ஆகஸ்ட் : 12, 2௦23

கண்டவர்கள் சொன்னார்கள், காண்பவர்கள் சொல்வார்கள் இளம் தலைமுறையினர் மூத்தோர் சொல்லக் கேட்பார்கள்.

யாரைப்பற்றி ? எதைப்பற்றி ?

முதலில் எதைப்பற்றி என்பதற்கு : சினிமா, வெள்ளித்திரை, செல்லுலாய்ட் என பல பெயர்கள் உண்டு.

அதாவது 19 ஆம் நூற்றாண்டில் லூமியர் சகோதரர்கள் மூலமாக நகரும் படம் என சொல்லப்பட்ட சினிமா 1895 இல் டிசம்பர் 28 ஆம் தேதியன்று குறும்படம் மூலமாக சினிமா வரலாறு தொடங்கியது. அதற்கடுத்த 1897 இல் அதாவது இரண்டே ஆண்டில் சென்னைக்கு வந்துவிட்டது நகரும் படம். ஆங்கிலேயரான எட்வர்டு அவர்களால் விக்டோரியா பப்ளிக் ஹால் எனுமிடத்தில் முதல் நகரும் திரைப்படத்தை சினிமாஸ்கோப் என்று விளம்பரப்படுத்தப்பட்டு திரையிட்டு காண்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பல நகரும் திரைப்படங்கள் ஒளிபரப்பபட்டன. பின்னர் 1900 ஆண்டில் மவுன்ட் தெருவில் முதல் திரையரங்கான எலெக்ட்ரிக் எனும் திரையரங்கை வார்விக் மேஜர் என்பவரால் நிர்மாணிக்கப்பட்டது.

திருச்சியில் 1905 இல் சுவாமிக்கண்ணு வின்சென்ட் என்பவர் எடிசன் சினிமாட்டோகிராப் எனும் திரைப்படம் காண்பிக்கும் நிறுவனத்தை துவக்கினார். இதுவே தென்னிந்தியாவின் முதல் திரையரங்காக விளங்கியது. பல ஊர்களுக்குச் சென்ற இவர் இயேசுவின் வாழ்க்கை எனும் படத்தை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து இவர் லூமி சகோதரர்கள் வெளியிட்ட ரயிலின் வருகை எனும் படத்தை திரையிட்டார் (அதில் ரயில் வந்து நிற்பதே மொத்தப் படமாகும்) அதனை திரையில் கண்ட மக்கள் பலரும் எங்கே ரயில் வந்து நம்மீது மோதிவிடுமோ என்று அஞ்சி ஓட்டம் பிடித்த கதையும் உண்டு. அடுத்தடுத்து இது போன்ற துண்டுப் படங்களை தொடர்ந்து திரையிட்டு வந்தார் பின்னர் வள்ளி திருமணம் என்ற படத்தை தயாரித்து வெளியிட்டார் அப்போது தான் கோயம்புத்தூரில் பிரபலமாக விளங்கிய வெரைட்டி ஹால் எனும் அமைந்தது.

இப்படி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் ஏனெனில் திரையுலக வரலாறு என்பது நூறு ஆண்டுகால சாதனைகள். அந்த சமையங்களில் AVM எனும் பிரபல திரைப்பட நிறுவனம் பல திரைப்படங்களை தயாரித்து வெளியிட்டு வந்தது அந்த நிறுவனத்திற்கென பல இயக்குனர்கள் முதற்கொண்டு தொழில்நுட்பக்கலைஞர்கள் பணியாற்றி வந்தனர். அதன் நிறுவனரான திரு மெய்யப்பன் என்பவர் தயாரிப்பாளர் என்பதோடு மட்டுமல்லாமல் சிறந்த இயக்குனர் என பெயரெடுத்தவர். அவரது தயாரிப்பில் களத்தூர் கண்ணம்மா எனும் திரைப்படம் ஜெமினி கணேசன் மற்றும் சாவித்திரி ஆகியோர் நடிப்பில் துவக்கப்படவிருந்தது. அதில் அவர்களது மகனாக நடிக்க ஏற்கனவே திரையில் நடித்துவரும் பல குழந்தை நட்சத்திரங்களை யோசித்து வைத்திருக்கும்போது மெய்யப்பன் அவர்களுக்கு பழைய குழந்தை நட்சத்திரங்களை மீண்டும் போடாமல் புதிய முகமாக அதே சமையம் சூட்டிகைத்தனம் நிறைந்த ஓர் சிறுவனை நடிக்க வைத்தால் நன்றாக இருக்கும் அதுவும் புதுமுகம் என்றால் இன்னும் சிறப்பாக அமையக்கூடும் என எண்ணிய போது மருத்துவர் ஒருவரால் அவரிடம் அழைத்துச் செல்லப்பட்டவரே திரு கமல்ஹாசன்.

வீட்டில் தனது அறையில் மங்கிய ஒளியில் கட்டிலில் சாய்ந்து ஓய்வெடுத்துக்கொண்டிருந்த மெய்யப்பன் அவர்களிடம் அழைத்துச் சென்று காண்பிக்க அவர் அந்த மின்சார குண்டு பல்பிணை சற்றே அந்தச் சிறுவன் முகத்தில் படும்படியாக திருப்பிப் பார்த்துவிட்டு மனதுக்குள் மிகவும் திருப்தியடைந்து களத்தூர் கண்ணம்மாவில் நடிக்க வைக்க முடிவு செய்தார். அடுத்த நாளில் வரச்செய்து சினிமாவிற்கு என்னென்ன எப்படி எல்லாம் ஒத்திகை பார்க்க வேண்டி இருக்குமோ அவ்வாறெல்லாம் அடுத்தகட்ட நகர்வுகள் நடந்து முடிந்தது.

பிரமித்து நின்ற மெய்யப்பன் அவர்கள் : கமல்ஹாசன் அவர்களிடம் இந்தப் படத்தில் நடிக்க நீ சம்பளமாக எவ்வளவு தொகை எதிர்பார்க்கிறாய் எனக் கேட்டதும் அடுத்த நிமிடமே எந்தத் தயக்கமும் இல்லாமல் ஒரு பெரிய ப்ளைமவுத் கார் அப்புறம் நிறைய சாக்லேட்கள் என்றதும் ஒரு நிமிடம் தன்னையறியாமல் திகைத்து நின்றுவிட்டார் என்பது உண்மையான வரலாறு. அப்போது அங்கே இருந்தவர்களிடம் மெய்யப்பன் அவர்கள் சொன்ன வார்த்தை குறித்து வைத்துக்கொள்ளுங்கள் இந்தப் பையன் பின்னாளில் நமது திரையுலகில் மிகப் பெரும் இடத்தை அடைவான் என்றாராம்.

1960 ஆண்டில் ஆகஸ்ட் 12 இல் வெளியானது களத்தூர் கண்ணம்மா. திரையிடப்பட்ட அரங்குகள் மக்களின் வரவால் முழுமையாக நிரம்பியது, புதிதாக சிறுவன் ஒருவன் நடித்திருக்கிறான் அற்புதமான முகபாவனைகள் வசனம் உச்சரிப்புகள் அவ்வளவு துல்லியமாக இருக்கிறதாம் என வாய்மொழியாக தமிழகம் முழுக்க பரவியது. மெய்யப்பன் அவர்கள் சொல்லியது போன்றே அமோகமாக வெற்றி பெற்றது படம். அந்த ஆண்டில் ஜனாதிபதி விருதிற்கென பரிந்துரை செய்யப்பட்டதில் தேர்வு செய்யப்பட்டு சிறந்த படமாகவும் அதே சமையம் சிறந்த குழந்தை நட்சத்திரம் என கமல்ஹாசன் அவர்களையும் தேர்வு செய்து ஜனாதிபதியின் கைகளால் விருதும் வழங்கிட அத்தனை ஜாம்பவான்கள் அந்த அரங்கத்தில் நிறைந்திருக்க வெற்றிப் பெருமிதத்துடன் எந்த தயக்கமும் அச்சமும் இன்றி கனஜோராக சென்று தனது முதல் படத்தின் முதல் தேசிய விருதை பெற்றுக் கொண்டார்.

திரு. மெய்யப்பன் அவர்கள் சொன்னது போல் திரையுலகில் ஒவ்வொரு துறையில் மற்றும் பல தொழில்நுட்பங்களை கற்றுத் தேர்ந்து தனது முத்திரையை பதிக்கத் தொடங்கினார் திரு கமல்ஹாசன். இட்ட பெயர் ஒன்றே ஆயினும் பட்டங்களாக வைக்கப்பட்ட சூப்பர் ஆக்டர், நம்மவர், ஆண்டவர், உலகநாயகன் என பல பெயர்கள் உண்டு. பள்ளிப்படிப்பை கைவிட்டவர் அனுபவ அறிவை மேம்படுத்திக் கொண்டது தனது ஆசிரியர்களின் அறிவுரையும் அவர்களின் தொழில் நேர்த்தியையும் அப்படியே உள்வாங்கிக் கொண்டு அதனை அப்படியே வெளிப்படுத்தி விடாமல் அதிலும் பல விதங்களில் மெருகூட்டி திரையில் ஒளிர்ந்தார்.

1960 துவங்கிய அந்த கலைப்பயணம் 64 ஆவது ஆண்டில் இன்னும் சிறப்பாக மெருகுடனும் மிடுக்குடனும் நடை போட்டுக் கொண்டிருக்கிறது.

64 ஆண்டுகள் ஒருவன் வாழ்க, என்று வாழ்த்தினாலே அது பெரிய ஆசிதான். அது என் உடலுக்கான வாழ்த்தாக இல்லாமல் என் கலை வாழ்வுக்கான ஆசியாக இருப்பது என்னைவிட திறமையாளர்கள் பலருக்கும் கிட்டா வரம். வாழ்த்தும் அனைவருக்கும் என் சிரம் தாழ்த்தி பணிவுடன் நன்றி. எஞ்சி உள நாட்கள் என் மக்களுக்காக. உங்கள் நான்திரு கமல்ஹாசன்

திரு.கமல்ஹாசன் எனும் அற்புத கலைஞரை இந்த ஒரு பக்க கட்டுரையில் சுருக்கி விடவோ அல்லது விளக்கிவிட முடியாது, அவர் வானளாவிய பிரம்மாண்டம் ; எனவே நம்மவர் இன்னும் வருவார்……..

வெள்ளித்திரையில் 64 ஆண்டுகள்! வாழ்த்து மழையில் நனையும் கமல்ஹாசன்! – (news7tamil.live)