அன்புள்ள வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம், நமது இணையதளத்தில் வெளியாகும் இச்சிறப்புக் கட்டுரை 1000 ஆவது பதிவு என்பதை மிகுந்த மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம். தொடர்ந்து எங்களின் வாசகராக இருந்து வரும் ஒவ்வொருவருக்கும் எங்கள் உளமார்ந்த நன்றி.
நவம்பர் 07, 2023
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி இந்த மாவட்டத்தில் பல முக்கிய ஆளுமைகள் பிறந்து வளர்ந்து பெருமை செய்தனர் அதன் போலவே இன்னுமொரு மிகச்சிறந்த ஆளுமையாக திரு.கமல்ஹாசன் அவர்களால் கூடுதலாக பெருமை கொள்ளும்படி திகழ்கிறது இம்மாவட்டம். மாவட்டம் மட்டுமே என அடங்கிவிடாமல் தமிழ்நாடு, இந்திய நாட்டின் பல மாநிலங்களில் அறியப்பட்டு பாராட்டுதல்கள் கிடைக்கபெற்று உலக சினிமாவில் கோலோச்சும் ஜாம்பவான்கள் வரிசையில் நம்மவரும் இடம்பெறுவது நமது நாட்டின் சிறப்பு எனலாம்.
நவம்பர் மாதம் ௦7 ஆம் 1954 ஆண்டில் திரு.சீனிவாசன் – திருமதி.ராஜலட்சுமி தம்பதியர் கடைக்குட்டியாக பிறந்தார். 6 வயதில் துவங்கிய திரையுலக பயணம் பல ஆண்டுகளாக எத்தனையோ தடைகற்கள் மறித்து வந்தாலும் ஒவ்வொன்றையும் புறந்தள்ளி பல பரிமாணங்கள் எடுத்து ஒப்பற்ற கலைஞனாக திரைவானில் பரிணமித்து வருகிறார். இதுவரை 231 படங்கள் வரை நடித்து முடித்து திரையில் வெளியாகி பலத்த வரவேற்புகள் பெற்றது. அதில் பல படங்களும் வெள்ளிவிழாவை சந்தித்தது. அறிமுகமான தமிழ் மட்டுமல்லாது கிட்டத்தட்ட 6 மொழிகளில் திரைப்படங்கள் நடித்து வெளியானது வரலாறு.
1960 இல் களத்தூர் கண்ணம்மாவில் தன் திரையுலக எக்ஸ்பிரஸ்சில் பயணத்தை துவக்கியவர் கடந்த 2022 ஆம் ஆண்டில் தயாரித்து நடித்து வெளியிட்ட விக்ரம் படத்தின் மூலம் அதிக கலெக்ஷன் செய்த படங்களின் பட்டியலில் இடம்பெற்று கொரொனோ பரவலில் சோர்ந்து போயிருந்த திரையுலகை தலைநிமிரச் செய்தார். இளம் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் அதிரிபுதிரியான ஹிட் அடித்தது, அதனைத் தொடர்ந்து இன்னும் சில படங்களில் ஒப்பந்தமாகி தன் நடிப்பினால் மெருகேற்ற துவங்கி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் வேகமெடுக்கிறார்.
சரி, திரைப்படங்கள் வழியாக மிகச்சிறந்த ஓர் நடிகராக வலம் வருவது அனைவருக்கும் தெரிந்ததே. பிரபல திரைப்படக் கலைஞராக வலம்வருவது தொடங்கிய போதே தன் ரசிகர்களால் துவக்கப்பட்ட ரசிகர் மன்றம் மூலம் அவர்களை வெறும் பொழுதுபோக்கிற்காக, தனது படங்களுக்கு விழாக்கள் எடுத்து போஸ்டர் ஒட்டி சந்தோஷம் கொள்வதை விட அவர்களின் உழைப்பை வேறு வழியில் நல்லவிதமாக உபயோகம் செய்துகொள்ள முடிவெடுத்து யாரும் எதிர்பாரா வண்ணம் ரசிகர் மன்றங்களை அதிரடியாக கலைத்தார். பின்னர் அதனை தனது தலைமையில் கமல்ஹாசன் நற்பணி இயக்கமாக பதிவு செய்தார்.
