சென்னை : ஜூலை ௦7, 2௦23

சென்னை ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ள மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகத்தில் அதன் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் தலைமையில், துணைத்தலைவர்கள் மற்றும் மாநில செயலாளர்கள் முன்னிலையில் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பங்கு வகிக்க நடைபெற்ற சந்திப்பில் வருகின்ற 2௦24 நாடாளுமன்றத் தேர்தல் குறித்த ஆலோசனைகள், மாவட்டம்தோறும் செயலாளர்கள் தேர்வு, தமிழ்நாடு ஆளுநர் மாண்புமிகு திரு ரவி அவர்கள் தனக்கான அதிகாரங்களை தொடர்ச்சியாக மீறி வருவது என பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் மய்யத்தின் ட்விட்டர் கணக்கில் வெளியிடப்பட்டுள்ளது.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர், நம்மவர் திரு. கமல்ஹாசன் அவர்கள் தலைமையில் 07-07-2023 அன்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் இயற்றப்பட்ட தீர்மானங்கள்.

தீர்மானம் 1 : 2024 பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு முதல் கட்டமாக கோயம்புத்தூர், தென் சென்னை, மதுரை ஆகிய பாராளுமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் வார்டு வாரியாக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள். மக்கள் நலன்களுக்கான நமது செயல்பாடுகளையும், செயல்திட்டங்களையும் மக்கள் மத்தியில் நேரடியாகக் கொண்டு சேர்க்கும் இந்த மதிப்புமிக்க பங்களிப்பினைச் செய்ய ஆர்வமும் அர்ப்பணிப்பும் மிக்க களவீரர்கள் வரவேற்கப்படுகிறார்கள். களவீரராகப் பணியாற்ற விரும்புகிறவர்கள் தங்களது விருப்பதை மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் திரு. ஆ. அருணாச்சலம் எம்.ஏ., பி.எல்., அவர்களிடம் ஜூலை 12-ஆம் தேதிக்குள் தங்களது விருப்பத்தைத் தெரியப்படுத்தும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தலைவரின் வழிகாட்டுதலின் படி தேர்ந்தெடுக்கப்படுகிறவர்களின் பட்டியல், ஜூலை 21-ஆம் தேதி அன்று அறிவிக்கப்படும்.

தீர்மானம் 2 : மணிப்பூர் மாநிலத்தில் அமைதி திரும்ப இந்தியப் பிரதமர் அங்கு நேரில் சென்று சுமுகமான தீர்வை ஏற்படுத்த முயற்சிக்கவேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு மத்திய அரசை வலியுறுத்துகிறது.

தீர்மானம் 3 : மக்கள் நீதி மய்யம் கட்சியை மேலும் வலுப்படுத்தும் விதமாக மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கை உயர்த்தப்படுகிறது. அதன்படி, 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தலா ஒரு மாவட்டச் செயலாளர் வீதம் நியமிக்கப்படுகிறார்கள்.

தீர்மானம் 4 மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பணிகளை மேலும் வலுப்படுத்தும் விதமாக, தொழில்முனைவர் அணி மறுசீரமைப்பு செய்யப்படுகிறது. இந்த அணியை வழிநடத்த ஒருங்கிணைப்பாளர் குழு அமைக்கப்படுகிறது. இந்தக் குழுவில் திரு.ஜான்சன், திரு.மயில்வாகனன் தணிகைவேலு, திருமதி.H.ஸ்ரீராதஷா தேவியர் ஆகியோர் இடம்பெறுகிறார்கள். இவர்கள் மாநில செயற்குழு உறுப்பினர்களாகவும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கான தங்களது பங்களிப்பை நல்குவார்கள்.

தீர்மானம் 5 தமிழக மீனவர்களின் நலன்களுக்காகத் தொடர்ந்து களமாடி வருகிற கட்சி மக்கள் நீதி மய்யம். தலைவர், நம்மவர் திரு. கமல்ஹாசன் அவர்களின் வழிகாட்டுதல் படி, மக்கள் நீதி மய்யம் கட்சியில் மீனவர் அணி உருவாக்கப்படுகிறது. இதன் மாநிலச் செயலாளராக திரு. இரா. பிரதீப் குமார் நியமிக்கப்படுகிறார்.

