சென்னை : ஆகஸ்ட் 16, 2025
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவரும் பாராளுமன்ற மக்களவை உறுப்பினருமான திரு. தொல்.திருமாவளவன் அவர்களின் பிறந்தநாள்விழா சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் வெகு விமரிசையாக வி.சி.க சார்பில் கொண்டாடப்பட்டது. நேற்றைய நிகழ்வில் மக்கள் நீதி மய்யம் நிறுவனத் தலைவரும் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான திரு.கமல்ஹாசன் அவர்கள் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். அதன் பொருட்டு ம.நீ.ம வின் துணைத்தலைவர் திரு.மௌரியா அவர்கள், பொதுச் செயலாளர் திரு.அருணாச்சலம் அவர்கள், இளைஞரணி மாநில செயலாளர் திரு. கவிஞர் சிநேகன், ஊடகத் தொடர்பு மாநில செயலாளர் திரு.முரளி அப்பாஸ், தலைமை அலுவலக நிர்வாக மாநில செயலாளர் திரு.செந்தில் ஆறுமுகம் அவர்கள் மற்றும் மாணவரணி மாநில செயலாளர் திரு.ராகேஷ் ராஜசேகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் முன்னதாகவே வந்திருந்து திருமாவளவன் அவர்களை சந்தித்து பொன்னாடைகள் அணிவித்து மற்றும் பூச்செண்டுகளை அளித்து வாழ்த்துகளை தெரிவித்தனர். பின்னர் விசிக வின் கொள்கை விளக்கப் பாடல்கள் இசைக்கப்பட்டது.
விழாவின் நாயகனான திரு.திருமாவளவன் அவர்கள் மேடையேறியதும் கட்சியினரின் வாழ்த்தொலியும் கரவோசையும் விண்ணை முட்டியது எனலாம். அவ்வமயம் நமது தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் பலத்த கரகோஷத்தினடேயே அரங்கில் நுழைய முன்பு போல் ஆரவாரம் அரங்கமே அதிர்ந்தது.
இளையவரான திரு.திருமாவளவன் அவர்களை பெரும் அன்புடனும் பாசத்துடனும் தம்பி என வாய் நிறைய அழைத்து இறுக அணைத்துக் கொண்டதுடன் பொன்னாடை போர்த்தி பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தார். அப்போது அங்கே கூடியிருந்த மக்களிடையே பேச முற்படும் போது பல்வேறு நினைவுகளை குறிப்பிட்டு பேசியதுடன் இயல்பையும் அவரது அரசியல் வாழ்வையும் ஒருசேர பாராட்டி மக்களுக்கான சேவைகளை முன்னெடுத்து செய்து வரும் பணிகளை கோர்வையாக ஓர் பாடலைப் பாடி பேசத் துவங்கினார்.

திருமா அவர்களின் அரசியல் மாண்பு, போராட்ட குணம், திருமணம் செய்யாமலே மக்களுக்காக வாழும் முறைகள், கட்சியினருக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டது குறித்து என அனைத்தையும் கோர்வையாக குறிப்பிட்டு பேசிய நம்மவர் அவர்கள் தனது எதிரியாக சாதியை தான் எப்போதோ தேர்வு செய்து விட்டதையும், எனது பெயரை மனிதனின் கழிவுடன் ஒப்பீடு செய்து பேசுவது பற்றியும் குறிப்பிட்டவர் மறைந்த காந்தியார் மலத்தை அள்ளுவார் அவ்விடத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதோடு மட்டுமல்லாமல் தனது கழிவுகளை எந்த வித முகச்சுழிப்புகளும் இல்லாமல் செய்துவிட்டு தான் காலை உணவையே எடுத்துக் கொள்ளச் செல்வார் என்பதை சொல்லிவிட்டு தானும் அதுபோல் செய்துகொள்ள தயார் தான் ஆனால் அதனை எனக்கென செய்து கொள்வேன் சாதி வேற்றுமை பேசும் உங்களுக்கு செய்ய மாட்டேன் என பேசுகையில் அந்த அரங்கம் அதிர்ந்து அடங்கவே சில நொடிகளானது.
“ஒடுக்கப்படுகிற மக்களை ஒன்று திரட்டி, அவர்களுக்குச் சித்தாந்தக் கல்வியைப் புகட்டி, அரசியல்மயப்படுத்தி, ஜனநாயக வழியில் அதிகாரத்தை அடையச் செய்யும் அண்ணல் அம்பேத்கரின் செயல் திட்டத்துக்குத் தன் வாழ்வை அர்ப்பணித்துக்கொண்ட களப்பணியாளர், எழுச்சித் தமிழர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர், என் உடன் பிறவாச் சகோதரர் திருமாவளவன் அவர்களின் பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்டு வாழ்த்தி மகிழ்ந்தேன்.” – திரு.கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம், பாராளுமன்ற ராஜ்ய சபை உறுப்பினர்


நன்றி : மக்கள் நீதி மய்யம்