ஆகஸ்ட் 28, 2025
ஒரு சில நாட்களுக்கு முன்னர் தங்களது நாட்டில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மீதான வரிகளை 50% அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அவர்கள் விதித்துள்ளது எதிர்பாராத ஒன்று. இதனால் உண்டான சுணக்கம் திருப்பூர் மற்றும் பல்வேறு பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் இன்ன பிற தொழில்துறையில் பெரும் அதிர்வை உண்டாக்கியுள்ளது.




இது குறித்து பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான திரு.கமல்ஹாசன் அவர்கள் இந்திய மக்களுக்கு நீண்டதொரு கடிதத்தை எழுதி வெளியிட்டுள்ளார்.



தலைவர் அவர்களின் கட்டுரையின் தமிழ் மொழியாக்கம்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களின் ட்வீட். (தமிழ் மொழிப் பெயர்ப்பு)
என் அன்பார்ந்த இந்திய சகோதர சகோதரிகளே,
இன்று, மேற்கத்திய அதிகார அரசியலில் கொள்கை எனும் முகமூடியால் தண்டனை எனும் நாடகம் அடங்கேற்றப்படும் என்பதை அமெரிக்கா மீண்டும் நமக்கு உணர்த்தியுள்ளது. பல நூற்றாண்டுகளாக, காலனி ஆதிக்கத்தால் இந்தியா சூறையாடப்பட்டிருந்தாலும், நாம் ஒருபோதும் உடைந்துவிடவில்லை. இப்போது, கடும் வரிகள்தான் ஏகாதிபத்தியத்தின் புதிய கருவியாக பயன்படுத்தப்படுகின்றன, ஐரோப்பிய-மைய உலக விதிகளுக்கு மண்டியிடாமல் நமது சொந்த எரிசக்தித் தேவைகளைப் பாதுகாக்க நாம் துணிந்தோம் என்ற ஒரே காரணத்திற்காக, வேடமணிந்த இந்த மறைமுகமான தண்டனைகள் நம் மீது சுமத்தப்பட்டுள்ளன.
நமது ஏற்றுமதியாளர்கள் மீது விதிக்கப்பட்டுள்ள 50% கடும் வரிகள், உண்மையில் வர்த்தகத்திற்காகவோ, உக்ரைன் தொடர்பாகவோ அல்ல. அது நமது உறுதியைக் குலைக்கும் நோக்கத்தில் நிகழ்த்தப்பட்ட ஒரு அரசியல் தடியடி. 21ஆம் நூற்றாண்டில் ஆசியா எழுச்சி பெறும்போது, வளர்ந்து வரும் தெற்கத்திய நாடுகளைக் கண்டு நேற்றைய வல்லரசுகள் நடுங்குகின்றன. இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு; கட்டமைப்பாளர்களையும் கண்டுபிடிப்பாளர்களையும் கொண்ட ஒரு நாகரிகம். இந்தியாவுக்கும் அதன் பெருமைமிக்க குடிமக்களுக்கும் எரிசக்திப் பாதுகாப்பை உறுதி செய்வதில் உள்ள நமது உறுதி விலை மதிப்பற்றது.
அமெரிக்கா இதேபோல் பெய்ஜிங்கை நெருக்குவதற்கு துணிவதில்லை, ஏனென்றால் சீனா முக்கியமான விநியோகச் சங்கிலிகளில் தற்போது தன்னிறைவு பெற்றுள்ளது. 21 ஆம் நூற்றாண்டின் முக்கிய ஆதாரங்களான அபூர்வ கனிமங்கள், காந்தங்கள், சூரிய மின்சக்தி உற்பத்திக்கான பேனல்கள், லித்தியம் பேட்டரிகள் போன்றவற்றை பெய்ஜிங் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அமெரிக்கா அவற்றைச் சார்ந்திருக்கிறது, இந்த சார்புநிலை தான் அவர்களைக் கட்டுப்படுத்துகிறது. சீனாவுக்கு எதிரான வரிகள் மயிலிரகால் வருடுவது போலவும், அரைகுறையாகவும் விதிக்கப்படுகின்றன, ஆனால் இந்தியாவின் மீது சுத்தியல் கொண்டு அடிப்பதுபோல் முழு வலிமையோடு வரிகள் விதிக்கப்படுகின்றன. மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி நள்ளிரவு நேரத்தில் நமக்கு நினைவூட்டிய பாடம் இதுதான்: தற்சார்பு (ஆத்மநிர்பர்தா) என்பது ஒரு முழக்கம் அல்ல; அது நமது எதிர்காலத்திற்கான ஒரு பாதுகாப்புக் கேடயம்.
நமது ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை ஏற்றுமதியின் இதயத் துடிப்பான திருப்பூர், சூரத் மற்றும் நொய்டாவில் உள்ள என் சகோதரர்களுடன், இந்தியாவை உலகின் முன்னணி இறால் ஏற்றுமதியாளராக மாற்றிய ஆந்திரப் பிரதேச இறால் விவசாயிகளுடன், குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள ரத்தினங்கள் மற்றும் ஆபரணத் தொழிலில் உள்ள நம் சகோதரர்களுடன் நான் துணை நிற்கிறேன். மேலும், நமது பொருளாதாரத்தின் முதுகெலும்பை உருவாக்கிய எஃகுத் தொழிலாளர்களுடனும் நான் துணை நிற்கிறேன். இந்த உலக அரசியலின் விளையாட்டுகளின் விளைவை அவர்கள் சுமக்கக் கூடாது.
இது நாம் அனைவரும் தேசிய ஒற்றுமையுடன் நிற்க வேண்டிய தருணம். நமது கருத்து வேறுபாடுகள் ஒரு பக்கம் இருக்கட்டும்; நமது குடியரசு ஒற்றுமையாக நிலைக்க வேண்டும். இந்தியர்களின் வாழ்வாதாரமே அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் போது, முழு தேசமும் ஒன்றாகச் செயல்பட வேண்டும். பின்வரும் நடவடிக்கைகளின் மூலம் மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்:
அவசர கால உதவி: சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் (MSME) கடன் தவணைகளைச் செலுத்த இரண்டு ஆண்டுகள் அவகாசம் வழங்க வேண்டும். மேலும், ஒரு சிறப்பு அவசர கால கடன் வசதியை ஏற்படுத்த வேண்டும்.
குறைந்த வட்டியில் மூலதனம்: ஏற்றுமதியாளர்கள் எளிதாகவும் குறைந்த செலவிலும் கடன் பெறுவதற்கு கடன் உத்தரவாதத்தை விரிவுபடுத்தி, குறைந்த வட்டியில் ஏற்றுமதிக் கடன்களை மீண்டும் வழங்க வேண்டும்.
கைகளில் பணப்புழக்கம்: ஏற்றுமதியாளர்களுக்குத் தரவேண்டிய, நிலுவையில் உள்ள அனைத்து ஜிஎஸ்டி மற்றும் இதர ஏற்றுமதி ஊக்கத்தொகையும் (RoDTEP, RoSCTL) கண்டிப்பான காலக்கெடுவுக்குள் திருப்பித் தர வேண்டும். கடுமையாக பாதிக்கப்பட்ட ஏற்றுமதித் துறைகளுக்கான ஊக்கத்தொகையை அதிகரிக்க வேண்டும்.
செலவினங்களில் நிவாரணம்: ஏற்றுமதியாளர்களுக்கான தற்காலிக மின் கட்டணச் சலுகைகள், புதிய சந்தைகளுக்குச் செல்ல சரக்குக் கட்டணத்தில் ஆதரவு, மற்றும் செயற்கை நூல்களை இறக்குமதி செய்வதற்கான விதிமுறைகளைத் தளர்த்த வேண்டும்.
ஒரே தேசம், எளிய வழிமுறை: ஏற்றுமதி விதிமுறைகள் மற்றும் பணத்தைத் திரும்பப் பெறுவதற்கு ஒரே ஒரு விரைவான வழிமுறையை உருவாக்க வேண்டும்.
சந்தைகளைப் பன்முகப்படுத்துதல்: பாதிக்கப்பட்ட துறைகள் புதிய உலகச் சந்தைகளில் நுழையும் வழிகளைக் கண்டறிந்து, அதற்கு உதவ வேண்டும்.
ஆனால், இதை ஒரு நெருக்கடி மேலாண்மை என்ற மட்டத்தில் மட்டும் நாம் கருத வேண்டாம். அபூர்வ கனிமங்கள், செமிகண்டக்டர்கள், பேட்டரிகள், பவர் எலக்ட்ரானிக்ஸ், மற்றும் மேம்பட்ட ஜவுளி போன்ற எதிர்காலத் விநியோகச் சங்கிலிகளில் இந்திய தேசத்தின் இடத்தைப் பாதுகாக்கும் பத்தாண்டு கால லட்சியப் பயணத்திற்கான நமது அறைகூவலாக இது இருக்க வேண்டும். அப்போது, அப்போது மட்டுமே, இந்தியா கடல் கடந்து வரும் சுங்க வரிகளுக்கும் மிரட்டல்களுக்கும் அப்பாற்பட்டதாக இருக்கும்.
இந்திய தேசத்திற்கு நீண்ட நினைவாற்றல் உண்டு. பாரதத் தாய் தன் நண்பர்களை செயல்களால் மட்டுமே நினைவில் கொள்கிறாள், வெறும் வார்த்தைகளால் அல்ல. வரலாற்றின் இந்த முக்கியத் திருப்பத்தை நாம் ஒற்றுமை, தைரியம் மற்றும் தொலைநோக்குப் பார்வையுடன் எதிர்கொள்வோம். இந்தியாவை முன்னிலைப்படுத்துவதற்காக இந்தியக் குடியரசும் அதன் குடிமக்களும் யாரிடமிருந்தும் பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. இந்தியாவின் ஆன்மா பேரரசுகளை விட வலிமையானது. அது இந்தச் சுங்க வரிகளையும் கடந்து நிற்கும்.
அடங்க மறுக்கும் துணிவுடன், அசைக்க முடியாத உறுதியுடன், என் மக்கள் மீதான பேரன்புடன்,
கமல் ஹாசன்.
நன்றி : தலைவர் கமல்ஹாசன் அவர்கள் & மக்கள் நீதி மய்யம்