சென்னை ஏப்ரல் 28, 2022
யாரோ ஒருவர் தன் வீட்டில் இருக்கும் பிள்ளையோ கணவனோ மனைவியோ அல்லது அருகிலிருந்த உற்றாரோ உறவினரோ நண்பரோ அல்லது எவரோ அவருக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டால் தமது மருத்துவத்துறையை மற்றும் மருத்துவ சேவையை பெரிதும் போற்றும் ஒவ்வொரு மருத்துவரும் என்ன ஏதென்று விசாரிக்காமல் முதலில் சிகிச்சையை தொடங்கி அதைச் சிறப்புற தந்து உயிர் காப்பார்கள். அவர்களுக்கு பணி செய்ய நேரமோ காலமோ இல்லை பேராபத்து என்றால் கூட சடக்கென்று கிளம்பி போராடும் உயிர் காக்க சென்று சேர்வார்கள்.
பிணியாளர்களின் இன்னல் போக்கிட அவர்களுக்கு ஊசியோ மருந்துகளோ மாத்திரைகளோ மட்டுமல்லாமல் மனம் நம்பிக்கை கொள்ளும் வார்த்தைகளை விதைப்பதே மருத்துவர்களின் மிகச்சிறந்த பணி.
அத்தகைய மருத்துவர்களின் நலன் காக்க அவர்களின் தகுதிகளுக்கேற்ப வரையறுக்கப்பட்ட ஊதியங்களை நிச்சயம் தவறாமல் அதையும் காலம் தாழ்த்தாமல் வழங்குவது அரசின் தலையாய கடமை.
கொரொனோ தொற்றின் பேரிடரில் சிக்கித்தவிக்கும் மக்களுக்கு முன்னின்று போராடி கூடுமானவரை உயிரிழப்புகளை தவிர்க்க பெரும்பாடுபட்டு பணிபுரிந்த முன்களப் பணியாளர்களில் முக்கியமானவர்கள் மருத்துவர்கள் அவர்கள் இல்லாமல் எந்த ஆட்சியாளர்களும் நாங்கள் தான் இப்பேரிடரில் திறம்பட செயல்பட்டோம் என்று மார்தட்டிக் கொள்ள முடியாது.
சென்ற அதிமுக ஆட்சியில் ஊதிய உயர்வை கேட்டு போராடிய மருத்துவர்களின் நம்பிக்கையில் நுழைந்து திமுக ஆட்சிக்கு வந்ததும் பணி நிரந்தரமும் ஊதிய உயர்வுகளும் நீண்ட நெடுங்காலமாக தரப்படவேண்டிய சலுகைகளையும் உடனடியாக நிறைவேற்றித் தருவோம் என்று அளித்த உறுதிகளின் படி இன்னும் செய்யாமல் காலம் தாழ்த்தி வருவது கேள்விக்குரியது.
ஆட்சியேற்று ஓர் ஆண்டு நிறைவடையும் தருவாயிலும் சொன்னதை செய்து தராமல் இருக்கும் அரசினை கேட்கும் மருத்துவர்கள் மீண்டும் வீதியில் இறங்கி போராட்டத்தினை கையில் எடுத்துள்ளார்கள்.
ஒரு பக்கம் நீட் தேர்வினை எதிர்த்து சமூக நீதியை நிலைநாட்ட பேசி வருவதும் அதன் எதிர்ப்பதமாக மருத்துவர்களுக்கு நியாயமாக அளிக்க வேண்டிய சலுகைகளையும் ஊதிய உயர்வுகளையும் அள்ளிப்பதன் மூலம் ஆண்டுக்கு 300 கோடி ரூபாய் வரை செலவினம் ஏற்படும் என்று சொல்லும் மருத்துவ சங்கங்களின் புள்ளி விவரங்கள் வைத்துப்பார்க்கும்போது இவை ஒன்றும் பெரிதென தோன்ற வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. மக்களின் நலனை கருத்தில்கொண்டு பார்க்கும் போது இது செலவினம் அல்ல மக்கள் நலனில் அரசு செய்யும் முதலீடு என்றே நினைவில் கொள்ள வேண்டும்.
வருகிற ஜூன் மாதம் 3 ஆம் தேதி முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட முனையும் உங்களின் அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு அரசாணை 354 உடனடியாக செயல்படுத்தும் அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது.