சென்னை : நவம்பர் 28, 2022
பொதுமக்களிடம் பல்லாயிரம் கோடி மோசடி. தனியார் நிதி நிறுவனங்களைக் கண்காணித்து முதலீட்டாளர்களைப் பாதுகாக்க வேண்டும்! மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல். வழக்கறிஞர் அணி மாநில செயலாளர் திரு ஸ்ரீதர் அறிக்கை
பானைக்குள் யானை – இது சாத்தியமா மக்களே ?
உங்களுக்கும் தெரியும் எல்லோருக்கும் தெரியும் இது ஒரு போதும் சாத்தியமில்லை என்பது. ஆனால் எங்களால் முடியும் என்று நிதி நிறுவனங்கள் புற்றீசல்கள் போல அவ்வபோது வந்தவண்ணம் இருக்கிறது.
பல ஆண்டுகளாக பல நிதி நிறுவனங்கள் மோசடிகளில் இறங்கி வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது அனைவருக்கும் தெரிந்ததே.
இந்திய ரிசர்வ் வங்கி தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் திட்டங்களுக்கு பலதரப்பட்ட வட்டி விகிதங்களை நிர்ணயித்துள்ளது. அது தனியார் வங்கிகளுக்கும் பொருந்தும். இதில் சற்றே அஞ்சல்துறை மூலம் பெறப்படும் டெபாசிட்கள் வங்கி வட்டி விகிதங்கள் சற்றே மாறுபடும்.
இவற்றையெல்லாம் மீறிடும் வகையில் பல ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்ட பெனிபிட் நிதி நிறுவனங்கள் ஒரு சிலவற்றை தவிர மீதம் உள்ள அனைத்தும் காணாமல் போய்விட்டன அல்லது திவாலாக அறிவிக்கப்பட்டது. கேட்டவுடன் அதீத நப்பாசை எழும்பச் செய்யும் விதமாக கவர்ச்சிகரமான விளம்பரங்கள், ஏஜென்ட்கள் வசீகரிக்கும் பேச்சுக்கள் மூலமாக பொதுமக்களைக் குறிவைத்து குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினர் நோக்கி இவர்களின் போலி வாக்குறுதிகளை நம்பி பலியாடுகளாக வந்து சேர்கின்றனர்.
அவர்களில் படித்த சிலரும் இதற்கு உடந்தையாக அல்லது இத்தகைய திட்டங்களில் சேர்வதற்கு ஆட்களை திரட்டித் தருவார்கள். இதற்கு கமிஷனாக ஒரு தொகையை அவ்வப்போது பெற்றுக் கொள்கிறார்கள்.
சம்பாதிக்கும் பணமெல்லாம் கைக்கும் வாய்க்கும் சரியாகப் போகும் நிலையில் சேமிப்புகள் என எதுவும் செய்ய முடியாமல் தொக்கி நிற்கும் தம் வாழ்க்கைத்தரம் சற்றேனும் உயராதா என ஏக்கம் கொண்டுள்ள வேளையில் இது போன்ற விளம்பரங்கள் அவர்களை விட்டில்பூச்சியை போல் அவர்கள் விரித்த வலையில் விழவைக்கும். ஒரு லட்சரூபாய்க்கு வட்டியாக மாதம் பத்தாயிரம் அல்லது அதற்கும் மேலாக தருவோம் என்று சொல்வதை நம்பும் மக்கள் கடன் வாங்கியாவது இத்தகைய நிதி நிறுவனங்களில் முதலீடு செய்கிறார்கள். முதல் சில மாதங்களுக்கு அவர்களின் அறிவிப்புகளின் படி தொகைகள் திரும்பச் செலுத்தி அவற்றை காரணமாக காண்பித்து இன்னும் பல முதலீட்டாளர்களை ஈர்ப்பார்கள். கோடிக்கணக்கான ரூபாய்கள் சேர்ந்ததும் தலைமறைவாகி விடுவார்கள்.
பணமிழந்த பொதுமக்களும் கை வலிக்க வலிக்க எழுதிய புகார் காகிதங்களையும் பணம் கட்டிய ரசீதுகளின் அசல் மற்றும் நகல்களையும் கட்டுகட்டாக சுமந்து கொண்டு காவல்துறை அலுவலகங்களுக்கு நடையாய் நடப்பார்கள், காலப்போக்கில் கால்கள் வலிமையிழந்து சோர்ந்தும் மனமும் நிம்மதியிழந்து போகும்.
இப்போது இக்கட்டுரையின் தலைப்பை மீண்டும் படியுங்கள்
பானைக்குள் யானை – இது சாத்தியமா மக்களே ?