தமிழகம், மார்ச் 09, 2022

உள்ளாட்சித் தேர்தலில் கிடைத்துள்ள அதிகாரங்களை அதன் மகத்தான உரிமைகளை உறுதி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

நகர்ப்புற பகுதிகளில் ஏரியா சபையை நடைமுறைப்படுத்தி, வெளிப்படையான உள்ளாட்சி நிர்வாகத்தை உறுதி செய்ய நம்மவர் டாக்டர் கமல்ஹாசன் மற்றும் மாநில நிர்வாகிகள் தலைமை செயலாளரை சந்தித்து வலியுறுத்தி அளித்த கோரிக்கை மனு.

அதிகாரப்பரவலாக்கல் மூலம் சிறந்த அரசு நிர்வாகத்தை தரமுடியும் என்பதில் மக்கள் நீதி மய்யம் அசையா நம்பிக்கை வைத்துள்ளது. மாநிலத்தை சுயாட்சி செய்யும் முறையில் நடைபெறும் அமைச்சுப் பணிகள் போல உள்ளாட்சிகள் தன்னாட்சியுரிமை கொண்டதாக நடைபெற வேண்டும். அவ்வாறு நடைபெறும் என்றால் கிராம சுயாட்சிக்கு வழி வகுக்கும். கிராமங்களில் அமைக்கப்படும் கிராம சபை போன்ற மக்கள் பங்கேற்கும் நிகழ்வுகள் தொடர்ந்து ஆண்டுக்கு நான்கு முறைகள் நடைபெறுமானால் எந்த ஒளிவுமறைவின்றி நடைபெறும்.

பொதுமக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து ஆலோசிக்கும் வாய்ப்பு உருவாகிறது, மேலும் இதன்மூலம் பஞ்சாயத்தின் வரவு செலவு கணக்குகள், உள்ளூரில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் ஆகியவை பொதுமக்களுக்கு வெளிப்படையாக தெரியவருகிறது. கிராமசபைகளைப் போலவே நகரங்களிலும் பங்கேற்கும் வகையில் தமிழக அரசு தமிழ்நாடு நகராட்சி சட்டங்கள் திருத்தச்சட்டம் 2010 எண் 35 இயற்றியது 02.12.2010 தேதியிட்ட அரசிதழ் வெளியானது.

இந்தச் சட்டம் மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் மக்கள் பங்கேற்புடைய ஏரியா சபை மற்றும் வார்டு கமிட்டி அமைப்புகளை உருவாக்க வழிவகைகளைச் செய்கிறது. இந்தச்சட்டம் உருவாக்கப்பட்டு 11 ஆண்டுகள் ஆகியும் இதனை நடைமுறைக்கு கொண்டுவருவதற்கான செயல்முறை விதிகள் உருவாக்கப்படாதததால் இன்றுவரை அமல்படுத்தப்படாமல் இருக்கிறது.

இந்தச்சட்டம் அமல்படுத்தப்படவேண்டும் மக்கள் நீதி மய்யம் கடந்த பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதி அன்று தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களும், துணைத்தலைவர்கள் மற்றும் மாநில செயலாளர்கள் கொண்ட குழுவினர் சென்னையில் மாவட்ட ஆட்சியரிடம் அதற்கான மனுவை அளித்து வந்தோம். மேலும் தமிழகம் முழுக்க அந்தந்த மாவட்டங்களில் ஆட்சியரிடம் மய்யம் சார்பாக கோரிக்கை மனுக்களை அளிக்கச் சொன்னோம்.

அதன் தொடர்ச்சியாக வேலூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் வேலூர் நகராட்சி நிர்வாகம் மண்டல இயக்குனர், துணை இயக்குனர் மற்றும் ஆணையர் ஆகியோர்களுக்கு ஏரியா சபை மற்றும் வார்டு கமிட்டி அமைப்புகளை நடைமுறைபடுத்தக் கோரி மக்கள் நீதி மய்யம் அளித்த மனுவை குறிப்பிட்டு மேற்கொண்டு அதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு அலுவல் ரீதியான கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

இத்தனை ஆண்டுகளாக இப்படி ஓர் உன்னதமான திருத்தப்பட்ட சட்டத்தினை எவருக்கும் தெரியாதவண்ணம் வைத்துக்கொண்டிருந்த அரசியல்வாதிகள் மொத்தமாக மறைந்து போகும் நாள் வெகு தூரத்தில் இல்லை.


https://www.vikatan.com/government-and-politics/politics/tn-govt-must-implement-right-to-services-act-immediately-mnm-kamalhassan