சென்னை, மார்ச் 14, 2022

2010 இல் சட்டம் இயற்றியும் சுமார் 12 ஆண்டுகளாக எந்தவித முன்னெடுப்புகளும் இல்லாமல் கிடப்பில் போடப்பட்டு இருந்த உள்ளாட்சிகள் அமைப்பு நிர்வாகத்தில் ஏரியா சபை, வார்டு கமிட்டி என மக்களும் பங்கு பெரும் வகையில் இருக்கும் வசதியை ஏற்படுத்தி தருமாறு தமிழக அரசை மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது மேலும் அதற்கான வேண்டுகோள்/கோரிக்கைகள் அடங்கிய மனுவினை தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச்செயலர் அவர்களை சந்தித்து சென்ற மாதம் அளித்தார். அது மட்டுமில்லாமல் கட்சியின் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் நிர்வாகிகளை அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் மனுக்களை அளிக்கச் செய்தார்.

தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் நினைவூட்டிக்கொண்டிருந்த வேளையில் இன்று மாண்புமிகு தமிழக முதல்வர் திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் ஏரியா சபை, வார்டு கமிட்டி அமைப்புகளை நடைமுறைப்படுத்த செய்யும் அறிவிப்பினை செய்தார்.

சமீபத்தில் நடந்த மாவட்ட ஆட்சித்தலைவர்கள், காவல் துறை, வனத்துறை அலுவலர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட முதல்வர் விரைவில் ஏரியா சபை, வார்டு கமிட்டி ஆகியவை நடைமுறைப்படுத்தப்படும் என அறிவித்தார்.

இந்த அறிவிப்பினை மக்கள் நீதி மய்யம் சார்பாக வரவேற்கிறேன், அதே சமயம் இந்த நடைமுறையை நகராட்சி மாநகராட்சிகளில் மட்டுமல்லாமல் பேரூராட்சிகளிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அதற்குரிய சட்ட திருத்தத்தை தமிழக அரசு கொண்டுவரவேண்டும் என்று தமிழக முதல்வரை வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.