திருவள்ளூர், ஜூலை 26, 2022

எதனால் என்று உணரமுடியாமல் தொடரும் மர்ம மரணங்கள். அவை தற்கொலையாக அல்லது கொலையாக இருக்கக்கூடும் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. அதுவும் குறிப்பிட்டு சொல்லும்படியாக பதின்ம வயதுடைய மாணவிகள் தொடர்ச்சியாக தங்கள் உயிரை இழந்து கொண்டிருக்கிறார்கள்.

எப்படி எதற்கு ஏன் என்று நமக்குள் ஆயிரம் வினாக்கள் எழுந்தவண்ணம் உள்ளது. 2000 ஆவது ஆண்டிலிருந்து பிறக்கும் குழந்தைகள் அறிவுத்திறன் அபாரமாக கொண்டவர்களாக இருக்கும் என பரவலாக அறியப்டுகிறது. புத்திக்கூர்மையுடன் காண்பதை கேட்பதை படிப்பதை சிறப்பாக செய்வார்கள் என பல வல்லுனர்கள் சொல்லக்கேள்வி.

அதுபோல் வளர்ந்து வருகிறார்களா என்றால் அதற்கான சரியான புள்ளிவிவரங்களை தரவுகள் மூலம் பெற முடியுமானால் நன்று.

மத்திய அரசால் சட்டம் இயற்றப்பட்டு தமிழகத்தில் பெரும் இழப்புகளை அதிர்வுகளை உண்டாக்கியது நீட் தேர்வு. நீட் தேர்வு பயிற்சியை மேற்கொள்ள இயலாமல் தனது உயிரை தற்கொலை செய்து மாய்த்துக் கொண்ட செல்வி அனிதாவை அவ்வளவு எளிதாக நாம் மறந்து விட முடியாது. இந்த நீட் தேர்வை வைத்துக் கொண்டு தமிழகத்தில் நடத்தப்படும் அரசியல் நாடகங்கள் நிறைய. இப்படி தொடரும் நாடகத்தின் பலனாக இன்றுவரை நீட் தேர்வு தொடர்புடைய தற்கொலைகள் தமிழகத்தில் ஆங்காங்கே நிகழ்ந்து வருவது வேதனை.

இது ஒருபுறமிருக்க தற்போதெல்லாம் பள்ளிகளில் பயிலும் மாணவியர்கள் மீதான பாலியல் தொல்லைகள், அழுத்தங்கள் காரணமாக தொடர்ச்சியாக பல தற்கொலைகள் அல்லது தற்கொலை செய்துகொள்ளும் வகையில் தூண்டப்படுவதாக சந்தேகிக்க தோன்றுகிறது.

இதன் சான்றாக ஜூலை 13 ஆம் தேதி சின்ன சேலம் அருகில் நடத்தப்பட்டு வரும் தனியார் உண்டு உறைவிடப்பள்ளியான சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியின் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து மாய்ந்து போன +1 பயிலும் மாணவி ஸ்ரீமதி எனும் பெண் பிள்ளை (தற்கொலையா அல்லது கீழே தள்ளிவிடப்பட்டு இறப்பு ஏற்பட்டதா என்று விசாரணையின் முடிவில் தான் தெரியவரும்) மர்மமான முறையில் நிகழ்ந்துள்ளது. அதற்கான போராட்டங்கள் நடந்து முடிந்தன.

ஸ்ரீமதியின் உடல் அடக்கம் செய்யப்பட்டு மூன்றே நாட்களில் மீண்டும் ஓர் தற்கொலை திருவள்ளூர் அருகே உள்ள கீழச்சேரி அரசு உதவிபெறும் பள்ளியின் விடுதியில் +2 மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். காரணம் என்ன எதுவென்று இதுவரை தெளிவாக தெரியவில்லை. இது போதாதென்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் கல்லூரியில் பயிலும் முதலாமாண்டு மாணவி ஒருவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இப்படி ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து மாணவிகளின் மர்ம மரணமும் தற்கொலைகளும் நிகழ்ந்து வருவது நமக்கு அடிக்கும் எச்சரிக்கை மணி. இப்படிப்பட்ட மனநிலைக்கு மாணவிகள் ஏன் ஆளாகுகிறார்கள் அவர்களுக்கு மனதளவில் பாதிப்புகள் எதனால் உண்டாகின்றன, அப்படியே எந்த சிக்கல்கள் பிரச்சினைகள் எழுந்தாலும் இதற்கு தீர்வாக தற்கொலை தான் என்பதை அவர்கள் எங்கனம் முடிவு செய்கிறார்கள். இந்த மர்ம முடிச்சுகளை எந்த சேதாரமும் இன்றி அவிழ்த்தால் ஒழிய இது போன்ற மரணங்களை தவிர்க்க இயலாது என்றே அச்சமுற வைக்கிறது.

