சென்னை – செப்டம்பர் 27, 2022

2021 ஆம் ஆண்டில் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த திராவிட முன்னேற்றக் கழகம்.

வந்த புதிதில் பல திட்டங்களை அள்ளி வீசினார் முதல்வர் ஸ்டாலின் அவர்கள்.

அப்படி உறுதியளித்த திட்டங்களில் ஒன்று மழை நீர் வடிகால். முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் மழையினால் வெள்ளக்காடானது தமிழகம் குறிப்பாக சென்னையின் தாழ்வான பகுதிகளும் புறநகரான தாம்பரம் வேளச்சேரி மடிப்பாக்கம் பள்ளிக்கரணை, சோழிங்கநல்லூர் போன்ற பகுதிகளில் சுழ்ந்த மழை நீர் வடிவதற்கு பல நாட்களானதை கிண்டல் அடித்த அப்போதைய எதிர்கட்சியான திமுக ஆட்சிக்கு வந்த பின்னும் அதே நிலையே தொடர்ந்தது.

ஆட்சி மாற்றம் அடைந்து பின்னர் சரியான முன்னேற்பாடுகள் செய்ய எங்களுக்கு போதிய நேரம் இல்லை எனவும் அடுத்த ஆண்டு பருவமழைக்கு முன்னதாகவே மழை நீர் வடிகால்கள் முழுமையாக அமைக்கப்பட்டு விடும் என்றார்கள் திமுக ஆட்சியாளர்கள்.

ஆயினும் மெலிதாக பெய்த மழையினால் மட்டுமே சென்னையின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. சிங்காரச் சென்னை தள்ளாடத் துவங்கியது. அதிலும் முக்கிய சாலைகளில் வடிகால் கட்டுவதற்காக பள்ளம் தோண்டப்பட்டு வந்த பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால் வாகனங்கள் சென்று வருவதிலும் பாதசாரிகள் வெட்டப்பட்ட வடிகால் பள்ளங்களுக்கு அருகில் கடக்க வேண்டி இருப்பதால் அங்கே சென்ட்ரிங் போடப்பட்ட நிலையில் இரும்புக் கம்பிகள் அபாயகரமாக நீட்டிக் கொண்டுள்ளது அச்சத்தை உண்டாக்கி வருகிறது.

மிகத் தாமதமாக துவங்கிய மழை நீர் வடிகால் கட்டும் பணிகள் தாமதமாகி வருவதால் விரைவில் துவங்க விருக்கும் பருவ மழை எந்த பச்சாதாபமும் பார்க்காது.

எந்த முன்னேற்பாடுகளையும் செய்யாமல் வீணாக காலத்தைப் போக்கிவிட்டதாக தெரிகிறது.

இதைப் பற்றிய விரிவான காரணங்களை இன்று ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாதத்தின் போது மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில செயலாளர் திரு செந்தில் ஆறுமுகம் அவர்கள் தெளிவாக விளக்கிக் கூறியுள்ளார்.