கோவை – நவம்பர் 28, 2022

தொழிற்பூங்கா அமைப்பதற்காக வேளாண் பெருமக்களின் எதிர்ப்பை மீறி விளை நிலங்களைக் கையகப்படுத்துவதா? மக்கள் நீதி மய்யம் கண்டனம். மாநில செயலாளர் – விவசாய அணி Dr.G.மயில்சாமி அறிக்கை.

கோவை மாவட்டத்தில் சுமார் 3700 ஏக்கர் பரப்பில் சிப்காட் தொழிற்பூங்கா அமைப்பதற்காக அன்னூர், மேட்டுப்பாளையம் ஒன்றியங்களில் உள்ள பள்ளேபாளையம், இலுப்பநத்தம் பொகளூர் குப்பனூர் அக்கரை செங்கம்பள்ளி வடக்கலூர் ஆகிய 6ஊராட்சிகளில் உள்ள விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவதை எதிர்த்து வேளாண் பெருமக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தப் பகுதிகளில் ஆயிரக்கணக்கானோர் விவசாயத்திலும் ஆடு கோழி வளர்ப்பு பால் உற்பத்தி உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு தொழிற்பூங்கா அமைத்தால் வேளாண்மை பாதிக்கப்பட்டு விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பார்கள். மேலும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

விளை நிலங்களைக் கையகப்படுத்தி தொழிற்பூங்கா அமைப்பது ஏற்க்கத்தக்கதல்ல. மாவட்டத்தின் வேறு பகுதிகளில் உள்ள தரிசு நிலங்களில் தொழிற்பூங்கா அமைக்கலாம். எனவே விவசாயிகளின் எதிர்ப்பை மீறி வேளாண் நிலங்களைக் கையகப்படுத்தும் முயற்சியை கைவிட வேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது.