டிசம்பர் : 20, 2023

நமது தமிழின் மிகச்சிறந்த எழுத்தாளர்கள் பலரும் சாகித்ய அகாடமி விருதுகளை வென்றுள்ளார்கள் தொடர்ந்து மிகச்சிறந்த படைப்புகளை தந்தும் வருகிறார்கள். அந்த வரிசையில் இன்றைக்கு தமிழுக்கான சாகித்ய அகாடமி விருதை மதிப்பிற்குரிய எழுத்தாளர் திரு தேவிபாரதி அவர்கள் தனது புதினமான “நீர்வழிப்படூஉம்” எனும் படைப்பிற்கு பெற்றிருக்கிறார்.

பொதுவாகவே புத்தக வாசிப்பை தனது முக்கியமான வழக்கமாகவே கொண்டிருக்கும் மக்கள் நீதி மய்யம் தலைவரான திரு.கமல்ஹாசன் அவர்கள், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தான் தொகுத்து வழங்கும் ஓர் நிகழ்ச்சியில் ஒவ்வொரு ஞாயிறன்றும் புத்தகங்களை வாசிக்கும்படி பரிந்துரை செய்வார் (பரிந்துரை செய்யப்பட்ட புத்தகங்கள் பற்றிய விபரங்கள் நமது இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது).

கலையுலகில் புத்தகங்களை வாசிக்கும் சில கலைஞர்களுக்கு மத்தியில் மய்யத்தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களுக்கு தனியிடம் உண்டு என்பது எழுத்தாளர்களை கொண்டாடுவதும் படைப்புகளை படித்து பாராட்டுவதும் அவர்களின் புத்தகங்களை மக்களிடம் கொண்டுசெல்வது அவரின் உயரிய மாண்பை காட்டுகிறது. அந்தவகையில் இன்றைக்கு திரு.தேவிபாரதி அவர்களுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டிருப்பது குறித்து தமது மகிழ்ச்சியை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

“தமிழுக்கான இவ்வாண்டின் சாகித்ய அகாடமி விருதை வென்றிருக்கும் எழுத்தாளர் தேவிபாரதியை மனமார வாழ்த்துகிறேன். நாற்பத்து நான்கு ஆண்டுகளாகத் தமிழ் இலக்கிய உலகில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் அவருக்கு இந்த கௌரவம் மிகவும் பொருத்தமானது. தான் பிறந்து வளர்ந்த பிரதேசத்தின் நுணுக்கமான விவரங்களை, கலாப்பூர்வமாகவும் நுட்பமாகவும் சித்திரிக்கும் இலக்கியப் படைப்புகளைத் தொடர்ந்து எழுதிவருகிறார் தேவிபாரதி. சிறுகதைகளில் சாதனைகளை நிகழ்த்திக் காட்டிய தேவிபாரதி, நாவல் பக்கம் திரும்பி, அந்த எழுத்திலும் தன் முத்திரையைப் பதிக்கத் தவறவில்லை. நிழலின் தனிமை, நட்ராஜ் மகராஜ், நொய்யல் போன்ற நாவல்களில் தன் மக்களின் எழுத்துச் சித்திரத்தை சுவாரசியம் குன்றாமல் வரைந்தார். சிறுகுடி மக்களின் வாழ்க்கைப் பின்னணியில் அவர் எழுதியிருக்கும் புதினமான நீர்வழிப்படூஉம் என்னும் படைப்புக்கு விருது கிடைத்திருப்பது வாழ்த்துக்குரியது. – திரு.கமல்ஹாசன்”