புது தில்லி – அக்டோபர் 21, 2022

50 ஆண்டுகால அரசியலில் பெரும் அனுபவம் கொண்ட மூத்த தலைவராக வலம் வரும் திரு மல்லிகார்ஜுன கார்கே அவர்கள் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக உறுப்பினர்கள் வாக்களிக்கப்பட்டு தேர்வு செய்யப்பட்டுள்ளார். கர்நாடகாவைச் சார்ந்த நிஜ லிங்கப்பா அவர்களுக்குப் பிறகு தென்னிந்தியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் தலைவராவார். மறைந்த ஜெகஜீவன் ராம் அவர்களுக்கு அடுத்து தலித் சமூகத்தைச் சேர்ந்த இவர் கர்நாடகா மாநிலத்தின் ஒன்பது முறை சட்டப்பேரவை உறுப்பினராக தேர்தலில் தேர்வு செய்யப்பட்டவர். எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகித்து வந்தவர் மட்டுமல்லாது பல பொறுப்புகளை வைத்துள்ள இவர் மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார்.

காங்கிரஸ் பேரியக்கத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள மூத்த அரசியல்வாதியான மல்லிகார்ஜுன கார்கே காங்கிரஸின் வளர்ச்சிக்கும் செயல்பாட்டுக்கும் உதவுவது மட்டுமல்லாமல் தேசம் எதிர்நோக்கியுள்ள சவால்களைச் சந்திக்கவும் ஒற்றுமை ஒருமைப்பாடு பன்முகத்தன்மையைச் சிதைப்போருக்கு எதிராக செயல்படவும் பயன்பட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வாழ்த்துகிறது.