கோவை : அக்டோபர் 03, 2022

தூய்மைப் பணியாளர்கள் என்போர் ஒவ்வொரு நகரத்திற்கும் அடிநாதமாக விளங்கக்கூடிய மேன்மையான மக்களாவர்.

பொழுது விடியக் காத்திருந்து கூவும் சேவல்களுக்கும் முன்னதாக கூட இவர்கள் தெருக்களில் தங்கள் தடங்களை பதிக்கத் துவங்குவார்கள். கைகளில் தூய்மையை தரும் உபகரணங்கள் பரபரவென கழிவுகளை, குப்பைகளை, தூசுகளை, சாக்கடைகளை சேகரித்து அவற்றை அப்புறப்படுத்தி சுத்தமும் சுகாதாரமும் ஒரு சேர தந்து பின் தங்கள் வீடுகளை அடைகிறார்கள். அதுவும் சரியான உணவும் இல்லாமல், பாதுகாப்பு உபகரணங்கள் ஏதும் இல்லாமல். அபாயகரமான கழிவுகளைக் கூட இவர்கள் வெறும் கைகளில் மட்டுமே அப்புறப்படுத்துவது அவர்களது உயிருக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும் கூட ஆபத்தை விளைவிக்கக் கூடும்.

ஆள நினைக்கும் ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தேர்தல் நேரங்களில் மட்டும் இவர்களின் நலன் மீது அக்கறை செலுத்துவதைப் போல் நடிப்பார்கள் வாக்குறுதிகள் அள்ளித் தருவார்கள். ஆட்சிக்கு வந்த பின் இவர்களின் கோரிக்கைகள் கூட அதே குப்பைக் கூடங்களுக்கும் கூடப் போய்ச்சேரும்.

பெரு நகர மாநகராட்சிகள், மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் என அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் தூய்மைப் பணியாளர்கள் தேவைகளுக்கேற்ப நியமனம் செய்யப்படவும் அல்லது ஓர் நிறுவனம் மூலம் ஒப்பந்தப் பணியாளர்களாக அமர்த்தப்படுவதும் நடைமுறையில் இருந்து வருகிறது. அது போல் மாநகராட்சிகளில் தனியார் நிறுவனத்திற்கு டெண்டர் விடப்பட்டு பொருந்தக்கூடிய விதிமுறைகளுடன் டெண்டர்களில் தேர்வு செய்யப்படும் அந்நிறுவனங்கள் தூய்மைப் பணியாளர்களை பணியமர்த்திக் கொள்வார்கள். அவ்வாறு ஒப்பந்தம் மூலம் பணி நியமனம் செய்யப்படும் பணியாளர்கள் நிரந்தரம் செய்யப்படுவதில்லை. அரசு உள்ளாட்சி துறை மூலம் இது போன்ற மாநகராட்சி நிர்வாகங்களுக்கு அதன் மேற்பார்வையில் செயல்படும் தனியார் நிறுவனத்தின் ஒப்பந்தப் பணியாளர்களுக்கு என குறிப்பிட்ட தொகையை நாள் ஒன்றுக்கு என நிர்ணயம் செய்துள்ளது. அந்தத் தொகையை மட்டுமே தவறாமல் எந்த முறைகேடுகளும் செய்யப்படாமல் தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பது விதிமுறைகளில் ஒன்று.

ஆனால் இங்கு தான் அதில் முதல் முறைகேடு துவங்குகிறது அவ்வாறு அரசு நிர்ணயம் செய்துள்ள ஊதியத்தை டெண்டர் எடுத்துள்ள தனியார் நிறுவனங்கள் வழங்குவதில்லை என்பது தெளிவாக தெரியவருகிறது. அப்படி தில்லுமுல்லு செயல்கள் கோயம்புத்தூர் மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியில் உள்ள ஒப்பந்தப் பணியாளர்களுக்கு நடந்து வருகிறது. அரசு ஓர் நாள் ஊதியமாக வழங்க உத்தரவிட்டுள்ள தொகை நாள் ஒன்றுக்கு ரூ.721 ஆனால் அந்த ஒப்பந்தாரர் ஆன தனியார் நிறுவனம் 50% குறைவாக அங்கே பணிபுரியும் ஊழியர்களுக்கு நாள் ஒன்றுக்கு ஊதியமாக ரூ.323 மட்டுமே அளிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. ஒவ்வொரு நாளும் டன் கணக்கில் சேகரம் ஆகும் குப்பை கூளங்கள், கழிவுநீர் கால்வாய்களில் சுத்தம் செய்து தூர் வாருதல் போன்ற பணிகளை செய்து வருகிறார்கள். சுமார் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக வெறும் ஒப்பந்தப் பணியாளர்களாகவே பணிபுரிந்து வருகின்றனர் என்பதும் கொடுமை.

பணியாளர்கள் வசித்து வந்த உக்கடம், வெரைட்டி ஹால் சாலை, சித்தா புதூர் ஹவ்சிங் யூனிட் போன்ற பகுதிகளில் இருந்த தூய்மைப் பணியாளர்களின் வீடுகளை இடித்து விட்டதால் இன்னமும் புதிய வீடுகளை அவர்களுக்கு கட்டித் தரவில்லை. எனவே விரைந்து நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு வீடுகள் சரியான முறையில் தரமான வகையில் கட்டித் தரப்படவேண்டும்.

