கோவை – செப்டம்பர் 17, 2022

மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல் ஹாஸன் அவர்கள் விக்ரம் நூறாவது நாள் வெற்றி விழா, மக்கள் நீதி மய்யம் சார்பில் மகளிர் சாதனையாளர் விருது வழங்கும் விழா மற்றும் கோவை தெற்கு தொகுதி மக்களுடன் சந்திப்பும் அவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யப்படாமல் இருக்கும் மேம்பாடுகளை என்ன எதுவென்று கேட்டறிந்த நிகழ்வு என சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

பதினாறாம் தேதியான நேற்று விக்ரம் நூறாவது நாள் வெற்றி விழாவின் நாயகனாக பங்கு கொண்டார். அதனைத் தொடர்ந்து இன்று காலை முதல் அரசு பள்ளிக்கு விஜயம் செய்தார். அங்கே மாணவியர்களுடன் உரையாடி அவர்களின் கேள்விகளுக்கு பதில்களைச் சொன்னார். அந்தப் பள்ளிக்கு காற்றின் மூலம் குடிநீர் தயாரித்து அதை சுத்திகரிப்பு செய்து வழங்கும் கருவி ஒன்றையும் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் நன்கொடையாக அளித்து அதனை இயங்கச் செய்து துவக்கி வைத்தார். அங்கே மாணவயர்களின் மற்றும் ஆசிரியர் பெருமக்களின் உற்சாக வரவேற்பினை ஏற்றுக் கொண்டு நிகழ்வுகள் முடிந்ததும் அங்கிருந்து புறப்பட்டார்.

பின்னர் கோவை தெற்கை வந்தடைந்து அத்தொகுதி மக்களிடம் பலதரப்பட்ட குறைகள் என்னவெல்லாம் இருக்கின்றன என்று பட்டியலையும் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார். மேலும் அப்பகுதியில் நான்கு கழிவறைகள் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் இலவசமாக கட்டித் தரப்படும் என்றும் அதை உபயோகம் செய்து கொண்டு ஆரோக்கியமாக இருக்க தவறாமல் சுத்தம் சுகாதாரத்துடன் வைத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ஒலிபெருக்கியில் உரையாடிய தலைவர் அவர்கள் தற்போது நாடெங்கிலும் போதைப் பொருட்கள் உபயோகச் செய்யும் கலாச்சாரம் பெருமளவில் அதிகரித்து வருவதாக செய்திகள் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது என்றும் பேசிய அவர் இளைஞர்களும் இளைஞிகளும் எக்காரணம் கொண்டும் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி விடக்கூடாது ஆகவே விபரீத விளைவுகளைத் தரும் போதைப் பொருட்களை தள்ளி வைக்க வேண்டும் என்றும் அதனிடமிருந்து நாமும் தள்ளி நிற்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். சமீபத்தில் தமது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்து வெளியிடப்பட்ட விக்ரம் படத்திலும் முக்கிய கருவாக பெருகி வரும் போதை கலாச்சாரத்தை ஒழிப்பதை பற்றி எடுக்கப்பட்டது என்றும் நினைவு கூர்ந்தார்.

தெளிவான நேர்மையான வாழ்க்கைக்கு கல்வியறிவு வெகு முக்கியம் இளம் பருவங்களில் ஆசிரியர்கள், நல்ல புத்தகங்கள் வாசிப்பதுடன் மற்றும் பெற்றோர்களின் துணையுடன் சிறந்து உயர்ந்து விளங்கிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.