ஏப்ரல் : 14, 2024

இந்திய சட்ட மாமேதை அண்ணல் டாக்டர் பாபா சாஹேப் B.R. அம்பேத்கர் அவர்களின் 133 ஆவது பிறந்தநாள் விழா இன்று நமது நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் பல தலைவர்கள் மேதைகள் உட்பட அனைவரும் தமது வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார்கள். மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் பாபா சாஹேப் மீது பெரும் அன்பு மதிப்பும் கொண்டவர். அவருடைய பெரும் முயற்சிகளால் தான் கடைக்கோடியில் உள்ள சாமான்யனும் அரசு பதவிகளில் குறிப்பாக நாட்டின் உச்சபட்ச அரசியல் அதிகாரம் கொண்ட எந்த பதவியிலும் ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்டு அமரலாம் என்கிற சட்டதிட்டத்தை நமது இந்திய அரசியல் சாசனத்தில் இடம்பெறச் செய்து நீங்காப் புகழை பெற்றுவிட்டார் என்று பெரிதும் நம்புபவர். அத்தகைய அருந்தலைவர் பிறந்தநாளில் தமது அழகிய தமிழில் சிறந்த வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.

“பரந்துபட்ட இந்திய சமுதாயம் விடுதலை பெற்ற கையோடு மதத்தாலும் சாதிச் சழக்காலும் மூச்சுமுட்டிக் கிடந்தபோது தெளிவிக்க வந்த தென்றல்; மனிதருள் சமத்துவம் பேணும் பேச்சைத் தொடங்கிய அண்ணல்; அதை அரசியல் சாசனம் என்று ஆதாரமாகச் செய்தும் வைத்த பெருமகன் பாபா சாகேப் அம்பேத்கர். மறுபடி சாதிப் பேச்சுகள் தொடங்கியிருக்கும் இந்நேரத்தில் அவரது தேவை முன்னெப்போதையும்விட கூடுதலாக உள்ளது. அவர்தம் பிறந்த நாளான இன்று அவருடைய சிந்தனையை மறுபடி கையிலெடுப்போம். அண்ணல் பாதையை அனைவருக்குமான பாதையாக ஆக்கிக்கொள்வோம்.”திரு.கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம்

#Ambedkar