சென்னை : மார்ச் 06, 2024

இந்தியா முழுவதும் ஆங்காங்கே பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான பாலியல் பலாத்காரங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்த வண்ணம் இருக்கிறது. அதில் ஈடுபடும் ஆண் கயவர்களின் வயது வித்தியாசங்கள் ஏதுமில்லை இளவயது மற்றும் முதிய வயது என கொஞ்சமும் ஈவு இரக்கமில்லாமல் மூதாட்டி மற்றும் கைக்குழந்தையை கூட விட்டு வைக்காமல் உடல்ரீதியாக மற்றும் மன ரீதியாக பாலியல் தொல்லைகளையும் கணக்கற்ற முறையில் வன்புணர்வுகளையும் செய்துவிட்டு மனம் பதைக்கும் முறையில் கொலையும் செய்து கண்ட கண்ட இடங்களில் வீசி விடுகிறார்கள். பிற்பாடு மேற்கொள்ளப்படும் காவல்துறையினரின் ஆய்வுகள் மூலமாக இந்த படுபாதக செயல்கள் வெளிச்சத்திற்கு வருகிறது. ஆனால் அதற்குள்ளாக சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் தப்பித்து போய் விடுவதும் அதே சமயம் அவர்களை தேடிப்பிடித்து சட்டத்தின் முன் நிறுத்தும் சம்பவங்களும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

நேற்று கூட இந்த பிள்ளை பக்கத்து வீட்டுப் பையன் கூட விளையாடிக்கொண்டு இருந்ததே அவனா இப்படி இந்தக் குழந்தையை சீரழித்து புதரில் வீசி இருக்கிறான் எனும் அதிர்ச்சியும் ஆதங்கங்கள் கொண்ட கேள்வியும் அருகில் உள்ளவர்களின் மத்தியில் ஒருவருக்கொருவர் கேட்டுக் கொள்கிறார்கள். ஆனால் உண்மையில் அவரவர்க்கு அது ஓர் செய்தியாக மட்டுமே கடந்து போய் விடுகிறது. சிறிது காலம் கழித்து பிறிதொருநாள் இப்படி கேள்விகள் கேட்டுக்கொண்டவர்கள் மத்தியில் யாரோ ஒருவரின் குடும்பத்தில் இதே போன்ற கொடுஞ்சம்பவம் நடக்கும்போது எல்லாம் அற்றுப் போனதாக உணரப்படுகிறது.

ஏதோ சில பல குடும்பத்திலும் குறைந்தபட்சம் ஒருவரேனும் ஏதோவொரு போதைக்கு அடிமையாக கிடக்கின்றனர். அது மது அல்லது கஞ்சா போன்ற ஏதோ ஒன்று. இந்த போதைக்கு சிக்குண்டு போனவர் தன்னிலை மறப்பதும் பிறர்நிலை உணராமலும் இருப்பதும் என்றாவது ஓர் நாள் எல்லாவற்றுக்கும் உச்சமாய் இது போன்ற கொடூர செயல்களில் ஈடுபட்டு குற்றம் செய்துவிட்டு தமது வாழ்க்கையை தொலைத்ததோடு இல்லாமல் தம் குடும்பத்தையும் நடுவீதிக்கு கொண்டு வந்து நிறுத்திவிட்டு சிறைக்கு சென்று விடுவதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

போதை வஸ்துக்களின் புழக்கம் தீவிரமாக இருந்தாலும் அவற்றைக் கட்டுப்படுத்தி இல்லாமல் அறவே ஒழிப்பது என்பது கடும் சவாலாக இருந்து வருகிறது. இந்தியாவின் பல்வேறு வாயில்களின் வழியாக சர்வதேச நாடுகளின் போதை வஸ்துக்கள் பல வழிகளில் நமது தெருமுக்கு வரை வந்து சேர்ந்து விடுகிறது. சும்மா ஒருமுறை முயன்று பார்ப்போமே அதில் என்ன தான் இருக்கிறது என்று அதை மெதுவாக தொடுவதும் கொஞ்சம் கொஞ்சமாக உபயோகப்படுத்திக்கொண்டே வருகையில் நாளடைவில் முழுதும் ஆக்கிரமித்து பின் அதிலேயே மூழ்கிப் போவதும் நாம் எதிர்பாராத ஒன்று. இதில் பெற்றோர்களின் வளர்ப்பில் தீவிரமாக கண்காணிக்கப்படுவதும் இருந்தாலும் சிலர் நேர்வழியில் இருந்து தடம்புரண்டு இப்படி போதைச் சேற்றில் சிக்கிச் சீரழிந்து போவது தன்னொழுக்கம் மற்றும் சுயக்கட்டுப்பாடு இல்லாமல் போவதால் தானேயொழிய வேறன்ன நாம் பெரிதாய் சொல்லி விட முடியும்.

