சென்னை ஜூலை 15, 2022
“சேலம் பெரியார் பல்கலைக்கழக முதுகலை வரலாறு பருவத்தேர்வு வினாத்தாளில், 4 சாதிப் பிரிவுகளைக் குறிப்பிட்டு, தமிழகத்தில் எது தாழ்ந்த சாதி என்று கேட்கப்பட்டுள்ளது கடும் கண்டனத்துக்குரியது. சாதிப் பிரிவுகள் கூடாது என்று கற்றுத்தர வேண்டியவர்களே சாதியை முன்னிலைப்படுத்தி கேள்வி கேட்கலாமா ?
அதுவும், வாழ்நாள் முழுவதும் சாதிக்கு எதிராகப் போராடிய தந்தை பெரியாரின் பெயரில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தில், விஷமத்தனமான கேள்வியால் மாணவர்கள் நெஞ்சில் நஞ்சைத் தூவ முயற்சிப்பது ஏற்கத்தக்கதல்ல. இனியும் இதுபோல நேரிடாமல் இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் கடும் நடவடிக்கைகள் அவசியம்” – மக்கள் நீதி மய்யம்
கிட்டத்தட்ட பல ஆண்டுகளாக நாங்கள் தான் சமூக நீதியின் காவலர்கள் என்றும் பட்டியல் இனத்தவர்களுக்கான அனைத்து தேவைகளையும் அவர்களுக்கான உரிமைகளையும் பெற்றுத் தந்தது எமது கழகம் என்றும் மார் தட்டிக் கொண்டு வந்த கட்சி ஆட்சி அமைத்தும் இன்னும் ஒரு படி மேலே சென்று நரிக்குறவர் வீடுகளில் அலைபேசியில் வீடியோ கால் பேசிக்கொண்டு அவர்களின் வீடுகளில் கேமரா சகிதம் நுழைந்து தேநீர் அருந்துவதும் மாமிச உணவுகள் உண்டும் தங்கள் இருப்பை தக்க வைப்பதும் சமூக நீதிக்கு மாண்பு செய்யும் மனிதர்களாக உருவகப்படுத்தி வருவதும் அனைவரும் அறிந்ததே.
ஆனால் அவற்றையெல்லாம் தட்டி தவிடு பொடியாக்கும் நிகழ்வு ஒன்று அனைவரும் சமம் என்று தமது வாழ்நாள் முழுதும் இடுப்பில் சிறுநீர்ப்பை சுமந்தபடி இறப்பின் வரையில் போராடிய தந்தை பெரியார் பெயரிலான பல்கலைகழகத்தின் பாடத்தில் அமைத்த கேள்வித்தாளில் நான்கு சாதிகளைக் குறிப்பிட்டு இவற்றில் எது மிகவும் தாழ்ந்த நிலை கொண்ட சாதி எனும் விஷமத்தனமான கேள்வியை முன்வைத்து மாணவர்களிடையே பெரும் நஞ்சை விதைக்கும் பெருவெளியை உண்டாக்கி வைத்துள்ள வினாத்தாள் தயாரித்த குழுவினரையும் அதை மிகக் கூர்மையாக கவனித்து நீக்காமல் விட்ட சம்பந்தப்பட்ட துறையினரையும் வன்மையாக தனது கண்டனத்தை தெரிவிக்கிறது மக்கள் நீதி மய்யம்.