நாகப்பட்டினம் : மார்ச் 13, 2023
கடலின் சீற்றம் மீதே அல்லாடும் படகுகளை செலுத்தி உத்திரவாதமில்லா வாழ்க்கையில் உழன்று கொண்டிருக்கும் மீனவர்களின் நிலை சொல்லி மாளாதது. பருவநிலை மாற்றம், மீன் பிடி தடைக்காலம், புயல் போன்ற இயற்கைச் சீற்றங்களில் ஒருவேளை உணவுக்கே வழி இல்லாமல் போகும்.
இப்படி சிக்கல் நிறைந்த வாழ்க்கைய வாழும் மீனவர்களை மீன்பிடிக்கச் செல்கையில் எல்லைக் கோடுகளை கடந்துவிட்டதாக சொல்லி சில சமையங்களில் விசைப்படகுகளை சேதப்படுத்தியும் வலைகளை அறுத்து எறிந்து அதையும் கடந்து அவர்களை கைது செய்து சிறையில் அடைப்பது இன்னும் உச்சகட்டமாக கண்மூடித்தனமாக சுட்டுக் கொள்வது என வெறித்தனமாக நடந்து கொள்ளும் இலங்கை கடலோர காவல்படை.
இவற்றை சுட்டிக்காட்டி பலமுறை தமிழக அரசுகள் மத்திய அரசிற்கு கடிதங்கள் எழுப்பியும் தொடர்பு கொண்டும் நிலைமையை வெளியுறவுத்துறை மூலமாக விளக்கி கூறியும் இன்னமும் அதே போன்ற அழிச்சாட்டியங்கள் தொடர்ச்சியாக நடந்து கொண்டு தான் இருக்கிறது என்பதற்கு இன்னுமொரு சாட்சியாக நாகப்பட்டினம் சேர்ந்த அக்கரைப்பேட்டை மீனவர்கள் 12 பேரை கோடியக்கரை அருகே கைது செய்துள்ளனர் இலங்கை கடற்படையினர். இதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த 4 மீனவர்களையும் கைது செய்துள்ளது இலங்கை கடற்படை.
இது போல எண்ணிலடங்கா முறை மீனவர்களை கைது செய்வதும் அவர்களுடைய வாழ்வாதாரமான மீன்பிடி படகுகள் மற்றும் பொருட்களை சேதம் செய்து அவர்களின் நிலையை இன்னும் கேள்விக்குறியாக்கி வரும் இலங்கை கடற்படையினரை கண்டிக்கவும் தொடரும் இது போன்ற அவலங்களை தடுத்தும் போதுமான நடவடிக்கைகள் எடுக்குமாறு மத்திய அரசினை கேட்டுக் கொள்கிறது மக்கள் நீதி மய்யம்.
இலங்கை கடற்படையினரால் 24 தமிழக மீனவர்கள் கைது: மக்கள் நீதி மய்யம் கண்டனம்! – கூடல் | Tamil Koodal