அதன் மூலமாக ரசிகர்கள் இரத்ததானம், ஆதரவற்றோர்களுக்கு உணவு, உடைகள், எளியோர்களின் கல்வி, அவர்களின் அடிப்படை வாழ்வாதாரம் மேம்படும் வகையில் தையல் இயந்திரம் மற்றும் பல உதவிகளை செய்ய தூண்டுகோலாக திகழ்ந்தார். அவர்களின் பணம் தேவையற்ற வழிகளில் செலவிடப்படாமல் இது போன்ற நற்பணிகளுக்கு செலவழிக்க எதுவாக இருந்தார். அதே சமயம் எல்லா நற்பணிகளையும் ரசிகர்களின் உழைப்பில் ஈட்டிய பணம் மூலமே செய்து தனக்கு மட்டும் பெயர் எடுத்துக்கொள்ளும் சுயநலம் துறந்து அந்த நற்பணிகளில் தானும் தன் நடிப்பின் மூலம் கிடைக்கப்பெற்ற வருமானத்தை முறையாக கணக்கு வழக்கு தாக்கல் செய்து வருமானவரிகள் செலுத்திய பின்னர் சொந்த பணத்தை நன்கொடையாக அளித்து அப்பணிகளில் தனக்கு உண்டாகும் நற்பெயரை போலவே தன் ரசிகர்களும் அபிமானிகளும் பெறுமாறு நடந்து கொண்டது மாமனிதர் என்பது நிரூபணம் ஆகிறது.
பல மேடைகளில் தனது ரசிகர்கள், அன்பர்கள் மூலமாக நடைபெறும் எண்ணிலடங்கா நற்பணிகளில் நான் செலவிட்ட தொகைகளை விட அவர்கள் செலவிட்ட தொகை மிகப்பெரிது பல கோடிகளை உள்ளடக்கியது அதிலும் குறிப்பாக அவர்களின் கரங்களின் மூலம் நற்பணிக்கு செலவு செய்த ரூபாய் நோட்டுகள், நாணயங்கள் ஒவ்வொன்றும் கடும் உழைப்பின் மூலம் வியர்வையால் நனைந்தவை அதன் மனம் வேறு எந்த செயற்கை இராசாயன திரவியங்களை விட மேலானது. இன்னும் சொல்லப்போனால் அதில் இரத்தத்துளிகளும் கலந்திருக்கக் கூடும் என்பார்.
நம்மவரின் ஆலோசனைகள் படி நற்பணிகள் செய்து வரும் இயக்கம் தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுமைக்கும் பரவியிருக்கும் ரசிகர்கள் தத்தமது வசிப்பிடங்களில் அதன் சுற்றுப்புறங்களில் தொடர்ந்து செய்து கொண்டு வந்துள்ளது. அதே சமயம், கடல்கடந்தும் வசிக்கும் ரசிகர்கள் பெரும்பாலோனோர் இதற்கான முன்னெடுப்புகளை இது நாள் வரையும் செய்து வருகிறார்கள். அங்கிருந்தபடியே தமிழகத்தின் பல கிராமங்களில் பல நற்பணிகளை உதாரணமாக பழுதடைந்த பள்ளிகள், பொதுக்கழிவறைகள் கட்டித் தருவது என பல பணிகளை செய்து முடித்து வருகிறார்கள்.
