சென்னை : நவம்பர் 24, 2022
தமிழகத்தின் முக்கிய தொழில்களில் விவசாயம் போன்றே தொழிற்சாலைகளும் பெரும்பங்கு வகிக்கிறது. தற்போது நிகழ்ந்து வரும் பொருளாதார மந்த நிலை கொரொனோ தொற்றின் காரணமாகவும் அனைத்து தொழில்துறையும் மிகுந்த சிரமத்திற்கிடையில் நடந்து வருகிறது என்பது தமிழக அரசிற்கு தெரியாததல்ல.
நிலைமை இப்படியிருக்க 2௦21 தேர்தல் நடைபெறும்போது பல சலுகைகளை அறிவித்துவிட்டு ஆட்சிபொறுப்பேற்றதும் முன்னுக்கு பின் முரணாக செயலாற்றி வருவது தமிழக மக்களுக்கு அதிருப்தியை உண்டாக்கியுள்ளது எனலாம்.
பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி வரிவிதிப்புகள், என பல வழிகளிலும் தொழில்துறையினர் கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றனர். இதனால் தமிழகத்தின் முக்கிய தொழில் நகரமான கொங்கு மண்டலமான கோவை மாவட்டம் முழுக்க சிறு, குறு தொழிற்சாலைகள் முடங்கிப் போயுள்ளது.
மேலும் கொரொனோ தொற்று துவங்கிய 2௦2௦ ஆண்டு முதலே உலகெங்கும் தொய்வை உண்டாக்கிய பொருளாதார தொழில்துறைக்கு தேவைப்படும் மூலப்பொருட்கள் கடும் விலையேற்றம் காரணமாகவும் நசிவுற்று வருகிறது.
இதனிடையே குறு, சிறு தொழில் நிறுவனங்கள் பயன்படுத்தி வரும் எல்டிசிடி பிரிவுக்கான மின் கட்டணம் தற்போது 6௦ முதல் 7௦ சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் மாதாந்திர நிலைக்கட்டணமும் 5௦% வரை உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால் ஏற்கனவே உள்ள நெருக்கடிகளுடன் இந்த கட்டண விலையேற்றம் இன்னும் கூடுதலாக சிரமங்களை உண்டாக்கிவிடும். எனவே முன்பிருந்தது போலவே எல்டிசிடி பிரிவிற்கு ரூ.35 மட்டுமே நிலைக்கட்டணமாக வசூலிக்க வேண்டும் என்றும் தொழில்துறையினர் தொடர்ந்து போராடி வருவதுடன் கதவடைப்பும் நடத்தினார்கள்.
மின் கட்டண உயர்வால் மட்டுமே சம்பந்தப்பட்ட துறையை லாபகரமாக இயக்க முடியும் என்பது முற்றிலும் தவறான பார்வை. கையூட்டு, முறைகேடுகளை தவிர்ப்பது அல்லது ஒழிப்பது. வெளிப்படைத்தன்மை கொண்ட சீரமைப்புகள் போதுமானது
பிற மாநிலங்களின் தொழில்வளர்ச்சியுடன் கடும் போட்டியை சந்தித்து வரும் தமிழக தொழிற்சாலைகள் பாதுக்காக்கப்பட வேண்டும் அதனால் பொருளாதார இலக்கினை எட்டும்பட்சத்தில் அதில் பணிபுரியும் தொழிலாளர்கள் வாழ்வும் மேன்மை பெரும், எனவே மின் கட்டண உயர்வை கைவிட வேண்டும் என தமிழக அரசிடம் மக்கள் நீதி மய்யம் கோரிக்கை விடுத்துள்ளது.