இங்கே போதையுண்டு சித்தம் கலங்கி நிற்கும் இளம்பிள்ளைகளை நாம் சபித்துக்கொண்டு திட்டித் தீர்க்கும் அதே வேளையில் அவர்களின் வாழ்க்கையை அழிக்கும் அந்த போதை வஸ்து எனும் அரக்கனை அழித்தொழிக்க நாம் என்ன செய்ய வேண்டும் ? உடன்பிறந்த தங்கையாக, அக்காவாக, மகளாக, பேத்தியாக நினைக்க வேண்டியவர்களே பெண்கள் மற்றும் பெண்குழந்தைகளின் உயிருக்கு உலையாக மாறிடும் அவலங்கள் என்று மாறுமோ ?

இதெற்கெல்லாம் தீர்வாக நாம் என்ன செய்ய போகிறோம் ?

சமீபத்தில் பெண்கள் மீதான, மன்னிக்கவும் சமீபத்தில் என்று தற்போதைய செய்தியாக மட்டுமே கூறிவிட முடியாது பல ஆண்டுகளாக கொடூரச் செயல்கள் பெண்கள் மீது வல்லுறவுகள் நடந்து கொண்டுதானிருக்கிறது என்பது வேதனை தரும் செய்தி. அப்படி தொடர்ந்தாற்போல் நடைபெற்று வரும் பாலியல் சீண்டல்கள் மற்றும் பலாத்காரங்கள் குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் மிகுந்த வலியுடனும் வேதனையுடனும் பல கேள்விகளையும் எழுப்பியுள்ளார் தனது ஆதங்கத்தினை அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.

அதனை அப்படியே உங்களின் பார்வைக்கு இதோ இங்கே பதித்துள்ளோம்.

“எங்கே போகிறோம் ?

புதுச்சேரியில் 8 வயது சிறுமி கடத்திக் கொல்லப்பட்டு சாக்கடையில் வீசப்பட்டிருக்கிறாள்.

உலகின் பாதி நாடுகளைச் சுற்றிப் பார்த்துவிட்டு இந்தியாவிற்கு வந்த வெளிநாட்டுப் பெண்ணை ராஞ்சியில் ஒரு கும்பல் வன்புணர்வு செய்திருக்கிறது.

மங்களூருவில் காதலிக்க மறுத்த பள்ளி மாணவியின் முகத்தில் ஆசிட் வீசப்பட்டுள்ளது.

சென்னையில் காதல் திருமணம் செய்துகொண்ட பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்த இளைஞன் பெண்ணின் சகோதரனால் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டுள்ளான்.

குஜராத், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் பல கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. ஒரு சமூகமாக நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம் எனும் ஆழமான ஐயத்தை இந்தச் சம்பவங்கள் ஏற்படுத்துகின்றன. ஒருபுறம் வளர்ச்சி, வல்லரசு, நல்லாட்சி என்று பெருமை பேசிக்கொண்டிருக்கிறோம். மறுபுறம் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற, போதையின் பிடியில் சீரழிகிற, சாதி மத வெறி பிடித்தாட்டுகிற சமூகமாக மாறிக்கொண்டிருக்கிறோம். மானுட நேயத்தைத் தொலைத்துவிட்டு மிருக நிலைக்குத் திரும்புவதை வளர்ச்சி என்று கருத முடியுமா? குற்றங்கள் எதுவாயினும், அதன் காரணிகள் எவையாக இருந்தாலும் எல்லாவற்றுக்குப் பின்னாலும் இருப்பது மனிதத்தன்மையை மரத்துப்போகச் செய்யும் போதைவஸ்துகள்தான். போதை வஸ்துகள் சகஜமாகப் புழங்கும் தேசத்தில் பெண்களும் குழந்தைகளும் பாதுகாப்பாக வாழவே முடியாது என்பது நிதர்சனம். இந்தச் சீரழிவை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்காவிடில் எதிர்காலம் நம்மை மன்னிக்காது. போதைப் பொருட்களுக்கு எதிரான நமது குரல் வலுக்கட்டும். சமூகத்தைச் சீரழிக்கும் போதைக் கும்பலுக்கு எதிராக நம் எல்லோரது கரங்களும் இணையட்டும். போதையில்லா தேசத்திற்குப் பாதை போட ஒவ்வொருவரும் களமிறங்குவோம்.