மாணவர்களின் எதிர்காலம் பெற்று வளர்க்கும் பெற்றோர்கள் கையிலும் உண்டு தொடர்ச்சியாக பெண்/ஆண் பிள்ளைகளை கண்காணிக்க வேண்டும் அவர்களின் நடவடிக்கைகளில் ஏதேனும் மாற்றம் நிகழ்கிறதா என கவனிப்பது அவர்களின் தலையாய கடமை என்றே சொல்லலாம்.

இது போன்றே கல்வி பயிலும் மாணவ மாணவியர்கள் பெருமளவில் தங்கள் நேரங்களை செலவிடுவது பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்கள் பேராசிரியர்களின் மேற்பார்வையில் தான். எனவே இரண்டு கல்விசூழல்களிலும் கற்பிக்கும் ஆசிரியர்கள் மாணவர்களிடையே நிலவும் பாகுபாடுகளை அல்லது பாலின ஈர்ப்புகளை கவனமாக கையாண்டு அவர்களின் மனதில் தன்னம்பிக்கையை வளர்த்தெடுக்க வேண்டும்.

பள்ளிகல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறை ஆகியவற்றில் கலந்தாய்வுகள் மேற்கொண்டு திறன் பெற்ற மருத்துவர்கள் மற்றும் கவுன்சிலிங்கில் சிறப்பு அந்தஸ்து பெற்ற வல்லுனர்களை ஆலோசனைகளின்படி செயல்படுத்த முனைய வேண்டும்.

ஏன் எனில் மாணவர்கள் என்போர் இன்றைக்கு விதிக்கப்படும் விதைகள். அவை வளர்ந்து விருட்சமாகும் போது வாழ்க்கை அவர்களுக்கு வசமாகும் நாட்டின் வளர்ச்சி என்பது கற்ற கல்வியை சரியாக உபயோகித்து அதன் மூலம் தாமும் வளர்ந்து நாட்டின் வளர்ச்சியில் தம்மை ஈடுபடுத்தி செம்மை செய்து கொள்வதே ஆகும்.

இந்த நிகழ்வுகள் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தமிழக அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கையாவது இது போன்ற விஷயத்தில் அரசு மெத்தனமாக இருந்திடாமல் விரைந்து அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.

திருவள்ளூர் அருகேயுள்ள கீழச்சேரி அரசு உதவிபெறும் மகளிர் மேல்நிலைப் பள்ளி விடுதியில் பிளஸ் 2 மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதேபோல, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் கல்லூரி முதலாமாண்டு மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

ஒரே நாளில் நடைபெற்ற இருவேறு சம்பவங்கள் அதிர்ச்சியளிக்கின்றன. சின்னசேலம் தனியார் பள்ளி மாணவி சாவில் மர்மம் விலகாத நிலையில், அடுத்தடுத்து மாணவிகள் தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுவது வேதனையளிக்கிறது. இதற்கான காரணங்களைக் கண்டறிந்து, தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேசமயம், எல்லா பிரச்சினைகளுக்கும் தற்கொலைதான் முடிவு என்று கருதும் மனநிலையை மாற்றுவது அவசியம். மாணவிகளின் தற்கொலைகள் தொடர்கதையாவதை வேடிக்கைப் பார்ப்பது அரசுக்கு அழகல்ல ! தேசத்தின் வளர்ச்சி, மக்கள் நலன் மட்டுமல்ல அரசின் கடமை.

அடுத்த தலைமுறையின் தன்னம்பிக்கை, ஒழுக்கம், அறிவு ஆகியவற்றை மேம்படுத்தும் கடமையும் ஆளும் அரசிற்கு உண்டு என்பதை அரசு உணரவேண்டும். எனவே, கவுன்சிலிங், விழிப்புணர்வு முகாம்கள் என தீவிர நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.