மே 18, 2023

சுமார் 6 வருடங்களுக்கு முன்னர் ஜல்லிக்கட்டு நடத்த தடை கோரிய BETA அமைப்பு, இது தமிழர்களின் பாரம்பரிய நிகழ்வு அதனை தடை செய்யக்கூடாது என கல்லூரி மாணவ மாணவிகள் முதற்கொண்டு பள்ளி பிள்ளைகள், யுவன் யுவதிகள் மற்றும் ஒவ்வொரு குடும்பமும் இன்னும் சொல்லப் போனால் குழந்தைகள் என லட்சக்கணக்கான பொதுமக்கள் அமைதி வழியில் அறப்போராட்டம் ஒன்றை சென்னை மெரினாவில் நடத்தினார்கள். பல நாட்களாக அமைதியாக நடந்த போராட்டம் திடீரென ஏற்பட்ட ஓர் கலவரக்காரர்களால் குழப்பம் காரணமாக அசாதாரணமான சூழல் உண்டாகி போலீஸ் தடியடி நடத்தினர். அதனைத் தொடர்ந்து மீனவர்கள் வாழும் பகுதிகளில் கலவரம் உண்டானது. பின்னர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. பல ஆண்டுகளுக்கு பின்னர் இப்படி ஒரு அருமையான தீர்ப்பு வழங்கப்பட்டது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் தனது நெஞ்சார்ந்த மகிழ்ச்சியை தெரிவித்து உள்ளார்.

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஏறுதழுவுதலை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு ஏற்றுக் கொண்டது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ்ப் பண்பாட்டின் அடையாளமான ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தத் தடையில்லை என்கிற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தீர்ப்பு, தமிழரின் கலாச்சாரத்துக்குக் கிடைத்த சட்டப்பூர்வ அங்கீகாரம்.

இயற்கையோடும், விலங்குகளோடும் இணைந்து வாழும் தமிழக மக்களால் ஒருபோதும் கால்நடைகளுக்குத் துன்பம் ஏற்படாது என்பதை நாட்டின் தலைமை நீதிமன்றமே ஒப்புக்கொண்டதுடன், ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு தமிழ்நாட்டுக் கலாச்சாரத்துடன் ஒருங்கிணைந்தது என்றும் அங்கீகரித்துள்ளது பெருமைக்குரியது.

ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்காக புரட்சிப் போராட்டம் நடத்திய இளைஞர்களுக்கும், பொதுமக்களுக்கும், உரிய ஆதாரங்களை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, திறமையாக வாதாடி, சட்டப்போராட்டம் நடத்திய தமிழக அரசுக்கும் மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது ஒட்டுமொத்த தமிழர்களுக்குக் கிடைத்த வெற்றி! – கமல்ஹாசன், தலைவர், மக்கள் நீதி மய்யம்