திரு.கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம்

ஆரோக்கியம் பேணுவது – கமல்ஹாசன்
2000-ம் ஆண்டில் அனைவருக்கும் ஆரோக்கியம் என்ற இன்றைய முழக்கங்கள் உண்மை ஆகிறதோ, இல்லையோ, தேக ஆரோக்கியத்தின் அவசியமும், அது வேண்டும் என்ற ஆசையும் 2000-ல் தமிழ் இளைஞர்களுக்கு வந்தால் அது தமிழக பாக்கியம். ஆரோக்கியத்தைப் பற்றி அதிகம் கவலைப்படாத இன்றைய பல பான்பராக், பன்னீர் புகையிலை, ஜர்தா என்றிருக்கும் நகரத்து மைனர்களும், கிராமத்தில் மலிவு விலை போதையில் விகல்பமில்லாமல் போதை நாடும் 30 வயதுக்காரர்களும் 2000-ல் அன்றைய இளைஞர்களின் மூத்த தலைமுறையினர் என்ற உபதேச வயதை அடைவர். அன்றாவது அவர் புதிய போதைகளின் அபாயம் உணர்வர் எனக் கொள்வோம். அந்த உணர்வில் வரும் உபதேச உத்வேகங்கள் கால தாமதமானவையாகவே இருக்கும்.

இன்று நகரங்கள் எங்கும் முளைத்திருக்கும் பாலி க்ளினிக்குகள், பெருத்த தனியார் மருத்துவமனைகள் யாவும் 2000-ல் நன்கு செயல்பட்டாலும், அவை அன்றைய நவீன நோய்க்கு சிகிச்சை மாத்திரமே செய்யமுடியும். அன்றைய நிலையில் ஆரோக்கியம் பேணுவது அவரவர் தனிக் கடமையாகவும் ஒருங்கே நாட்டிற்கு நலம் செய்யும் கடமையாகவும் இருக்கும். நான் ஏதோ உடற்பயிற்சிக்கு வக்காலத்து வாங்குவதாக எண்ணி முகஞ்சுளிப்பவர்கள் இன்றைய பெரும்பாலான தமிழர்களின் மனோநிலை பிரதிநிதிகள். நான் குறிப்பிடும் ஆரோக்கியப் பேணல் ஜீவாதார அத்தியாவசியம். உயிர்காப்பின் ஆரம்பப் பாடங்களான உணவு, உடற்பயிற்சி போன்றவை சுவாரஸ்யமில்லாத விஷயமில்லை. 2000-ல் கொடிகட்டி ஆளப்போகும் ராட்சச போதையிலிருந்து நாம் தற்காத்துக் கொள்ள வேண்டியது அவசியம். 2000-ல் தமிழக மக்களின் குணாதிசயம் அபார மாற்றத்தை அடையுமென்று நான் எதிர்பார்க்கவில்லை. நல்ல தமிழ்ப் பேச்சையும், சினிமாவையும் அருகதைகளாக நம்பி, தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் தமிழர்களின் குழந்தை மனம் அன்றும் மாறாமல் இருக்கும் நிலையில், ஹெராயினும் கொக்கேய்னும் ஆட்சிக்கு வரும்.