தீர்மானம் 6 தனியார் நிறுவன பஸ் ஓட்டுனராக இருந்த கோயம்புத்தூர் செல்வி. ஷர்மிளா, ஒரு தொழில்முனைவராகத் தனது பயணத்தைத் தொடரும்பொருட்டு ஒரு புதிய கார் வழங்கிய தலைவர், நம்மவர் திரு. கமல்ஹாசன் அவர்களுக்கும், ‘கமல் பண்பாட்டு மையம்’ அமைப்பிற்கும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு பாராட்டுதல்களைத் தெரிவிக்கிறது.

தீர்மானம் 7 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் ‘ஆதிரெங்கம் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம்’ நடத்திய தேசிய நெல் திருவிழா 2023 நிகழ்வு பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த நமது தலைவர் நம்மவர் கமல்ஹாசன் அவர்கள் எடுத்த முயற்சிகள் போற்றுதலுக்குரியவை. இந்த அமைப்புடன், நமது தலைவர் அவர்களின் ‘கமல் பண்பாட்டு மையம்’ இணைந்து ‘பாரம்பரிய நெல் ரகங்களுக்கான விவசாய ஆராய்ச்சி மையம்’ ஒன்றினை விரைவில் தொடங்க இருப்பது மகிழ்ச்சியான செய்தி. மண், மொழி, மக்கள் காக்க சகலவழிகளிலும் தன் பங்களிப்பினைச் செய்து வரும் தலைவர் அவர்களை மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு பாராட்டுகிறது.

தீர்மானம் 8 நாற்பதாண்டுகளாக நற்பணிகளில் ஈடுபட்டு வரும் நமது தலைவரின் ஆளுமையால் ஈர்க்கப்பட்டு, பல வெளிநாடுவாழ் நண்பர்கள் பல்வேறு நற்பணிகளைச் செய்து வருவது பெருமைக்குரியது. குறிப்பாக அமெரிக்காவில் வசிக்கும் திரு.சி.ஆர். மதுசூதனன் மற்றும் வட அமெரிக்க கமல்ஹாசன் நற்பணி இயக்கம் நமது கட்சிக்குத் தேவையான தகவல் தொழில்நுட்ப உதவிகளைச் செய்துவருவதோடு, “தருவோம் கண்ணியம்” என்ற திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் செயல்படும் பல அரசுப்பள்ளிகளுக்குக் கழிப்பறை வசதிகளையும் ஏற்படுத்தி வருகிறார்கள். இங்கிலாந்தில் வசிக்கும் திரு. கண்ணன் சுவாமி மற்றும் யூகே எம்.என்.எம் நண்பர்கள் தண்ணீர் பிரச்னை உள்ள இடங்களில், காற்றிலிருந்து நீரை உருவாக்கும் வாயுஜல் இயந்திரங்களை நிர்மானிக்க கொடையளித்துள்ளார்கள்.

நியூவெர்ஜினியாவில் வசிக்கும் செல்வி. தீபா, சென்னையில் வசிக்கும் திரு. பிரகாஷ் அரவிந்த் மற்றும் குழுவினரின் முன்னெடுப்பில் ‘அன்னமிட்டு உண்’ எனும் அமைப்பின் மூலம் ஆதரவற்ற பலருக்கும் பசியாற்றி வருகிறார்கள். பிரான்ஸில் இருந்து திரு.பிராங்கோயிஸ் கேட்ஸன் மற்றும் குழுவினரும் பல்வேறு நற்பணிகளைச் செய்துவருகிறார்கள். இவர்கள் அனைவருக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு பாராட்டுதல்களைத் தெரிவிக்கிறது.

தீர்மானம் 9 ஆளுநர் திரு. ஆர்.என்.ரவி அவர்கள் தொடர்ச்சியாக தனது அதிகார வரம்புகளை மீறி செயல்படுவது ஏற்புடையதல்ல. மாநில அரசின் வளர்ச்சிப்பணிகளை, நலத்திட்டங்களை, கொள்கை முடிவுகளை தாமதிப்பதால், நிராகரிப்பதால் பாதிக்கப்படுவது தமிழக மக்கள்தான். தனது பொறுப்பையும், தான் வகித்து வரும் பதவியின் கண்ணியத்தையும் உணர்ந்து ஜனநாயக மாண்புகளைக் காக்கும் வகையில் ஆளுநர் கடமையாற்ற வேண்டுமென மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு வலியுறுத்துகிறது.

#KamalHaasan