எல்லாம் சரி, நற்பணிகள் மட்டுமே போதும் என நின்றுவிட முடியுமா ? என யோசிக்கையில் தமிழகத்தின் ஒரு சில முக்கியத் தலைவர்களின் மறைவும், முக்கிய ஆளுமை ஒருவரின் முந்தைய நடவடிக்கை மூலமாக கிடைக்கப்பெற்ற கசப்பான அனுபவத்திற்கு என்ன மாதிரியான செயலில் இறங்கினால் நமது குரல் ஓங்கி ஒலிக்கக்கூடிய இடத்திற்கு அடுத்தகட்டம் நகர்தல் என முடிவு செய்து 2018 இல் அறிவித்ததே மக்கள் நீதி மய்யம் எனும் நடுவுநிலைமை கொள்கையுடைய, அதிலும் குறிப்பாக மக்களுக்காக மக்களால் எனும் கோட்பாடுடன் துவக்கப்பட்டது. இதில் நிர்வாகிகளாக, உறுப்பினராக இணைய வேண்டும் எனில் உங்களின் பெயர் முகவரி, அலைபேசி எண் மட்டுமே போதுமானது. இதில் நீங்கள் இன்ன மதம் என்றோ இன்ன சாதி என்றோ எங்கும் குறிப்பிட வேண்டிய அவசியமும் இல்லை நிர்பந்தமும் கிடையாது. அதே போல் எந்த அழுத்தமும் இல்லை, ஆனால் ஒருசிலவற்றை நிச்சயமாக கடைபிடிக்க வேண்டும். அவை, நேர்மையான வழி, செயல், பழிபோடாத அரசியல், வஞ்சமும் தந்திரமும் அறவே இல்லாத அரசியல், மகளிர்க்கு தகுந்த பங்கீடு அவர்களை மரியாதையாகவும், கண்ணியமாகவும் நடத்துதல் என்றும், தனி மனித தாக்குதல் போன்றவையும் கூடவே கூடாது எனும் சில நிபந்தனைகள் மட்டுமே உண்டு.
கட்சிப்பணியில் ஈடுபடும் நிர்வாகியோ தொண்டரோ எவராக இருப்பினும் குடும்ப நலனே முதலாக கொள்வதும், முறையான வேலை செய்து அதன் மூலம் ஈட்டப்படும் வருமானம் கிடைக்கப்பெற்ற பிறகே யாரும் கட்சிப்பணியாற்றலாம் இதுவும் முக்கிய கருத்தாகும்.
மக்கள் நீதி மய்யம் என்பதன் பொருள் விளக்கமும், கொள்கை கோட்பாடுகள் பலவும் இதற்கு முந்தைய பதிவுகள் பலவற்றில் பார்த்தாகிவிட்டது. மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு உதவுமெனில் அவை மக்களுக்கு எந்த வகையிலும் பாதிப்புகளை ஏற்படாமல் செய்து முடிப்பதற்கு ஒப்புக்கொள்ளும். அதே திட்டங்கள் இயற்கைக்கும் மக்களின் அன்றாட வாழ்க்கைக்கும் ஊறு விளைவிக்கும் எனில் எந்தத் தயக்கமும் இல்லாமல் அத்திட்டம் ஒதுக்கி வைக்கப்படும். இடதோ வலதோ என்பதை அந்தந்த பக்கமாக முழுதும் சாய்ந்துவிடாமல் அதனால் கிடைக்கபெறும் இறுதி பயனை சீர்தூக்கிப்பார்த்து மய்யமாய் நிற்பதே நடுவுநிலைமை. இது நேற்றும் இன்றைக்கு வந்ததல்ல இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளில் நடுவுநிலைமை எனும் ஓர் அதிகாரத்தில் அவை என்னென்ன என எழுதியுள்ளார் எனில் நாம் தெளிவாக உணர்ந்து கொள்ளலாம்.
மய்யத்தின் கொள்கைகள் தான் என்ன ?
