கோவை ஜூலை 27, 2022

“சாத்தியம் என்பது சொல் அல்ல : செயல்” – தலைவர் திரு கமல் ஹாசன்

ஒவ்வொரு சந்திப்பிலும் தலைவர் அவர்கள் இப்படித் தான் சொல்வார். “என்னால் இயன்றதை செயலாக்க முனைகிறேன் நீங்களும் அவ்வாறே முனைந்திட்டால் என் தொண்டரென ரசிகரென பெருமிதம் கொள்வேன் என்றும் அதை மகிழ்ச்சி பொங்க சொல்வேன்” எனும் தலைவரின் கூற்றுப்படி ரசிகர்களும் தொண்டர்களும் அவர்களால் இயன்றவரையில் பயனாளிகளுக்கு தேவை எதுவோ அதை குறையில்லாமல் செவ்வனே செய்து தருகிறார்கள் என்றால் மிகையாகாது.

எந்த ஆற்றலும் வீணாகிவிடக் கூடாது அது உடல் வலிமை கொண்டு ஆடும் வியாளையட்டோ, புத்திக்கூர்மையுடன் முன்னேறத் துடிக்கும் கல்வியோ என எதுவாக இருப்பினும் தேவையான உதவிகளை தேவைப்படுபவர்களுக்கு அந்தந்த நேரத்தில் உதவி புரிந்திட வேண்டும்.

அவ்வாறான ஓர் நற்பணியை செய்து முடித்துள்ளார்கள் மக்கள் நீதி மய்யம் – சார்ந்த மய்யத்தமிழர்கள் குழுவினர்.

திரு பத்மநாதன், கோவையைச் சேர்ந்த இவர் ஓர் பளு தூக்கும் வீரர். இவருக்கு போட்டிகளில் கலந்து கொள்ள தேவையான பொருளாதார வசதிகள் குறைவாக இருந்ததை கண்டு கேட்டுணர்ந்து தக்க சமையத்தில் அவருக்கு தேவையான உதவிகளை விரைவில் செய்து தந்தார்கள் மக்கள் நீதி மய்யம் மய்யத்தமிழர்கள் குழுவினர். இதே சமையத்தில் தனக்கு அளிக்கப்பட்ட உதவியினை மிகச் சரியாக பயன்படுத்தி நடைபெற்ற போட்டிகளில் கலந்துகொண்டு மூன்று தங்கப்பதக்கங்களை வென்று இந்திய அணியில் இடம்பெறும் வகையில் தேர்ச்சி பெற்றார். மிகுந்த சிரமங்களுக்கிடையில் விடாமுயற்சியுடன் பயிற்சிகளில் ஈடுபட்டு கிடைத்த உதவிகளை உபயோகித்து கிடைத்த இந்த வெற்றியை மனதார வாழ்த்துகிறது ம.நீ.ம

“தலைவர் வழிநடந்து, கோவையை சேர்ந்த பளுதூக்கும் வீரர் திரு பத்மநாதன் அவர்களுக்கு, முடிந்த பொருளாதார உதவியை இந்திய அளவிலான போட்டியில் கலந்து கொள்ள செய்தோம்.மூன்று தங்கப்பதக்கங்களை ஜெயித்தது இல்லாமல் இந்திய அணிக்கும் தேர்வாகியுள்ளார்.”

பளு தூக்கும் போட்டியில் தங்கப்பதக்கங்கள் வென்று இந்திய அணியில் இடம்பெற தேர்ச்சி பெற்றதை முன்னிட்டு திரு பத்மநாதன் அவர்களை மக்கள் நீதி மய்யம் துணைத்தலைவர் மற்றும் மாநில செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளால் வரவேற்று வாழ்த்தி கௌரவிக்கப்பட்டார். இந்நிகழ்வில் கட்சியின் துணைத்தலைவர் திரு கோவை தங்கவேலு, மாநில செயலாளர் திரு செந்தில் ஆறுமுகம், மாநில செயலாளர் திருமதி மூகாம்பிகை ரத்தினம், மாநில செயலாளர் திரு மயில்சாமி மற்றும் மண்டல அமைப்பாளர் திரு ரங்கநாதன் மற்றும் மண்டல அமைப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் உடன் இருந்து நிகழ்ச்சியை சிறப்புற நடத்தினர். அனைவரும் வந்திருந்து சிறப்பித்தமைக்கு இந்நிகழ்வை முன்னின்று நடத்திய திரு S.P. செல்வத்தங்கம், கோவை மண்டல அமைப்பாளர் (தகவல் & தொழில்நுட்ப அணி), திரு சுதிர், மாவட்ட செயலாளர் (தகவல் & தொழிநுட்ப அணி – சோளிங்கநல்லூர்) ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.