உசிலம்பட்டி – டிசம்பர் ௦9, 2௦22

விபரீதம் நேரிடும் முன் நடவடிக்கை தேவை. பழுதடைந்த பள்ளிக் கட்டிடங்களை உடனடியாக சீரமைக்க வேண்டும். மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல். மாநில செயலாளர் திரு.செந்தில் ஆறுமுகம் அறிக்கை.

ஒரு ஊரில் கோயில்கள் இல்லாமல் கூட போகலாம் ஆனால் பள்ளிக்கூடம் இல்லாமல் போனால் தலைமுறைகள் கல்வி இல்லாமல் பாழாகக் கூடாது எனும் மேம்பட்ட எண்ணம் இருக்கும் அரசே தொடர்ந்து மக்களின் பால் அக்கறை கொள்ளும் ஆட்சியைத் தரவேண்டும்.

தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை மூலம் சுமார் 37௦௦௦ கோடி ரூபாயை பள்ளிக்கல்வி மேம்பட நிதியாக ஒதுக்கியுள்ளதாக அறிவிப்பு வெளியானது. ஒதுக்கப்பட்ட அந்த நிதியை சரியாக உபயோகப்படுத்தி உள்ளார்களா என தெரியவில்லை. அப்படி உபயோகப்படுத்த துவங்கியிருந்தால் இன்றைக்கு பல பள்ளிக்கூட கட்டிடங்கள் செப்பனிடப்பட்டு இருக்கும். ஆனால் அப்படி தரவுகள் இருந்தது எனில் அவற்றை இங்கே பிரசுரிக்க தயாராக உள்ளோம்.

தமிழகத்தின் பல மாவட்டங்களில் டவுன் மற்றும் கிராமங்களில் பல பள்ளிக்கூட கட்டிடங்கள் பெருமளவில் சேதமடைந்தும் பராமரிப்புமின்றி உள்ளதாக தெரிய வருகிறது. சில மாதங்களுக்கு முன்னர் கூட கட்டிடம் சிதிலமடைந்த காரணத்தால் பள்ளி அமைந்துள்ள வளாகத்தினுள் உள்ள மரத்தடிகளில் வகுப்புகள் நடத்தப்படுவதாக செய்திகள் வெளியானது.

நிலைமை இப்படியிருக்க தற்போது ஓர் பள்ளிக்கூடம் அபாயகரமான சூழ்நிலையில் இயங்கிவருகிறது என்பது நம் கவனத்திற்கு வந்துள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள அல்லிகுண்டம் எனும் ஊரில் ஊராட்சி ஒன்றியத்தில் இயங்கிவரும் நடுநிலை பள்ளிக்கூட கட்டிடம் பழுதடைந்துள்ளது. அக்கட்டிடம் ஆங்காங்கே இடிபாடுகளுடன் இருப்பதால் எங்கே திடீரென இடிந்து விழுந்து விடுமோ என மிகுந்த கவலையுடனும் அச்சத்துடனும் இருக்கிறார்கள் அங்கே வசிக்கும் மக்கள்.

அவ்வூர் பொதுமக்கள் யாவரும் இது குறித்து பள்ளிக்கூட கட்டிடத்தை சரிசெய்து தரும்படி அரசு நிர்வாகத்தை பல முறை கேட்டும் எந்த பயனும் இல்லாமல் காலம் கடத்தப்பட்டுக் கொண்டே வரவும் பொறுமையை இழந்த மக்கள் மற்றும் அங்கே பயிலும் மாணவ மாணவியர்கள் அனைவரும் பாழடைந்துள்ள பள்ளிக்கட்டிடத்தை புதிதாக கட்டித் தர கோரி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர்.

அவ்வூர் பொதுமக்கள் கேட்பது ஆடம்பரமான எந்த விடயமும் இல்லைஅடிப்படைத் தேவையான கல்வி அதனை கற்க வேண்டிய பள்ளிக்கூடம். இவற்றை கேட்டு கேட்டு தான் செய்து தர வேண்டும் என்று அவசியம் இல்லை. பஞ்சாயத்து போர்டு தேர்தல் மாநகராட்சி நகராட்சி தேர்தல்கள் முதல் சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றத் தேர்தல்கள் சமையங்களில் ஒவ்வொரு கிராமங்களிலும் முட்டுச் சந்து உட்பட ஒவ்வொரு தெருக்களிலும் நுழைந்து ஓட்டு சேகரிக்கும் போது கொடுக்கும் வாக்குறுதிகள் அதன் பின்னர் முற்றிலும் மறக்கப் படுவதும் அல்லது மறைக்கப்படுவதும் முற்றிலும் முரண். இதை காலம்காலமாக செய்து வருவதில் பல அரசியல்வாதிகளை அடித்துக் கொள்ள ஆளே இல்லை எனலாம்.

சரி இவர்கள் தான் இப்படி அரசு அதிகாரிகள் தமது கடமையாக கருதி செய்யவேண்டியது இது போன்ற முக்கியமான பணிகளைத் தானே அதைத் தவிர்த்து இவர்களுக்கு என்ன வேறு பணிகள் இருந்துவிடப் போகிறது. தமது அலுவலக பணி நாட்களில் செய்து முடிக்க வேண்டிய வேலைகளை மெத்தனப் போக்கில் விட்டு வைப்பது எங்கனம் முறையாகும். ஒவ்வொரு மாதமும் முதல் நாளன்று தங்களது வங்கிக் கணக்கில் சம்பளப் பணம் வந்து சேர்வதை மட்டுமே கண்ணும் கருத்துமாக வழிமேல் விழி வைத்துக் காத்திருக்கும் பணியே தலையாய பணியா என்ன ? இங்கே ஒன்றை நிச்சயம் குறிப்பிட்டாக வேண்டும். இது போன்று விட்டேத்தியாக இருந்திடாமல் தமது அலுவலில் நேர்மை தவறாது கடமை தவறாது செய்து முடிக்கும் அரசு அதிகாரிகளும் உண்டு அவர்களை நாம் எந்த குற்றமும் சாட்ட முடியாது.

ஆகமொத்தம் ஒன்றைத் தொட்டு இன்னொன்று என்பார்கள் அது போல் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இனியும் தாமதம் செய்யாமல் இப்படி பாழடைந்து கிடக்கும் பள்ளிகளைக் கணக்கெடுத்து உடனடியாக அவற்றை சரி செய்து அல்லது முற்றிலும் சிதிலமடைந்து இருந்தால் அவற்றை தகர்த்துவிட்டு புதிய தரமான கட்டிடங்களை கட்ட ஆவண செய்ய வேண்டும் எனவும் வாக்குகள் பெறுவதும் பின் செய்து கொடுத்த வாக்குறுதிகளை காற்றில் விடாமல் அப்பணிகளை விரைவில் முடித்துத் தர வேண்டும் என தங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆகியோரை கேட்டுக் கொள்கிறோம்.

அப்படிச் செய்யத் தவறினால் மக்களுக்காக மக்களால் என அரசியலில் தொடர்ந்து வரும் மக்கள் நீதி மய்யம் கேட்கும்.