சுற்றுச்சூழல், பெண்கள் நல்வாழ்வு, பொருளாதாரம், தொழில்துறை, விளையாட்டு மேம்பாடு,
இவைகள் மட்டுமல்லாது பல திட்டங்களை பல்வேறு துறைகளைச் சார்ந்த வல்லுனர்களை கொண்டு உருவாக்கியதில் மக்கள் நீதி மய்யம் தனித்தன்மை வாய்ந்தது, மகளிர் உதவித் தொகை, ஒரு ட்ரில்லியன் பொருளாதார எட்டும் தமிழ்நாடு, மாணவர்களுக்கு இலவச இணைய வசதி என பல திட்டங்கள் தேர்தல் வாக்குறுதியாக அறிவிக்கப்பட்டது. இவற்றில் பலவும் வெவ்வேறு கட்சிகள் தங்களின் தேர்தல் அறிக்கைககளில் நகலெடுத்துக் கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கட்சி துவக்கிய பின்னர் பல கட்டங்களில் நம்பிக்கையற்ற வார்த்தைகள், கருத்துகள் உலாவரத் தொடங்கின கமல்ஹாசன் அவர்களின் அரசியல் கட்சி வாக்குகளைப் பிரிப்பதற்கும், வேறொரு பிராதன கட்சியின் பினாமியாக அதாவது B ஆக செயல்படும் என்றும், தொடர்ந்து சில வருடங்களாக திரைப்படங்கள் தயாரிக்க அல்லது நடிக்க வாய்ப்பு இல்லாத காரணம் அவருக்கு திரையுலகில் மார்கெட் இல்லாமல் இருப்பதால் பணம் சம்பாதிக்க கட்சி துவங்கி இருக்கிறார் என்றும், நீங்கள் வேண்டுமானால் பாருங்கள் எண்ணி இரண்டே வருடங்களில் அவரது கட்சியை கலைத்துவிட்டு இன்னார் தலைமையில் இருக்கும் கட்சியில் இனைந்து விடுவார் என்றும் பல ரூபங்களில் ஆருடங்கள் சொல்லினர் வாய்ச்சொல் வீணர்கள், உடல் வளைத்து எந்த உழைப்பையும் போடாமல் உட்கார்ந்த இடத்தில இருந்து புரளிகள் பலவற்றையும் நான்கு திக்குகளிலும் தொடர்ந்து பரப்பப்பியும் அதை வைத்து பணம் பார்க்கும் கும்பல்கள் பலவற்றையும் அவர்களின் எண்ணங்களையும் உறுதியற்ற ஆருடங்களையும் சுக்கு நூறாக உடைத்து எறிந்துவிட்டு இதோ இன்றைக்கு ஏழாம் ஆண்டை நோக்கி நடைபோட்டுக் கொண்டிருக்கிறது மக்கள் நீதி மய்யம்.
2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல், 2021 இல் நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தல், 2022 ஆண்டில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் என புரளிகள் எதற்கும் தயங்காமல் களத்தில் இறங்கி பணியாற்றி வருகிறார் திரு.கமல்ஹாசன் தனது நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன். கோவைத் தெற்குத் தொகுதியில் போட்டியிட்டு சதியின் மூலமாக இழந்தார். சுமார் 1728 வாக்குகள் வித்தியாசத்தில் சட்டமன்ற உறுப்பினராகும் வாய்ப்பை நூலிழையில் இழந்தார். அதனாலும் சோர்ந்துவிடாமல் தொடர்ந்து தன்னை இந்த உயரத்தில் வைத்திருக்கும் தமிழ்நாட்டின் மக்களின் நலனுக்காக தான் நேசிக்கும் மக்களுக்கு அரசியல் அமைப்பின் மூலமாக நல்லது செய்ய வேண்டும் எனும் எண்ணத்தில் கட்சியையும் தனது ஆண்டாண்டு கால நேசிப்பில் உயிர்மூச்சான சினிமாவையும் விட்டுவிடாமல் தொடர்ந்து இயங்கிவருகிறார்.
இவை மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் முதல்வர்கள் மற்றும் மிக முக்கிய ஆளுமைகள் பலருடனும் நட்புறவு பாராட்டி வருகிற காரணத்தினால் அவர்களின் அபிமானத்திற்குரியவராக திகழ்வதால் தங்களது மாநிலத்தில் நடைபெறும் பல முக்கிய நிகழ்வுகளுக்கு நம்மவரை சிறப்பு விருந்தினராக அழைத்து பங்குபெற வைத்து பாராட்டி கௌரவிக்கின்றனர். கல்லூரிகளில், பள்ளிகளில் மாணவர்களுடன் கலந்துரையாடுவதும், அரசியல் மற்றும் சினிமா, கலை இலக்கியம் போன்ற சந்திப்புகளில் கலந்து கொண்டு உரையாற்றுவதும் அங்கே நிகழும் கருத்து விவாதங்களில் பேசுவதும், ஆரோக்கியமான கேள்வி பதில்கள் ஆகியவற்றில் பங்கு கொள்வதும் என பொதுத்தளத்தில் குறிப்பாக இளைஞர்களின் இடையே பல குறிப்புகளை அறிந்து கொள்ளச் செய்வதுமாக ஓய்வு நேரம் போக இயங்கிவருகிறார்.
