ஆட்சி ஏறிய 9 மாதங்களில் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக கொடுத்துக்கொண்டே இருக்கிறது திமுக அரசு.

கொரொனோ தொற்றை காரணம் காட்டி கிராம சபைகளை ரத்து செய்யும் அதிகாரம் உடைய அரசுக்கு அதே இக்கட்டான காரணத்தை அவ்வளவாக வருமானம் இல்லாமல் சொற்பமான தொகைகள் சம்பளமாக கூலியாக பெரும் மக்களின் நலனில் அக்கறை காண்பித்து டாஸ்மாக் கடைகளை மூடிவிடலாமே அதற்கு ஏனோ இவ்வரசுக்கு மனம் இல்லை.

தேர்தல் அறிவிப்பு வந்ததும், தேர்தல் பணிகளில் வியூகம் வகுக்கும் தனியார் நிறுவனம் ஒன்றை நியமித்து பலவழிகளில் போட்டோ ஷூட்கள் செய்தும், 500+ வாக்குறுதிகள் கொண்ட பட்டியலை தயார் செய்து பாடல்களை ஒலிக்கவிட்டு ஜெயித்த கதை என்னவென்று எல்லோருக்கும் தெரிந்ததே.

அதில் மிக முக்கியமாக மக்களுக்கு சொன்னது மின்சார கட்டணம் இனி மாதா மாதம் கணக்கிட்டு அதற்கான அடுத்த சில தினங்களுக்கு பிறகு செலுத்தும்படி மாற்றியமைக்கும் திட்டத்தை செயல்படுத்தும் என்ற ஓர் வாக்கு. ஆனால் இன்றுவரை அதற்கான எந்த அறிவிப்பும் வரவில்லை அதுவும் கிணற்றில் மன்னிக்கவும் கடலில் போட்ட கல்லாக தேர்தல் அறிக்கையில் மட்டுமே இருக்கிறது.

இதனிடையில், அனல் மின் நிலையங்களில் மின்சார உற்பத்தியை செயலாற்ற தேவைப்படும் நிலக்கரி கையிருப்பு அவ்வளவாக இல்லை எனவும் இதுவரை டன் கணக்கில் நிலக்கரி ஸ்டாக் இல்லாமல் காணமல் போய்விட்டது எனவும் செய்திகள் வெளியாகவே மாவட்டங்கள் தோறும் வீடுகள் மட்டுமல்ல மக்களின் வயிறெல்லாம் இருண்டு போனது.

ஏதும் முன்னறிவிப்பின்றி துண்டிக்கப்பட்ட மின்சார சேவை அதன் காரணம் அணில்கள் கடித்து துண்டித்து விடுவதால் அடிக்கடி அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படுவதாக மாண்புமிகு மின்சாரத்துறை அமைச்சர் திரு செந்தில் பாலாஜி சொன்ன பதில் ட்ரோல் செய்யப்பட்டு வைரலாகிப் போனது தனி கதை.

சரி அதையெல்லாம் ஒரு பக்கம் வையுங்கள், அடுத்து வரப்போகும் முக்கியமான சங்கதி அடுத்து வருகிறது பாருங்கள்.

காற்றாலை மின் உற்பத்தியில் ஊழல் நடந்து இருப்பதாக 2018 இல் அப்போதைய எதிர்க்கட்சி தலைவராக இருந்த இப்போதைய முதல்வர் திரு ஸ்டாலின் அவர்கள் மின்துறை அமைச்சர் தங்கமணி மீது குற்றம் சாட்டினார், அதை அமைச்சர் தங்கமணி மறுத்துப் பேசியது ஒரு ட்ராக். தூத்துக்குடியில் உள்ள இந்த் பாரத் எனும் நிறுவனம் சென்னை மற்றும் ஈரோட்டில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு மின்சாரத்தை விநியோகம் செய்து அதற்கான கட்டணத்தை பெற்றுக் கொண்டார்கள் ஆனால் இந்த் பாரத் நிறுவனம் மின்சாரத்தை உற்பத்தி செய்யாமலே மின்சாரத்துறை தொகுப்பில் இருந்து விற்பனை செய்தது தெரியவந்தது அதற்கான கட்டணத்தை அந்த நிறுவனம் தமிழ்நாடு மின்சாரதுறைக்கு தான் செலுத்த வேண்டும். இதை கண்டுபிடித்து சொன்னதே நெல்லையை சேர்ந்த மின்சார தணிக்கை குழுவினர் தான்.

மின்சாரத்துறையில் இருந்து முறைகேடாக மின்சாரத்தை வழங்கிய காரணத்திற்கு உடந்தையாக இருந்த 3 அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டு முறைகேடில் ஈடுபட்ட இந்த் பாரத் எனும் நிறுவனம் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது எனவும் பேட்டியளித்தார் அப்போதைய அமைச்சர் தங்கமணி.

மேற்சொன்ன இந்த் -பாரத் நிறுவனம் மீது தமிழக அரசு மூலமாக பதியப்பட்ட வழக்கின் சாராம்சமும் அதன் வரலாறும் படிக்க படிக்க தலை சுற்றுகிறது (தேவையெனில் அதற்கான தரவுகளை கீழே தந்துள்ளோம்). ஆனால் இந்த முறைகேடை பற்றியும் அதன் வழக்கு பற்றியும் எந்த தமிழ் ஊடகமும் இதுவரை பேசியதாக அல்லது செய்திகளை வெளியிட்டு உள்ளதாக தெரியவில்லை (ஒருவேளை அப்படி இருக்கிறது எனில் எங்களுக்கு தந்து உதவலாம்).

இந்த் பாரத் இன்ப்ரா லிமிடெட் எனும் நிறுவனத்தின் வணிகம் மற்றும் சட்டபிரிவு தலைவராக (Executive Vice President – Commercial & Legal) இருக்கும் ஜெரார்ட் கிஷோர் என்பவரை திமுக அரசால் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மீது தொடுக்கப்படும் வழக்குகளை விசாரிக்கும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் (TNERC) உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து கடந்த மாதம் (ஜனவரி 2022) 12 ஆம் தேதியன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரை சந்தித்து தன்னை நியமனம் செய்ததற்காக நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.

வழக்கு தொடுத்தவரையே அந்த வழக்குகளை விசாரணை செய்து தீர்ப்பு எழுதும்படி நீதிபதியாக நியமிப்பது எந்த வகையில் நியாயம் என்று அறப்போர் இயக்கம் கேட்பது 100 சதவிகிதம் நியாயமானது.

https://www.casemine.com/judgement/in/5dd2ecdd46571b625caec3bf

https://www.newindianexpress.com/cities/hyderabad/2020/oct/11/cbi-obtains-report-on-ind-baraths-financial-dealings-2208692.html