பணியாளர்களுக்கு தரமான சீருடைகள், ஒளிரக்கூடிய வகையிலான (Reflection ஓவர் கோட் எனப்படும் இரவு நேரங்களில் பணிபுரியும் போது இவர்களின் மீது வாகனங்கள் ஏதும் மோதிவிடாமல் இருக்கச் செய்யும்) ஜாக்கெட்கள், கையுறைகள், முகக்கவசம், பூட் போன்ற காலணிகள், கிருமி நாசினிகள், குளிர்காலங்களில், மழைக்காலங்களில் பணி செய்யும்போது அதற்காக தடுப்பு உடைகள் மற்றும் தரச்சான்று வழங்கப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் யாவும் போதுமான அளவில் வழங்கப்படவேண்டும். அவை மட்டுமல்லாமல் வெள்ளலூரில் மாநகராட்சிப் பணியாளர்களுக்கென அடுக்கு மாடி குடியிருப்புகள் தரமானதாக கட்டித் தரப்பட வேண்டும்.

பணியில் இருக்கும் போதே உயிரிழக்கும் ஊழியர்களின் வாரிசுகள் முறையான கல்வியறிவும் பட்டப் படிப்புகளை பூர்த்தி செய்திருந்தாலும் அவர்களுக்கு அதே தூய்மைப் பணிகளுமே வழங்கப்படுகிறதே தவிர தகுதிக்கேற்ப உயர்ந்த பதவிகள் வழங்கப்படுவதில்லை இந்த முறைகளை நிச்சயம் மாற்ற வேண்டும்.

இதுபோன்ற முக்கியமான கோரிக்கைகள் அவர்களின் வாழ்வாதாரங்களை மேன்மைப் படுத்தும் வகையில் இருப்பதால் அவற்றை பரிசீலனை செய்து விரைவில் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும் என்று அழுத்தம் திருத்தமாக தனது கருத்துகளை ஆலோசனைகளை முன் வைக்கிறது மக்கள் நீதி மய்யம்.

நம் நகரங்களை பளபளக்கும் சிங்கப்பூர் ஆக்குவேன் எனும் தேவையற்ற மேல்பூச்சு பூசப்பட்ட வாக்குகளை தருவதை விட்டுவிட்டு தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் நேரம் காலம் பார்க்காமல் சிரமத்தை பொருட்படுத்தாமல் தங்களின் மகத்தான சேவைகளை செய்து வரும் தூய்மைப் பணியாளர்கள் தங்கள் பணிகளை நிறுத்தினார்கள் என்றால் தேங்கி விடும் குப்பை கழிவுகளை எந்த துணிகள் மூடியும் வண்ணம் பூசியும் மறைத்து விட முடியாது.

அழுக்குகளுடன் போராடும் அவர்கள் ஊதியத்திற்காக போராட்டம் ஒன்றை கையில் எடுத்துள்ளார்கள். நாடும் நகரமும் சுத்தமாக அவர்களின் கரங்களும் உடலும் அழுக்காக்கிக் கொள்ளும் அவர்களின் கோரிக்கைகள் எதையும் பொருட்படுத்தாமல் விட்டீர்களானால் நாடும் அதனால் ஆட்சியின் பெயரும் கெடும்.

“நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் வழங்காமல் வஞ்சிக்கப்படும் தூய்மைப் பணியாளர்கள் ! வேலை நிறுத்தத்தை கண்டுகொள்ளாத தமிழக அரசுக்கு ம.நீ.ம கடும் கண்டனம். உடனடியாக கோரிக்கைகளை நிறைவேற்றி கண்ணீரைத் துடைக்க வேண்டும்.” – தலைவர் திரு கமல் ஹாசன் அவர்களின் அறிக்கை

https://fb.watch/fWuiVY_bhS/

நகரமெங்கும் குவிந்து கிடக்கும் கழிவுகள் (புகைப்படங்கள்)

https://simplicity.in/coimbatore/english/photostories/7588/Sanitation-workers-of-Coimbatore-Municipal-Corporation-submitted-a-memorandum-in-front-of-a-statue-of-Mahatma-Gandhi-and-began-their-protest-demanding-a-hike-in-wages-Theyre-slated-to-go-on-continuous-protest-and-strike-from-tomorrow-Location-Corporations-main-office

https://www.thehindu.com/news/cities/Coimbatore/conservancy-workers-across-coimbatore-district-to-go-on-an-indefinite-strike/article65959114.ece

https://tamil.news18.com/coimbatore/indefinite-strike-by-coimbatore-sanitation-workers-811631.html

தூய்மைப் பணியாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் குறித்து மாநகர மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையர் முன்னிலையில் கலந்தாலோசிக்க பட்டது. இதன் தொடர்பாக தூய்மைப் பணியாளர் ஊதிய உயர்வு குறித்து விரைவில் மாமன்றத்தில் உரிய தீர்மானம் கொண்டு வந்து அதனை அரசின் பார்வைக்கு அனுப்பி வைத்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் அவர்கள் கையொப்பமிட்ட ஒப்புகை சீட்டு வெளியிடப்பட்டு உள்ளது. (அதன் நகல் கீழே)

https://www.newindianexpress.com/states/tamil-nadu/2022/sep/29/sanitary-workers-strike-from-october-2-in-coimbatore-2502962.html

தூய்மைப் பணியாளர்கள் நடத்திய போராட்டத்திற்கு ஆதரவு தந்த மக்கள் நீதி மய்யம் தலைவர் அவர்களுக்கு நன்றி சொன்ன பணியாளர்கள்.
தூய்மைப் பணியாளர் நன்றி சொன்ன காணொளியை பகிர்ந்த தலைவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.