கொக்கெய்ன், ஹெராயின் என்றால் என்னவென்று தெரியாத கிராமத்துவாசிகள் இதையெல்லாம் பழக வெகு நாட்களாகும். அதற்குள் உலக அளவில் இதற்கான தற்காப்பு கண்டுபிடிக்கப்பட்டுவிடும் என நினைப்பவர்கள் பகல் கனவு காண்பவர்கள். கொக்கெய்னுக்கும் ஹெராயினுக்கும் ஸ்மேக்குக்கும் தமிழாக்கம் தேவையில்லை. படித்தவன், படிக்காதவன், ஏழை, பணக்காரனென்று பாரபட்சமில்லாமல் ஒருங்கே அடிமைத்தனம் கற்றுக்கொடுக்கப் போகும் புதிய சர்வாதிகாரிக்கு இந்தியக் கல்லூரிகள் மெதுவாக பராக் சொல்ல ஆரம்பித்துவிட்டன. பயப்படும் அளவிற்கு தமிழகத்தில் போதைப் பொருட்கள் இல்லை என்று அரசியல்வாதிகளும், காவல் துறையினரும் சொன்னாலும் உண்மை அவர்களின் கூற்றிலிருந்து மாறுபடும். இவ்வுண்மை தெரிந்தவர்கள் ஊதும் அபாயச் சங்கு, அரசியல்வாதிகள் யார் காதிலும்
சரியாக விழவில்லை.

ஆண்டொன்றிற்கு 750 கிலோ ஹெராயின் சென்னை வழி சர்வதேசச் சந்தைகளுக்குச் செல்வதாக ஆதாரபூர்வமான செய்திகள் சொல்கின்றன. இந்த ராட்சச போதையைத் தாங்கும் வைத்திய வசதியோ, பொருளாதாரமோ இந்தியாவுக்கு இல்லை.

இந்தியாவிலும், மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் உள்ளது போல் ஹெராயின் போன்ற போதைப் பொருட்களுடன் பிடிபட்ட எந்தக் குடிமகனுக்கும் உச்சபட்ச தண்டனை என்ற சட்டம் வரவேண்டும்.

இது ஏதோ மய்யத்திலிருப்பவர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மையில்லை. பரவலாகப் பலருக்கும் தெரிந்த உண்மை. முக்கியமாக, அரசியல் தலைவர்களுக்குத் தெரியும். இருப்பினும் தலைநகரில் தங்கள் சச்சரவுகளைத் தீர்த்துக்கொள்ளவே நேரம் கிடைக்காமல் தவிக்கும் தலைவர்களுக்கு இது பெரிய அபாயமாக தோன்ற வாய்ப்பில்லை.

வறுமைதான் இன்றைய முக்கிய பணி, போதை எல்லாம் மேட்டுக்குடியின் சோகங்கள் என்பவர்களின் கூற்று சரியில்லாதது.

வறுமையை சற்று நிதானமாகப் போக்குவதால் ஏற்படப்போகும் மனித சேதத்தை விட அதிகமான தேசிய, மனித சேதத்தை இந்த ராட்சச போதை ஏற்படுத்தும். இதன் முன் உதாரணமாகத் திகழும், அமெரிக்கா இந்த போதைக்கு அடிமையானவர்களுக்கான சிகிச்சை முறைகளை மட்டுமே கற்றுத்தர முடியும். இதிலிருந்து தப்பிக்கும் தற்காப்பை நாம் சிங்கப்பூரிடம்தான் கற்கவேண்டும். அந்தத் தற்காப்பும் நாளை வரப்போகும் அரசியல்வாதிகள் சிலர் இந்த போதை வியாபாரத்திலும் கமிஷன் வாங்கிப் பிழைக்க நினைக்காமல் இருந்தால் தான் சாத்தியமாகும்.

அன்பன்,
கமல்ஹாசன் (ஆகஸ்ட் 1990)
நன்றி : மய்யம் தேர்ந்தெடுத்த படைப்புகள்

“குற்றங்கள் எதுவாயினும், அதன் காரணிகள் எவையாக இருந்தாலும் எல்லாவற்றுக்குப் பின்னாலும் இருப்பது மனிதத்தன்மையை மரத்துப்போகச் செய்யும் போதைவஸ்துகள்தான்.” மக்கள் நீதி மய்யம் IT WING

#SayNoToDrugs #JusticeForAarthi #DrugFreeSociety #MakkalNeedhiMaiam #SaveGirl #SaveWomen