ஈரோடு : மார்ச் 29, 2024
அடுத்த மாதம் நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் இண்டியா கூட்டணியுடன் இணைந்துள்ள மக்கள் நீதி மய்யம், நாட்டில் நடக்கும் அறமற்ற பாசிச ஆட்சியை அகற்றிட முனைந்துள்ளது மதச்சார்பற்ற கூட்டணி.
இந்தப் போரில் ஜனநாயகம் வென்றிட, தாறுமாறாக சிதைந்து நிற்கும் கட்டமைப்பை மீண்டும் சீர்தூக்கி சமன் செய்திட, அடக்குமுறை ஆட்சியையும் பாராளுமன்ற அவையில் இருந்து அகற்றிட ஒன்றிணைந்து நிற்கும் நாம் உறுதியுடன் பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம். அத்தகைய மாற்றம் வரவே நானும் எந்த பிரதிபலனும் பாராமலும் சுயநலம் பார்க்காமல் நாட்டின் நலனுக்காக தேர்தலில் போட்டியிடாமல் கூட்டணி வேட்பாளர்களுக்கு பிரச்சாரம் செய்து வாக்கு சேகரிக்க ஈரோட்டில் இருந்து என் பயணத்தை துவக்கியுள்ளேன் என்று பேசத் துவங்கினார் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள்.
மாநிலங்கள் மீதான ஒன்றிய அரசின் மாற்றாந்தாய் போக்கினை பல கட்டங்களில் எடுத்துரைத்தார், அதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டின் வழியாக செலுத்தப்படும் வரி ஒரு ரூபாய் பெற்றுக் கொண்டு அதிலிருந்து வெறும் 29 காசுகளை மட்டுமே திரும்பத் தருகிறது ஒன்றிய அரசு. மாநிலத்தின் வளர்ச்சிக்காக சொற்பத் நிதியை வைத்துக்கொண்டு என்ன செய்துவிட முடியும் என்கிற அக்கறை கொஞ்சமும் இல்லாமல் வரும் ஒன்றிய அரசு தனது அதிகாரத்தை இழந்து நிற்கும் நாள் வெகு விரைவில் வரவிருக்கிறது அதற்கான வழிகாட்டல் இந்த தேர்தல் பிரச்சாரம் என்றார்.
“நாம் வரியாகச் செலுத்தும் 1 ரூபாயில் வெறும் 29 பைசாவை மட்டுமே தமிழகத்திற்குத் திருப்பித் தருகிறது மத்திய அரசு. பாஜக ஆளும் மாநிலங்களுக்குப் பெருமளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அந்தப் பணத்தைக் கொண்டு வட மாநிலங்களை முன்னேற்றி இருந்தால் கூட, ‘சரி நம் இந்தியச் சகோதரர்களுக்குத்தானே நமது பணம் போய்ச் சேருகிறது’ என சமாதானப் பட்டுக்கொள்ளலாம். அதைச் செய்யும் திறமையும் இல்லை. ஒவ்வொரு நாளும் வாழ்வாதாரம் தேடி ஆயிரக்கணக்கான வட இந்தியத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டிற்கு வந்தபடியே இருக்கிறார்கள். எங்கள் வரிப்பணம் எங்கேதான் போகிறது எனும் கேள்வியை ஈரோடு கருங்கல்பாளையத்தில் திமுக வேட்பாளர் திரு.K.E. பிரகாஷ் அவர்களுக்கு வாக்குச் சேகரிக்கையில் கேட்டேன். ஏப்ரல் 19 – தேர்தல் நாளன்று உதயசூரியன் சின்னத்தில் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்து ஈரோட்டு மக்களும் அந்தக் கேள்வியைக் கேட்பார்கள்.” – திரு.கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம்