சென்னை செப்டெம்பர் 10, 2022

கடந்த அதிமுக ஆட்சியிலும் மற்றும் 2021 மே முதல் நடந்து வரும் திமுக ஆட்சியிலும் நீட் தேர்வு தொடர்பான தற்கொலைகள் நிகழ்ந்து வருவது கொடுஞ்செயல். தாலாட்டி சீராட்டி கண்ணருகில் வளர்க்கப்பட்ட பிள்ளைகள் பலர் நீட் தேர்வு தொடர்பாக தங்களைத் தாங்களே தற்கொலை மூலமாக மாய்த்துக் கொள்கிறார்கள். அவர்களை பெற்றவர்கள், டாக்டருக்கு படித்துப் பட்டம் பெற்று வைத்தியம் பார்க்கும் என்று கனவுகளைக் காணும் போது நீட் தேர்வு சிக்கலில் உயிரை தற்கொலையால் மாய்த்துக் கொண்டு போஸ்ட்மார்ட்டம் செய்யப்பட்டு பொட்டலமாக சுற்றித் தந்த தம் பிள்ளைகள் நம் கண் எதிரிலேயே ப்ரீசர் பெட்டிகளில் பிணமாக கிடத்தப்பட்டிருப்பதை துள்ளத் துடிக்க பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இது போன்ற மரணங்களை கேள்வியுறும் நாமும் நம் வீட்டில் நடக்காத வரை அதை ஓர் செய்தியாக கடந்து போவதும் அதற்கு சமூக வலைதளங்களில் ஒரு ஹாஷ் டேக் போட்டு கழுத்து நரம்புகள் பின்னிப் புடைக்க பேசிக் கொண்டு இருப்போம். பிறகு சிறிது காலங்கள் கழித்து அந்த மரணங்களும் அக்குழந்தைகளும் சுத்தமாக மறந்து போகும். அரசாங்கமும் சம்பந்தப்பட்ட துறை அமைச்சரை மற்றும் கட்சியின் மாவட்ட நிர்வாகிகளையும் உயிரிழந்த மாணவ மாணவியின் வீட்டிற்கு அனுப்பி சில லட்சங்களை நிவாரண தொகையாக அளித்துவிட்டு அதையும் புகைப்படம் எடுத்து அடுத்தடுத்த அரசியல் செயல்பாடுகளுக்கு உபயோகபடுத்திக் கொள்வார்கள். இப்படி நிகழும் தற்கொலைகள் பட்டியல் அடுத்த ஆண்டில் சர்வேக்களில் இன்னின்ன காலங்களில் இது போன்று தற்கொலைகள் இதற்காக நடந்துள்ளது என்ற புள்ளிவிவரங்களில் அடைந்து போகும். தேர்வு எழுதி தேர்வு பெறுவோர் பட்டியல் அளிக்கும் மகிழ்ச்சியை தேர்வில் தோல்வியுற்று அல்லது தேர்வே எழுத முடியாத சந்தர்ப்பங்களினால் தற்கொலை செய்துகொள்ளும் பிள்ளைகளின் மரணம் அடர்ந்த வலியினைத் தந்து விடும்.

இத்தகைய கொடுமையான தற்கொலை மூலம் நிகழும் மரணங்கள் யாவும் திட்டமிடாமல் மறைமுகமாக கொன்று போடும் கொலையாகவே எடுத்துக் கொள்ளவதே உண்மை.

என்று தீரும் இந்த நீட் தேர்வு குறித்தான தெளிவான சட்டப்பூர்வமான நடவடிக்கைகள், பொருளாதார வசதி குறைந்த பிள்ளைகளின் மருத்துவர் கனவுகள் கருவிலேயே கலைக்கப்படுவது எங்கனம் நியாமாகும் ?

நீட் தேர்வால் தொடரும் தற்கொலைகள். அநீதியான ‘நீட்’ தேர்வை ரத்து செய்வதே தீர்வு! மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல் – துணைத்தலைவர் திரு தங்கவேலு அவர்களின் கண்டன அறிக்கை.

CONTINUOUS SUICIDES DUE TO NEET EXAMS. UNJUST NEET EXAMS NEEDS TO BE BANNED! INSISTS MAKKAL NEEDHI MAIYAM.