நீங்கள் மெத்தப் படித்தவரோ அல்லது சந்தர்ப்ப சூழல்களால் கல்வி கற்க இயலாமல் போனவரோ எப்படியாக இருப்பினும் நீங்கள் இழந்த முறையான பள்ளி கல்லூரி கல்வியை உங்களின் அனுபவம் மூலமாகவோ அல்லது கொட்டிக்கிடக்கும் புத்தகங்கள் வாசிப்பின் மூலமாகவோ மீட்டெடுக்கலாம். ஆனால் அதே சமயம் உங்கள் குடும்பத்தில் கல்வி கற்றலை தவறவிட்டதால் அதே வழக்கத்தை உங்களின் அடுத்த தலைமுறைக்கு தந்துவிடாமல் அவர்களை கல்வியின் பக்கம் இட்டுச்செல்வதே மிக மிக முக்கியமான காரியம். தான் பெற்றிடாத கல்வியை என் பிள்ளைகள் பெற வேண்டும் என்பதை நிச்சயம் கவனம் கொள்ள வேண்டும் என்கிறார் நம்மவர்.
எந்த பொழுதுபோக்குகள் நம் வாழ்க்கையில் இருந்தாலும் அதற்கான எல்லைக்குள் நம்மை நிலைநிறுத்திக்கொள்ள பழக வேண்டும். அதே சமயம் வெறும் பொழுதுபோக்குடன் உங்கள் எல்லைகள் சுருங்கிவிடாமல் இலக்கியம், அரசியல், சமூக பார்வை என வேறு சில தளங்களில் உங்களின் கவனம் செல்லுமாயின் நீங்கள் உங்களை மென்மேலும் மெருகேற்றிக் கொள்கிறீர்கள் என புலப்படும். அச்சோ நான் ஓட்டு போடுவதுடன் என் கடமையை முடித்துக் கொள்கிறேன் எனக்கு அரசியல் சரிப்பட்டு வராது என்று ஒதுங்கி நிற்பது சரியான முடிவல்ல. அப்படி ஒருவேளை பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும் நமது நாட்டினை ஆட்சி செய்துவந்த மன்னர்கள் மற்றும் மன்னராட்சிக்கு பிற்பாடு வந்த தலைவர்கள் பலரும் ஒதுங்கியிருந்தால் நாம் இப்படி சுதந்திரமாக பேசித்திரிய முடியாது. இன்னமும் கிழக்கிந்திய கம்பெனியின் கட்டுப்பாட்டில் அடிமையாக இருந்திருப்போம். அரசியல் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றல்ல மாறாக நீங்கள் அரசியலில் ஈடுபடாமல் இருந்தால் அரசியலே உங்களிடம் வந்து சேரும். நமக்கென்ன என்று ஒதுங்கியிருப்பது ஜனநாயக மரபல்ல. எனவே அரசியல் என்பதும் அதில் செலுத்தும் மற்றும் பெரும் வாக்கு என்பதும் நமது துருப்புச்சீட்டு, உரிமை நியாயமான நேர்மையான அரசியல் செய்யும் எவரையும் கண்டெடுத்து அவர்களுக்கு வாக்குகளை செலுத்துவதன் மூலம் நீங்களும் நேர்மையான ஓர் நாட்டில் சிறப்பான குடிமகனாக வலம் வருவீர்கள்.
