ஜூன் : 27, 2025

நம்மவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் மிக நுண்ணிய உணர்வுகளை நம்முள் கடத்திச் செல்பவை. வித்தியாசமான கதைக்களங்கள், வேறுபட்ட கதாபாத்திரங்கள், அதற்குத் தகுந்த ஒப்பனைகள், மிகச் சிறந்த தொழில்நுட்பங்கள், ஒலி ஒளி அமைப்புகள் என பல்வேறு திறன்களை உள்ளடக்கிய படைப்புகள் நம்மவரால் மற்றும் அவருடன் இணைந்த தொழில்நுட்ப கலைஞர்கள் இணையபெற்று உருவாக்கப்பட்டு வெளியானவை. அவரது சில படங்கள் உலகின் உயரிய விருதுகளில் ஒன்றான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டதும் உண்டு. தான் அறிமுகமான நாளில் இருந்து இன்றுவரை வெள்ளித்திரை சினிமாவை தனது சுவாசமாக கொண்டிருக்கிறார் என்பதும் அனைவரும் அறிந்ததே. தன்னால் தான் பணியாற்றும் திரைத்துறைக்கு எத்தகைய சிறப்புகளை உருவாகித் தர இயலுமோ அவற்றுக்காக உழைத்துக் கொண்டிருப்பவர். தன்னை இயக்கியவர்கள், தன்னைச் செதுக்கியவர்கள் போக தன்னைத்தானே மேம்படுத்திக் கொள்வதில் எத்தகைய சமரசமும் கொண்டதில்லை நம்மவர் அவர்கள்.

பொருளாதார இழப்புகளை பெரும்பான்மையாக சந்தித்திருந்தாலும் அதை கொஞ்சமும் பொருட்படுத்தியதில்லை என்பதற்கு பல நிகழ்வுகள் உள்ளன. பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வெளியாகும் படம் வசூல் ரீதியாக தோல்வியைச் சந்திக்கும் எனினும் அதன் கதைக்களம் பாத்திரப்படைப்புகள் முதற்கொண்டு காட்சிகள், வசனங்கள், பாடல்கள் இசை நுணுக்கங்கள் என்று பல்வேறு சிறப்புகளை காலம்காலமாக பேச வைத்துவிடும்.

ஒரு படைப்பாளிக்கு உன்னதம் அவன் படைப்பு மட்டுமே அதனால் கிடைக்கும் பணம் என்பதை விட அந்த படைப்பு ஆண்டாண்டு காலம் பேசுபொருளாக இருப்பதும் பிற்காலத்தில் கொண்டாடப்படும் படைப்பாக விளங்குவதும் எல்லோரும் அறிந்ததே.

சினிமா கலைஞர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் எத்தனையோ பேர் பல நேர்காணல்களில் வசூல் ரீதியாக இழப்பைச் சந்தித்த படங்களையே சிலாகித்து உரையாடுவார்கள்.

“எனது படத்தின் மையப்புள்ளி, காட்சிப்படுத்தும் விதத்தை நம்மவரிடம் இருந்தும் அவரது இன்னின்ன படங்களில் இருந்தும் அது உண்டாக்கிய தாக்கத்தில் இருந்தும் நான் உள்வாங்கிக் கொண்டே இருக்கிறேன் அதுவே எனக்கு ஓர் பாடமாக அமைந்து விடுகிறது” என்று இன்றும் பல இளம் இயக்குனர்கள் பேசி வருவது இணையதளங்கள் எங்கும் காணக்கிடைக்கிறது.

நம்மவரின் கலைத்தாகம் மொழி கடந்தது. அவர் ஓர் திரைக்கலைஞர் மட்டுமல்ல மிகச்சிறந்த கதைசொல்லி, திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா, பாடலாசிரியர், நடனக்கலைஞர், நடன ஆசிரியர், ஒப்பனைக்கலைஞர், கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், இலக்கியச் சிந்தனையாளர், நேர்மையாளர், மாறுபட்டுச் சிந்திக்கும், இந்தியா முழுமைக்கும் சொந்தமான ஓர் அற்புதக் கலைஞர்.

அத்தகைய பெருமைகள் உள்ள ஒப்பற்ற கலைஞரை ஆஸ்கர் விருதுகள் வழங்கும் கவுன்சிலில் ஓர் உறுப்பினராக இணையும்படி அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. இது நமது திரையுலகிற்கு கிடைத்த பரிசு.

1965 இற்கு பிறகு உள்ள திரையுலக வரலாற்றில் நம்மவர் திரு.கமல்ஹாசன் அவர்களை குறிப்பிடாமல் இருந்து விடமுடியாது. களத்தூர் கண்ணம்மா தொடங்கி தக் லைப் வரை ஒவ்வொன்றிலும் வித்தியாச முயற்சி மேற்கொள்ளும் நம்மவர் வெள்ளித்திரையில் ஒளிரும் சாதாரண திரைப்பட நடிகரில்லை அத்தனையும் கடந்து பிரம்மிக்க வைக்கும் ஆகச்சிறந்த ஓர் ஆளுமை.

சரித்திரங்கள் புனையப்படுவதில்லை சாதனையாளர்களால் எழுத வைக்கப்படுகிறது.

கமல்ஹாசன் எனும் நான்……..

“I am honoured to join the Academy of Motion Picture Arts and Sciences. This recognition is not mine alone, it belongs to the Indian film community and the countless storytellers who shaped me. Indian cinema has so much to offer the world, and I look forward to deepening our engagement with the global film fraternity. My congratulations to my fellow artists & technicians who have joined the Academy.” – Kamal Haasan, Film Buff, Actor, Story, Screenplay, Director, Writer, Lyricist & Politician

நன்றி : திரு.கமல்ஹாசன் அவர்கள், மக்கள் நீதி மய்யம்