையாளர்களிடம் துப்பாக்கிச்சூடு நடத்திட எந்த அனுமதியும் வழங்கவில்லை ஆனால் இந்தச் சம்பவத்தை தொலைக்கட்சிகளில் பார்த்து தான் தெரிந்துகொண்டேன் என்று அளித்த பதில் ஒரு முதல்வராக இருந்தும் அவரது அலட்சியத்தையும் பொறுப்பற்ற தன்மையும் பறைசாற்றியது மட்டுமல்லாமல் அனைவரின் நெஞ்சையும் பதறச் செய்தது உச்சம்.

இப்படி பலரது உயிரைக் கொடுத்த போராட்டத்தின் தன்மையை தற்போது ஆளுநராக பொறுப்பு வகிக்கும் திரு ரவி அவர்கள் அயல்நாட்டு நிறுவனங்களிடம் விலைபோய் பணம் பெற்றுக் கொண்டு வீண் பழி சுமத்தி நாட்டின் பொருளாதார வளர்சிக்கு உதவிடும் வகையில் இயங்கிவந்த ஓர் தொழிற்சாலையை மூடச் செய்தது ஒப்புக் கொள்ளமுடியாத செயல் என்றும் பேசியவர் மக்களின் வாழ்வாதாரத்தையும் கொடிய நோய்களை உண்டாக்கிய தொழிற்சாலையை மூட அறவழிப்போராட்டம் செய்த மக்களை பணம் வாங்கிக் கொண்டு போராடியதாக சொலவது அவர்களை கொச்சைப்படுத்தும் விதமாகவும் இத்தனை உயிர்களை பலி கொண்டது குறித்து வருத்தம் தெரிவிக்காமல் கொஞ்சமும் மனிதாபிமானம் அற்ற முறையில் பேசியிருப்பது வன்மத்தின் உச்சம்.

மத்திய அரசிற்கும் மாநில அரசிற்கும் பாலமாக இருக்க வேண்டிய ஆளுநர் அவர்கள் எந்த சொந்த விருப்பு வெறுப்பிற்கும் உட்படாமல் இருக்க வேண்டும் என்பது நியதி. ஆனால் அப்படி பொதுவான ஓர் ஆளுநராக இல்லாமல் ஏதோ ஓர் கட்சியின் பிரதிநிதி போல் மதம் சாதி மற்றும் மனம் ஒப்புக்கொள்ள முடியாத பல முரண்களை கொண்ட வார்த்தைகளை எதிர்மறையான கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருவது மாண்பினை மீறிய செயலாகவே கருதத் தோன்றுகிறது. இப்படி ஒருதலைப்பட்சமான ஆளுநர் நமது மதச்சார்பற்ற மாநிலமாக அமைதியாக திகழும் தமிழ்நாட்டிற்கு அவசியமில்லை தொடர்ந்து பதவியில் நீடிப்பதில் எந்த பயனும் இல்லை எனவே பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்ளும் ஆளுநரை திரும்பப் பெற்றுக் கொள்ளவேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் அழுத்தமாக வலியுறுத்துகிறது.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தை கொச்சைப்படுத்தி விமர்சித்த மாண்புமிகு ஆளுநர் ரவியை, நீங்கள் இருப்பது ராஜ்பவன் எனவும் ரவிபவன் இல்லை என்பதை நினைவில் கொள்க என மக்கள் நீதி மய்யம் பொதுச்செயலாளர் திரு. அருணாச்சலம் அவர்கள் கடும் கண்டனம்.மக்கள் நீதி மய்யம்