ஆறாவது வயதில் இருந்து நடிக்கத் துவங்கிய நம்மவர் திரு கமல்ஹாசன் அவர்களின் திரைப்பயணம் மிகுந்த நேர்மையுடன் தொடர்கிறது. உழைப்பிற்கு ஊதியம் என்பார்கள் அதை வங்கிப் பரிமாற்றம் வழியே பெற்றுக் கொள்வதே தான் நேர்மையாக கையாளும் விதம் என்கிறார் நம்மவர். எல்லா கணக்கு வழக்குகளும் வங்கிப் பரிமாற்றம் மூலமாக நிகழ்வதால் எந்த ஒளிவுமறைவுமில்லை. அரசுக்கு எதிராக எந்த வரி ஏய்ப்பும் இல்லை, திரைமறைவு பணப்பரிமாற்றங்கள் இல்லை. பெறப்படும் ஊதியம் வரிகள் போக இருக்கும் பணத்தில் நன்கொடைகள், பிறர் பயன்பெறும் வகையில் முக்கிய செயல்கள் என செலவிட்டு வரும் நம்மவர் மக்கள் நீதி மய்யம் இயங்கிட தேவையான நிதிகளை அதிலிருந்தே தருகிறார்.
பிரபல நடிகராக திகழ்ந்தாலும் சமூக அக்கறையுடன் செயல்படத் தவறுவதில்லை என்பதற்கு பல உதாரணங்கள் உண்டு, நாட்டில் நடைபெற்ற பல முக்கிய நிகழ்வுகளுக்கு அது மகிழ்ச்சியை தருவதாகட்டும் வருத்தம் அளிப்பதாகட்டும் கண்டிக்கப்பட வேண்டியதாகட்டும் எதற்கும் குரல் கொடுக்கத் தவறியதில்லை. தனது கருத்தை ஆணித்தரமாக பதியவைக்கத் தவறவில்லை. எதிலும் சுயநலமாகவோ தனது திரையுலக வாழ்விற்கு இடர் வருமென்றோ யோசிக்காமல் மனதிற்கு பட்ட நல்லதை உரத்த குரலில் சொல்வதை இன்றுவரை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
எந்தச் சிக்கலாக இருந்தாலும் அதை சரி செய்ய சட்டத்தின் துணை கொண்டே செய்வதில் தீர்கமான முடிவுடன் இருப்பார் குறுக்கு வழியை தேர்வு செய்வதே இல்லை எதுவாக இருந்தாலும் நீதியின் பக்கமே அதுவும் அந்நீதி உண்மையின் பக்கமே நிற்கும் என்பதே நம்மவரின் அசைக்கமுடியாத நம்பிக்கை. அதே போன்று வன்முறையும் தீர்வல்ல எனும் காந்தியாரின் முடிவுகளை மேற்கோள் காட்டிச் சொல்வார் எனவே நானும் காந்தியாரின் அகிம்சை மற்றும் நேர்மை வழியாகவே பயணிப்பேன் என்ன அதில் நிறையவே செலவீனங்கள் உண்டு அது விலையுயர்ந்தது என்னால் அந்தச் செலவுகளை தாங்க முடியும் தாங்கித் தான் ஆகவேண்டும் என்று உறுதியாக இத்தனை வருடங்களாக இயங்கி வருகின்றேன். எனக்கு அது மிகவும் பிடித்திருக்கிறது என்பார். நான் மட்டும் அப்படி இருப்பது போதாது என்னை உதாரணமாக ஏற்றுக் கொள்ளும் நீங்களும் அப்படிப் பழகினால் அதைவிட பெரிய சந்தோசம் எனக்கில்லை. அப்படிப்பட்ட நல்ல ரசிகர்களை தொண்டர்களை பெற்றவன் என நான் பெருமிதம் கொள்வேன் என்பார்.
பணத்திற்காக எந்த சமரசமும் செய்துகொள்ளாத ஓர் கலைஞராக திகழ்ந்து வரும் நம்மவர் திரு கமல்ஹாசன் அரசியல் வாழ்க்கையில் சில சறுக்கல்கள் இருந்தாலும் இனிவரும் காலங்களில் தன்னை நிரூபணம் செய்வார் நம்மவர்.
Pictures Courtesy : Internet, KHWA, KHWA-NA, FB KH-Data Bank, Maiam Web