ஸ்ரீவில்லிபுத்தூர் மே 11, 2022

எனது ஆட்சியில் எவர் தவறு செய்தாலும் அதை நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன் ஏன் என்றால் கழக ஆட்சியில் எந்த களங்கமும் வந்துவிடக்கூடாது என்பதில் எனது தலைமையில் உள்ள திமுக அரசு உறுதி பூண்டுள்ளது எனும்படியாக சொல்லிக்கொண்டே இருப்பவர் நமது தமிழக முதல்வர்.

எண்ணிக்கை சரியாக தெரியவில்லை எனினும் அவ்வபோது இது போன்ற அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வந்தவண்ணம் இருப்பது வேதனையை தருகிறது. காவல்துறையினரின் பார்வை இன்னும் கூர்மையாக்கப் படவேண்டும் என்பதே உண்மை எனலாம்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பாலியல் தொல்லை கொடுத்தாக திமுக நிர்வாகி மீது பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் சம்பந்தப்பட்டவர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி காவல் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

மம்சாபுரம் கிராமத்தில் வசித்து வரும் திருமதி கவிதா என்பவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரைப் பிரிந்து தன் இரு குழந்தைகளுடன் தனது தாய் வீட்டில் வசிக்கும் இவர் வருமானத்திற்காக வீடு வீடாக சென்று அப்பளம் மற்றும் வெள்ளைப்பூண்டு விற்று அதில் கிடைக்கும் சொற்ப லாபத்தில் குடும்பம் நடத்தி வருகிறார்.

முன்னாள் அதிமுக பேரூர் கழக துணைத்தலைவராக இருந்தவரும் பின்னர் திமுகவில் இணைந்த பிரமுகர் அய்யனார். இவர்தான் மேற்கண்ட கவிதாவிற்கு கடந்த இரண்டு மாதங்களாக பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. கணவரைப் பிரிந்து வாழும் கவிதாவிற்கு அரசு வேலை வாங்கித் தருவதாகவும் அதற்காக தான் சொல்லும் கட்சியின் முக்கியப் பிரமுகர்களுடன் பாலியல் ரீதியாக நேரம் செலவிட வேண்டும் என்றும் தொடர்ந்து வற்புறுத்தி வருவதாக மட்டுமில்லாமல் மிரட்டலும் செய்தார் எனத் தெரியவருகிறது.

தனது அடியாட்களுடன் கவிதாவின் வீட்டிற்குச்சென்று தான் சொல்வதை நிச்சயம் கேட்டே ஆகவேண்டும் என்று வற்புறுத்தியதோடு நில்லாமல் கவிதா மற்றும் அவரது வயதான தாயாரையும் தாக்கி உள்ளதாக சொல்லப்படுகிறது.

இதனால் மனமுடைந்த கவிதா இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகாரளித்தும் அய்யனார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கும் நிலையை விளக்கியும் இதில் தலையிட்டு தனக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் அய்யனாரை விசாரணைக்கு உட்படுத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வரின் தனிப்பிரிவிற்கு, மாவட்ட காவல்துறைத்தலைவர் ஆகியோருக்கும் மனுக்களை அனுப்பியும் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறும் கவிதா தனது உறவினர்களுடன் மம்சாபுரம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் கவனத்திற்கு சென்றிருக்கலாம் என நம்பப்டுகிறது.

இது திராவிட மாடல் ஆட்சி என்று நொடிக்கு நொடி கூறிகொள்ளும் தமிழக அரசின் நடவடிக்கை இது போன்ற கண்டிக்கப்படவும் தண்டிக்கப்படவும் வேண்டிய செயல்களை உடனடியாக விசாரித்து அதன் மீது துரிதமாக நடவடிக்கை எடுக்க ஆவண செய்யுமா ?

Courtesy : Puthiyathalaimurai TV