செப்டம்பர் : 1௦, 2௦23
இன்று சர்வதேச தற்கொலை தடுப்பு தினம் 2௦23
தற்கொலை : அதீத மன உளைச்சல்/அழுத்தம், ஏதேனும் உடல்ரீதியாக துன்பம் அடைந்திருந்தால், யாரேனும் மனரீதியாக அல்லது உடல்ரீதியாக துன்புறுத்தி இருந்தால் அதனால் மனம் உடைந்து வெறுத்திருந்தால், யாருக்கேனும் தெரிந்தோ அல்லது தெரியாமலே தீங்கு செய்திருந்து அதனை உணர்ந்து வருந்தி இருக்கும் போது, நமது துணையாக இருந்தவரை இழந்திருந்தால் என பல தரப்பட்ட சமையங்களில் வேறு வழிகளில் யோசிக்க இயலாமல் எல்லாம் அற்றுப்போனதாக விளிம்பில் நின்று கொண்டிருப்பதாக நினைத்து இவை எல்லாவற்றுக்கும் ஒரே முடிவு உயிரை மாய்த்துக் கொள்ளுதல் என்பதாக ஒருவரை உந்தித் தள்ளுவதே தற்கொலைக்கான முடிவு.
மேலே குறிப்பிட்டுள்ளவற்றில் ஏதாவதொன்றில் பாதிக்கப்பட்ட ஆணோ பெண்ணோ தம் வாழ்வில் முடிவு பெற்றதாக சரியான முடிவு எடுப்பதாக நினைத்து தற்கொலை செய்யும் தவறான முடிவினை அந்த சில நொடிகளில் எடுத்து விடுகிறார்கள்.
அப்படி உருவாகும் தற்கொலை எண்ணங்களை இல்லாமல் ஆக்கிடச் செய்திட அவர்களது தனிமையை தவிர்த்துவிடுவதும், நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் நேரத்தை செலவிடுவதும் அல்லது தமக்குப் பிடித்த ஏதோவொரு செயலை எடுத்துச் செய்வதால் தவிர்க்கலாம். இல்லையெனில் அந்த எண்ணம் தலைதூக்கும் போது அரசின் மருத்துவத்துறை கட்டுப்பாட்டில் நேரடியான கவுன்சிலிங் அல்லது தொலைபேசி வழியாக தகுந்த வல்லுனர்களை அமர்த்தி பொறுமையாகவும் அன்பாகவும் பேசி சிக்கலுக்குள்ளான நபர்களின் தற்கொலை எண்ணத்தை முற்றிலுமாக தவிர்த்துவிடும்படி செய்யும் சேவையும் உள்ளது அதிலும் குறிப்பாக இந்தச் சேவையானது இருபத்துநான்கு மணிநேரமும் செயல்படுவது இன்னும் சிறப்பு.
சில நொடிகளில் எடுத்துவிடும் தற்கொலை முடிவு எந்தப் பயனையும் தரப்போவதில்லை எனவே அதற்கு பதிலாக மேற்சொன்னது போல மன அழுத்தத்தை குறைப்பதற்கு பல வழிகளை நாமே தேர்ந்தெடுத்துக் கொள்வதும் அல்லது மிகவும் நெருக்கமான உறவுகளுடனோ அல்லது தோழர்களுடன் பகிர்ந்து கொள்வதும் அவ்வெண்ணத்தை தவிர்க்கச் செய்துவிடும். ஒவ்வொரு வருடமும் தற்கொலை செய்துகொள்வோர் புள்ளிவிவரங்கள் பெரும் அதிர்வை உண்டாக்கி வருகிறது. இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் உட்பட பணிபுரிபவர்கள் என எந்த பாகுபாடும் கிடையாது. இதனை வலியுறுத்தவே ஒவ்வொரு வருடமும் செப்டெம்பர் மாதம் 1௦ ஆம் தேதி உலக தற்கொலை தடுப்பு நாளாக நினைவு கூர்ந்து வரப்படுகிறது.
இத்தகைய நாளை நிச்சயம் நாம் நினைவு கூர்வதும் அதனால் ஏற்படும் விளைவுகளும் இழப்புகளும் சொல்லொனாத் துயரை அளித்துவிடும் ஆகவே தற்கொலை எண்ணம் தோன்றும் போதே அதனை கிள்ளி எறிந்துவிடும் என்பதாக உணரத்தக்க வகையில் இது குறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் விழிப்புணர்வு செய்தியொன்றை வெளியிட்டுள்ளார் மக்கள் நீதி மய்யம் தலைவரான திரு.கமல்ஹாசன் அவர்கள்.
மனிதனால் தாங்க முடியாத துயரம் என்று சொல்வதற்கு எதுவுமில்லை. மனதை இழக்காதவரை நாம் எதையுமே இழப்பதில்லை’ எனும் ப.சிங்காரத்தின் வரிகளைத் துயருற்ற மனங்களை நோக்கிச் சொல்ல விரும்புகிறேன். தற்கொலை எண்ணம் தலைதூக்கினால் துளியும் தயங்காமல், நொடிகூடத் தாமதிக்காமல் ஆலோசகர்களின் உதவியைப் பெறுங்கள். ‘செயலே விடுதலை’ என்பதை உணர்ந்து உங்கள் வாழ்விற்கு அர்த்தமும் அழகும் கூட்டும் காரியங்களில் தீவிரமாக ஈடுபடுங்கள். ‘உயிரின் இயல்பு ஆனந்தம்’ என்கிறார் தேவதேவன். நமக்குக் கிடைத்த இந்த அற்புதமான வாழ்க்கையை ஒவ்வொரு நாளும் கொண்டாடுங்கள் என்று உலகத் தற்கொலைத் தடுப்பு நாளில் கேட்டுக்கொள்கிறேன். – திரு.கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம்
மனநல ஆலோசனை மற்றும் தற்கொலை தடுப்பு மையம் உதவி எண் : 1௦4 (24×7)