ஜனவரி : 25, 2024

உள்ளாட்சி அமைப்புகள் செயல்பாடுகள் என்பது மரத்தின் ஆணிவேர்கள் போன்றது. மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிட ஏற்படுத்தப் பட்டதே அவ்வமைப்புகள். நகரம் மற்றும் கிராமம் தோறும் சாலைகள், குடிநீர் வழங்கல், கழிவுகள் அகற்றுவது, தூய்மையான சுற்றுப்புறங்களை பராமரித்தல், அடிப்படையான மருத்துவ சேவைகள், துவக்ககல்வி, தாய் சேய் நல அமைப்புகள் என பலவும் உள்ளாட்சிகளில் வரும், அவற்றுக்கான செலவினங்களுக்கான நிதிகள் மற்றும் உள்ளாட்சிக்கு சொந்தமான துறைகள் வருமானம் ஈட்டுதல் என பலவும் உண்டு.

அவற்றை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தவும், பொதுமக்களின் குறைதீர்க்கவும், ஆலோசனைகள் மேற்கொள்ளவும் தேவை உள்ளது அதற்காக நடத்தப்படும் கூட்டம் கிராம சபை எனப்படும். இதற்கு முன்னர் நீண்ட காலமாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் இருந்ததை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று பின்னர் நீதிமன்றத்தின் உத்தரவின் படி தேர்தல் முறையாக நடத்தப்பட்டது. தேர்தலில் மக்களின் பிரதிநிதியாக தேர்வு செய்யப்பட்டவர்கள் மற்றும் அப்பகுதி மக்களும் வருடத்தின் குறிப்பிட்ட நாட்களில் ஒன்றாக கூடி அமர்ந்து உள்ளாட்சி அமைப்பின் வருடாந்திர வரவு செலவு கணக்குகளையும் அதற்கடுத்த வருடத்தின் வரைவு அறிக்கையும் தாக்கல் செய்யப்படும்.

இந்நிலையில் நெடுங்காலமாக கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படாமல் இருந்ததை சுட்டிக்காட்டி மக்கள் நீதி மய்யம் இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கிராம சபை கூட்டங்கள் இனி வருடந்தோறும் தவிர்க்கப்படாமல் நடத்தப்பட வேண்டும் என வழக்கு தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் மக்களுக்கு கிடைக்கவேண்டிய உரிமைகள் துரிதமாக சென்று சேர வேண்டும் என்பதை ஏற்றுக் கொண்ட உயர்நீதிமன்ற நீதியரசர்கள் இனி வருடம் தோறும் ஷரத்துகளில் குறிப்பிடப்பட்டுள்ள நாட்களில் ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்பிலும் கிராம சபைகள் நடத்த வேண்டும் உத்தரவிட்டது மக்கள் நீதி மய்யத்தின் சட்டப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.

மேலும் நாளை 26.01.2024 அதாவது குடியரசு தினத்தன்று நடைபெறவிருக்கும் கிராம சபையில் பொதுமக்களுடன் இனைந்து மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் யாவரும் பங்கு கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

“மநீம சட்டப் போராட்டத்துக்கு வெற்றி. மக்களுக்கான முதல் குரல் மய்யத்திடமிருந்து ஒலித்தது ! உள்ளாட்சியின் உரிமைக்குரலாக மய்யத்தின் குரல் உருவெடுத்தது ! உயர்நீதிமன்றத்தின் உத்தரவு, அந்த முதல் குரலை ஊர்ஜிதப்படுத்தியுள்ளது. தவறாமல் நாளை (26-01-2024) கிராம சபையில் கலந்து கொள்ளுங்கள் ! உங்கள் உரிமைகளை, உரக்கச் சொல்லுங்கள்”. திரு.கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம்